தமிழகத்தில் ரெம்டெசிவிர் மருந்துக்கு கடும் தட்டுப்பாடு நிலவுவதாக புகார்!

ரெம்டெசிவர் - கொரோனா மருந்து

தமிழகத்தில் போதிய அளவுக்கு ரெம்டெசிவிர் மருந்து கையிருப்பில் இருப்பதாக கூறப்பட்டாலும், சிறிய மருத்துவமனைகள், கிளினிக்குகளில் ரெம்டெசிவிர் மருந்துக்கு கடும் தட்டுப்பாடு நிலவுவதாக புகார் எழுந்துள்ளது.

 • Share this:
  தமிழகத்தில் போதிய அளவுக்கு ரெம்டெசிவிர் மருந்து கையிருப்பில் இருப்பதாக கூறப்பட்டாலும், சிறிய மருத்துவமனைகள், கிளினிக்குகளில் ரெம்டெசிவிர் மருந்துக்கு கடும் தட்டுப்பாடு நிலவுவதாக புகார் எழுந்துள்ளது.

  கொரோனா நோயாளிகளுக்கு அறிகுறிகள் தொடங்கி முதல் பத்து நாட்களுக்குள் ரெம்டெசிவிர் மருந்து கொடுக்கலாம் என்று மத்திய அரசு அறிவுறுத்துகிறது. நோயின் ஆரம்பக் கட்டத்தில், கொரோனா தொற்றாளர்களுக்கு ரெம்டெசிவிர் மருந்து வழங்கினால் நல்ல பலன் கிடைப்பதாக தெரிகிறது. தமிழ்நாட்டில் 20 நாட்களுக்கு தேவையான மருந்து கையிருப்பு இருப்பதாகவும் மேலும் 2 லட்சம் குப்பிகள் கொள்முதல் செய்ய ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

  தமிழக அரசு மருத்துவமனைகளில் ரெம்டெசிவிர் மருந்து கிடைக்கும் அதேநேரம் பல தனியார் மருத்துவமனைகளில் கிடைப்பதில்லை என கூறப்படுகிறது. இந்தியாவில் சைடஸ், ஹெடீரோ, மைலான் உட்பட எட்டு நிறுவனங்கள் ரெம்டெசிவிர் தயாரிக்கின்றன. இதில் எந்த நிறுவனமும் தமிழ்நாட்டில் இல்லை. எனவே அந்தந்த மாநிலங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது. இது தவிர பாதிப்பு அதிகமுள்ள மகாராஷ்டிரா, டெல்லி உள்ளிட்ட மாநிலங்களுக்கும் அதிகளவில் ரெம்டெசிவிர் மருந்து அனுப்பப்படுகிறது. வரும் நாட்களில் நிறுவனங்களின் உற்பத்தி அதிகரித்தால் நிலைமை சீராகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

  இது குறித்து மருந்து வணிகர்கள் சங்க சென்னை தலைவர் ரமேஷ் கூறுகையில், தமிழகத்தில் சிறிய மருத்துவமனைகள், கிளினிக்குகளில் ரெம்டெசிவிர் மருந்துக்கு கடுமையான தட்டுப்பாடு இருப்பதாக தெரிவித்தார்.

  தமிழகத்திற்கு போதிய அளவு ரெம்டெசிவிர் மருந்து பெறுவதில், தமிழக அரசு உரிய கவனம் செலுத்த வேண்டும் என்றும், இல்லை என்றால், கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரிக்கும் போது, ரெம்டெசிவிர் மருந்துக்கு மிகப்பெரிய தட்டுப்பாடு ஏற்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

  ரெம்டெசிவிர் மருந்துக்கு தட்டுப்பாடு நிலவுவது தொடர்பாக தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகத்தின் இயக்குநர் உமாநாத்திடம் தொடர்பு கொண்டு விளக்கம் கேட்கப்பட்டது. அரசு அறிவுறுத்தியுள்ள விதிமுறைகளுக்கு உட்பட்டு ரெம்டெசிவர் தேவைப்படும் அனைத்து நோயாளிகளுக்கும், வழங்கப்படுவதாக கூறினார்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Esakki Raja
  First published: