தாமதமாகும் 12-ம் வகுப்பு மாணவர்களின் மதிப்பெண் மறுகூட்டலால் கல்லூரிகளில் சேர்வதில் சிக்கல்

தமிழகத்தில் 12-ம் வகுப்பு மாணவர்களின் மதிப்பெண் மறுகூட்டல் நடைபெறுவதில் தாமதமாவதால் அவர்கள் கலைக் கல்லூரிகள் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் சேர்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

தாமதமாகும் 12-ம் வகுப்பு மாணவர்களின் மதிப்பெண் மறுகூட்டலால் கல்லூரிகளில் சேர்வதில் சிக்கல்
கோப்பு படம்
  • Share this:
மார்ச் 24-ம் தேதியன்று நிறைவடைந்த 12ஆம் வகுப்பு இறுதித் தேர்வை ஊரடங்கு காரணமாக தவறவிட்ட மாணவர்களுக்கு தேர்வு நடத்திய பிறகே பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளை வெளியிட இயலும் என அரசு தெரிவித்தது. இதனால் ஜூலை முதல் வாரத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்படவில்லை. இந்த நிலையில் வரும் 27ம் தேதி சிறப்பு தேர்வுகள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே திடீரென்று எவ்வித முன்னறிவிப்புமின்றி ஜூலை 16ஆம் தேதி 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது.

வழக்கமாக பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும் அன்றே மறுகூட்டல் மறு மதிப்பீடு மற்றும் விடைத்தாள் நகல் பெறுவதற்கான தேதி அறிவிப்பது வழக்கம். இந்த ஆண்டு, 16 ஆம் தேதி 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான அன்று மறுகூட்டல் உள்ளிட்டவற்றிக்கு மாணவர்கள் எப்போது விண்ணப்பிக்க வேண்டும் என்பதற்கான தேதி அறிவிக்கப்படவில்லை. ஒரு வாரம் கழித்து 22-ம் தேதி எப்போது விண்ணப்பிக்கலாம் என்பது அறிவிக்கப்பட்டது. அதில், 24-ம் தேதி துவங்கி முப்பதாம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு வெளியிடப்பட்டது.

கலை அறிவியல் கல்லூரிகளில் சேர்வதில் சிக்கல்


ஆனால் அரசு கலைக் கல்லூரிகளுக்கு ஆன்லைன் வாயிலாக இந்த மாதம் 31ஆம் தேதி வரை மட்டுமே விண்ணப்பிக்க இயலும். அதே போல அரசு உதவி பெறும் கல்லூரிகள் தனியார் கலை அறிவியல் கல்லூரிகளில் விரைவாக இடங்கள் நிரம்பி வருகின்றன. இந்தநிலையில் மறு கூட்டல் மறு மதிப்பீட்டிற்கு மாணவர்கள் விண்ணப்பித்தால் அந்த முடிவுகள் வெளியாவதற்கு குறைந்தது 20 நாட்கள் ஆகும். அந்தவகையில் மறுகூட்டலுக்கு விண்ணப்பம் செய்கின்ற மாணவர்கள் கலை அறிவியல் படிப்புகளுக்கு விண்ணப்பிப்பதில் சிக்கல் எழுந்துள்ளது.

கடந்த காலங்களில் மறுகூட்டல் மற்றும் மறு மதிப்பீட்டிற்கு விண்ணப்பித்து பாடங்களில் தோல்வி அடைந்த மாணவர்கள் நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதே போல நல்ல மதிப்பெண் பெற்ற மாணவர்களும் மறுகூட்டல் மற்றும் மறு மதிப்பீட்டிற்கு விண்ணப்பித்து கூடுதல் மதிப்பெண்களுடன் மாநில அளவிலான முன்னிலை மதிப்பெண் பெற்ற சான்றுகளும் இருப்பதாக தெரிவிக்கின்றனர் கல்வியாளர்கள்.

12ம் வகுப்பு முடிவுகளை முன்பே அறிவித்து மறுகூட்டல் மற்றும் மறு மதிப்பீட்டிற்கான பணிகளை துவங்கியிருந்தால் சிக்கல் ஏற்பட்டிருக்காது என்று கூறும் கல்வியாளர்கள் அரசு கலை அறிவியல் கல்லூரிகளுக்கு மாணவர்கள் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதியிணை மேலும் 2 வார காலங்களுக்கு நீட்டிக்க வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.பொறியியல் சேர்க்கையிலும் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு

மறுகூட்டல் மற்றும் மறு மதிப்பீடு முடிவுகள் ஆகஸ்ட் 10ம் தேதி அல்லது அதற்கு முன்னதாகவோ வெளியிடப்பட்டால் மட்டுமே மாணவர்கள் சிக்கலின்றி பொறியியல் படிப்புகளுக்கும் விண்ணப்பிக்க இயலும். பொறியியல் கலந்தாய்வில் பங்கேற்க இந்த மாதம் 16ஆம் தேதி துவங்கி ஆகஸ்ட் மாதம் 16ந் தேதி வரை ஆன்லைனில் பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே குறிப்பிட்ட தேதிக்கு முன்பே மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடு முடிவுகள் வெளியானல் மட்டுமே மாணவர்கள் சிரமமின்றி விண்ணப்பிக்க இயலும் என்பது குறிப்பிடத்தக்கது. பன்னிரண்டாம் வகுப்பு முடிவுகளை வெளியிடுவதில் ஏற்பட்ட குழப்பமும் காலதாமதமும் மறுகூட்டல் மறுமதிப்பீட்டு பணிகளில் சிக்கல் ஏற்படுத்தி மாணவர்கள் கல்லூரிகளில் சேர்வதில் சிக்கலை உண்டாக்கி இருக்கின்றது.
First published: July 24, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading