1965-களில் சினிமாவில் நடிக்கத் தொடங்கி கிட்டத்தட்ட 1980 வரை பிசியான நடிகையாக இருந்த ஜெயலலிதா தான் தமிழகத்தின் முதலமைச்சராகி ஆட்சி செய்வோம் என நினைத்திருக்க மாட்டார்.
ஆனாலும் அது நடந்தது. சாதாரணமாக அல்ல. சாதனை நிகழ்வாக சரித்திரத்தில் இடம் பிடிக்கும் அளவிற்கு. அரசியலில் ஜெயலலிதா நிகழ்த்திய சாதனைகளுக்கு ஈடாக சதிகளையும் சந்தித்திருக்கிறார். அவற்றையெல்லாம் கடந்து வந்ததால் தான் தமிழக அரசியலின் இரும்பு பெண்மணி எனப் போற்றப்படுகிறார்.
முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரோடு ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தில் தொடங்கி பட்டிக்காட்டு பொன்னையா வரை 28 திரைப்படங்களில் ஜோடியாக நடத்தவர் ஜெயலலிதா. அந்த நட்பு தான் அவரை அரசியலுக்கு அழைத்து வந்தது. எம்.ஜி.ஆரின் மறைவிற்குப் பிறகு கிட்டத்தட்ட அதிமுகவில் இருந்து ஓரங்கட்டப்பட்டார். அதிமுக இரண்டாக உடைந்தது. ஜெயலலிதாவின் அரசியல் வாழ்வு அஸ்தமனமாகிவிட்டது என அனைவரும் நினைத்தார்கள். ஆனால் ஃபீனிக்ஸ் பறவையாய் மீண்டெழுந்தார். தமிழகத்தின் பெண் சாணக்கியர் எனலாம் ஜெயலலிதாவை.
ஆம் எந்த சட்டமன்றத்தில் எதிர்க்கட்சிகளால் தான் அவமானப்பட்டோமோ, அந்த சட்டமன்றத்திற்குள் முதலமைச்சராகத் தான் நுழைவேன் என வைராக்கியத்தோடு சாதித்துக் காட்டியவர் ஜெயலலிதா.
ஒரு நடிகையின் மகளாக இருந்த போதும், தானே நடிகையாக நடிக்கத் தொடங்கியபோதும், அரசியலில் அடி எடுத்து வைத்த போதும் ஜெயலலிதாவிற்கு கிடைத்தவை எல்லாம் வரவேற்பு வாக்கியங்கள் அல்ல. வசவுகளும், பரிகாசமும் தான். ஆனால் அவற்றையெல்லாம் தடைக்கற்களாக பார்க்காமல் படிக்கற்களாக மாற்றியது தான் ஜெயலலிதாவின் சாமர்த்தியம்.
சிறு வயதிலேயே ஜெயலலிதாவிடம் ஒரு பழக்கம் இருந்ததாம். தன்னை கிண்டல் செய்பவர்களிடம் வாக்குவாதம் செய்ய மாட்டாராம். எதற்காக தன்னை கிண்டல் செய்தார்களோ அதிலேயே முதலிடம் பிடித்து கிண்டல் செய்தவர்களையே பாராட்ட வைப்பாராம். அரசியலிலும் அப்படித் தானே. தன்னை எள்ளி நகையாடியவர்களுக்கெல்லாம் பிரம்மாண்ட வெற்றியால் எத்தனை முறை பதில் சொல்லியிருப்பார்.
அரசியலில் ஜெயலலிதா சாதித்த சாதனைகள் ஏராளம். முதலமைச்சராக பதவியேற்று பெண்கள், பெண் குழந்தைகள் முன்னேற்றத்திற்காக பல திட்டங்களை நிறைவேற்றியுள்ளார். தொட்டில் குழந்தை திட்டம், பெண்குழந்தை பாதுகாப்பு திட்டம், திருமண உதவித் திட்டம், மகப்பேறு உதவித்திட்டம், பாலூட்டும் மகளிருக்கு பொது இடங்களில் தனி அறை, பெண்களுக்கான கல்பனா சாவ்லா விருது வழங்கும் திட்டம் மற்றம் அனைத்து மகளிர் காவல் திட்டம் இப்படி சிலவற்றை உதாரணமாகச் சொல்லலாம்.
