Remdesivir: தமிழகத்தில் இன்று ரெம்டெசிவிர் மருந்து விற்பனை ரத்து; நாளை முதல் மருத்துவமனைகளுக்கு விநியோகம்!

ரெம்டெசிவிர் மருந்து விற்பனை

மருந்துக்காக நோயாளிகளின் குடும்பத்தினர் கால்கடுக்க காத்திருப்பதும், மருந்து கிடைக்காமல் பலர் ஏமாற்றத்துடன் திரும்புவதும் தொடர் கதையாகியுள்ளது.

  • Share this:
    தனியார் மருத்துவமனைகளிலும் கொரோனா நோயாளிகளுக்கு நாளை முதல் ரெம்டெசிவிர் வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதனால், இன்று முதல் சென்னை உள்ளிட்ட 6 இடங்களில் விற்பனை நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட ஆறு நகரங்களில் அரசு மூலம் ரெம்டெசிவிர் மருந்து வழங்கப்பட்டு வருகிறது. மருந்துக்காக நோயாளிகளின் குடும்பத்தினர் கால்கடுக்க காத்திருப்பதும், மருந்து கிடைக்காமல் பலர் ஏமாற்றத்துடன் திரும்புவதும் தொடர் கதையாகியுள்ளது.

    இந்த சூழலில் ரெம்டெசிவிர் மருந்து விநியோகம் குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

    இதைதொடர்ந்து அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், வரும் 18ம் தேதி முதல் அனைத்து தனியார் மருத்துவமனைகளுக்கும், ஆக்சிஜன் சிகிச்சை பெற்றுவரும் நோயாளிகள் குறித்த விவரங்களோடு, ரெம்டெசிவிர் மருந்து தேவை குறித்த கோரிக்கைகளையும், இணையதளத்தில் பதிவிடும் வசதி ஏற்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்தக் கோரிக்கைகளை  பரிசீலித்து ரெம்டெசிவிர் மருந்து ஒதுக்கீடு செய்யப்பட்டபின், அந்த மருத்துவமனையின் பிரதிநிதிகள் மட்டும், அவர்களுக்கான விற்பனை மையங்களுக்குச் சென்று மருந்துகளைப் பெற்றுக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்கான இணையதளம் குறித்த விவரங்கள் விரைவில் வெளியிடப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

    இவ்வாறு வழங்கப்படும் மருந்துகள் தகுதியான நோயாளிகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்படுவதையும், பெறப்படும் அதே விலையிலேயே நோயாளிகளுக்கு அவை விற்பனை செய்யப்படுவதையும், கள்ளச்சந்தையில் விற்பனை செய்யப்படாதவாறும் கண்காணிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

    நோயாளிகளுக்குத் தேவையற்ற முறையில் ரெம்டெசிவிர் மருந்தை பரிந்துரைக்கும் மருத்துவமனைகள் மீதும், விதிமுறைகளை மீறுவோர் மீதும், சட்டப்படியான நடவடிக்கைகளை எடுக்கப்படும் எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது

    ஆலோசனை கூட்டத்திற்கு முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தனியார் மருத்துவமனைகள் ரெம்டெசிவிர் மருந்தை பரிந்துரைப்பது தொடர்பாக அறிவுறுத்த, நிபுணர் குழு அமைக்கப்படும் என தெரிவித்தார்.

     
    Published by:Arun
    First published: