எஸ்சி/ எஸ்டி பிரிவு மக்களை இந்து பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் என்றும் அவர்களை பூர்வ பௌத்தர்களாக அறிவிக்க வேண்டும் என்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் நாடாளுமன்றத்தில் இன்று கோரிக்கை வைத்தார்.
உத்தரப் பிரதேசத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட 4 மாவட்டங்களை சேர்ந்த பழங்குடியின மக்களை எஸ்டி பட்டியலில் சேர்ப்பது தொடர்பான மசோதா நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. அரசியலமைப்பு (பட்டியலிடப்பட்ட சாதிகள் மற்றும் பழங்குடியினர்) ஆணைகள் (இரண்டாவது திருத்தம்) மசோதா, 2022 (Constitution (Scheduled Castes and Scheduled Tribes) Orders (Second Amendment) Bill, 2022) என அழைக்கப்படும் மசோதா மீது பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும் எம்.பி.யுமான திருமாவளவன், எஸ்சி/ எஸ்டி மக்கள் மதமில்லா மண்ணின் மைந்தர்கள்.
இவர்களுக்கு மதமும் இல்லை சாதியும் இல்லை. ஆனால் இந்துக்கள் பெரும்பான்மை என்பதற்காக இவர்களுக்கு இந்துக்கள் என சான்றிதழ் வழங்கி வருகிறோம். இந்துக்கள் பட்டியலில் இணைந்துகொண்டிருக்கிறோம். இதுவே அந்த மக்களுக்கு செய்யும் மிகப்பெரிய துரோகம். அவர்களை பொருளாதார ரீதியில், கல்வி, வேலைவாய்ப்பில் மேம்படுத்தவும் அவர்களுக்கு இழைக்கப்படும் வன்கொடுமையில் இருந்து பாதுகாக்கவும் துளி அளவும் அக்கறை செலுத்தவில்லை.
எனவே, இவர்களை இந்துக்கள் அல்லாதவர்கள் என்று பிரகடனப்படுத்த வேண்டும். அம்பேத்கர் விரும்பியபடி, அயோதிதாசர் விரும்பியபடி இவர்கள் இந்துக்கள் இல்லை என்பதை பிரகடனப்படுத்த வேண்டும் அல்லது எஸ்சி/எஸ்டி மக்களை பூர்வ பவுத்தர்களாக அறிவிக்க அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டுவர வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இதையும் படிங்க: பெண் கவுன்சிலர்களுக்கு முக்கிய எச்சரிக்கை விடுத்த சென்னை மேயர் பிரியா
தொடர்ந்து பேசிய திருமாவளவன், பழங்குடியின மக்கள் ஜாதி சான்றிதழ் பெறுவதில் நெருக்கடியை சந்திக்கிறார்கள். கல்வி பெறுவதற்கு, வேலைவாய்ப்பு பெறுவதற்கு ஜாதி சான்றிதழை தர முடியாமல் உள்ளனர். எனவே, அவர்களுக்கு சாதி சான்றிதழ் எளிதாக கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.