ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்து பேரறிவாளனை விடுதலை செய்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ள நிலையில், அவரது விடுதலைக்காக தனது உயிரையே நீத்த செங்கோடியின் தியாகத்தை பலரும் போற்றி வருகின்றனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் ஓரிக்கை பகுதியைச் சேர்ந்த செங்கொடி (21) மக்கள் மன்றம் என்ற அமைப்புடன் இணைந்து சமூக நலப் பணிகளில் ஈடுபட்டு வந்துள்ளார். மக்கள் பிரச்சனைகள் தொடர்பாக போராடுவது, விழிப்புணர்வு ஏற்படுத்துவது என சமூகம் சார்ந்து அவர் இயங்கிவந்தார்.
இந்நிலையில், கடந்த 2011ம் ஆண்டு ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட, பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரின் கருணை மனுக்கள் அப்போதைய குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டிலால் நிராகரிக்கப்பட்டு செப்டம்பர் 9ம் தேதி மூவரையும் தூக்கில் போட தேதி குறிக்கப்பட்டது. இந்த தண்டனையை ரத்து செய்யக் கோரி தமிழகத்தில் போராட்டங்கள் நடைபெற்றன.
காஞ்சிபுரத்தில் நடைபெற்ற மனித சங்கிலி போராட்டத்தில் கலந்துகொண்ட செங்கொடி அதை தொடர்ந்து, மூவர் விடுதலையை வலியுறுத்தி ஆகஸ்ட் 28ம் தேதி காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தீக்குளித்து உயிரிழந்தார். இது தொடர்பாக செங்கொடி எழுதியிருந்த கடிதத்தில், “தோழர் முத்துக்குமாரின் உடல் தமிழகத்தை எழுப்பியதுபோல் என்னுடைய உடல் இந்த 3 தமிழர்களின் உயிரைக் காப்பாற்றப் பயன்படும் என்ற நம்பிக்கையுடன் செல்கிறேன். இப்படிக்கு தோழர் செங்கொடி” என குறிப்பிட்டார்.
இதையும் படிங்க: பேரறிவாளன் விடுதலைக்கு வழிவகுத்த சட்டப் பிரிவு 142 கூறுவது என்ன?
இதனை தொடர்ந்து மூவர் மரண தண்டனைக்கு எதிரான முன்னெடுப்பு தீவிரமடைந்து சட்டப் போராட்டம் மூலம் அவர்கள் தூக்கில் போடப்படுவது தடுக்கப்பட்டது. செங்கொடியின் மரணத்துக்கு பின்னர் எழுவர் விடுதலை விவகாரம் பலதரப்பு மக்களையும் வேகமாக சென்றடைந்து.
இந்நிலையில், ராஜிவ் காந்தி கொலை வழக்கில் விடுதலையாகியுள்ள பேரறிவாளன் இன்று செய்தியாளர்களை சந்தித்தபோது, அரசின் ஆதரவையும் மக்கள் ஆதரவையும் எனக்கு கிடைக்க செய்தது தங்கை செங்கொடியின் தியாகம்தான் என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார். இதேபோல் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தனது ட்விட்டர் பக்கத்தில், மக்கள் மன்றத்தைச் சார்ந்த தங்கை செங்கொடியின் ஈகத்தை தற்போது நினைவுகூர்ந்திட வேண்டியது நாம் அவருக்குச் செலுத்தும் நன்றிக் கடனாகும்.
பேரறிவாளன் உள்ளிட்ட மூவரையும் மரணத் தண்டனையிலிருந்து காத்திட அவர் தன்னைத்தானே மாய்த்துக் கொண்டார். அவருக்கு எமது செம்மாந்த நன்றிகலந்த வீரவணக்கம்’ என பதிவிட்டுள்ளார். இதனுடன் செங்கொடி தீக்குளிப்பதற்கு முன்பாக எழுதியிருந்த கடிதத்தையும் பகிர்ந்துள்ளார். இதேபோல் சமூக ஊடகத்தில் பலரும் செங்கொடியின் தியாகத்தை நினைவுக் கூர்ந்து போற்றி வருகின்றனர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.