தமிழகத்தின் தொழில் வளர்ச்சி, கல்வி வளர்ச்சி, நகர்ப்புற சுகாதாரம், வெளிநாட்டு முதலீடு, கலை கலாச்சார பாதுகாப்பு இப்படி பல்துறைகளிலும் மிகச் சிறந்த நிர்வாகியாக, முதலமைச்சராக தமிழகத்தை ஐந்து முறை ஆட்சி செய்திருக்கிறார் ஜெயலலிதா. மிகச் சிறந்த படிப்பாளி மற்றும் மொழி அறிவு பெற்றவர். அதனால் தான் தேசிய அரசியலிலும் இவரின் ஆளுமை புலப்பட்டது. இந்தியாவை ஆண்ட பிரதமர்களிடம் ஆகச் சிறந்த மதிப்பு பெற்ற மாநில முதலமைச்சர்கள் பட்டியலில் ஜெயலலிதாவிற்கு எப்போதுமே முதலிடம் தான்.
தமிழகத்தையே தன் குடும்பமாக அவர் நினைத்தால் தானோ என்னவோ, அவரை எல்லோரும் அம்மா என்று வாஞ்சையோடு அழைத்தார்கள். நீங்கள் செய்வீர்களா.. என மேடையில் நின்று கேட்போதெல்லாம், அவர் நினைத்ததையெல்லாம் செய்து காட்டியவர்கள் தமிழக மக்கள். ஆளுமைகளைத் தீர்மானிப்பதிலும் சரி, அங்கீகரிப்பதிலும் சரி ஜெயலலிதாவிற்கு நிகர் ஜெயலலிதா தான். சாதாரண தொண்டர்களும் அமைச்சர்களாக்கி அழகு பார்த்தவர். இப்படிப்பட்ட ஆளுமையான ஜெயலலிதா பல நேரங்களில் துரோக அம்புகளால் துளைக்கப்பட்டிருக்கிறார். ஆனால் வீழ்ந்துவிடவில்லை அவர்.
அரசியல் பிரவேசம் முதல் அப்போலோ அட்மிசன் வரை ஜெயலலிதாவைச் சுற்றியிருக்கும் மர்மங்களும் ஏராளம். உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அவர் வைக்கப்பட்டிருந்த நாட்கள் ஒவ்வொன்றும் சிதம்பர ரகசியமாகத்தான் இருந்தது. ஆனால் அந்த மருத்துவமனையின் வாயிலில் ஜெயலலிதாவை நேசிக்கும் தொண்டர்களின் கண்களில் வழிந்த கண்ணீரில் உண்மையிருந்தது. அம்மா.. அம்மா என தொண்டர்கள் கதறி அழுத சத்தம் இன்னும் அப்பேலோ வாயிலில் கேட்டுக் கொண்டு தான் இருக்கும்.
அம்முவாக ஜெயலலிதா பள்ளியில் படித்துக்கொண்டிருந்த போது அவரது தோழி மூலம் துரோகம் என்றால் என்னவென்று அறிந்து கொண்டார். அன்று முதல் அரசியல் கடலில் தத்தளித்து சாதனைக் கரையேறி சாவை தழுவியது வரை இவர் சந்தித்த துரோகங்கள் எத்தனை.. எத்தனை…ஜெயலலிதா என்னும் ஆளுமை நமக்கு கற்றுத்தரும் பாடம் ஒன்று தான். விமர்சனங்களால் நீங்கள் தேங்கி நின்றால் உங்கள் வெற்றியை நீங்கள் தவற விடுகிறீர்கள் என்று தான் அர்த்தம். அதைத் தான் வாழ்ந்து காட்டியிருக்கிறார்.
- ரொசாரியோ ராய், செய்தியாளர்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Jayalalithaa, Jayalalithaa Dead