தமிழ்நாட்டின் தேர்தல் வரலாற்றில் முக்கிய இடம் வகிக்கும் ஊராட்சிகளில் ஒன்று பாப்பாபட்டி. அதனை, பாப்பாபட்டி-கீரிப்பட்டி-நாட்டார்மங்களம் என்று குறிப்பிட்டால் பலருக்கு ஞாபகம் வர வாய்ப்பு உண்டு. ஆதிக்க சமூகத்தைச் சேர்ந்த மக்கள் அங்கு அதிகம் வசிக்கும் நிலையில், 1996ம் ஆண்டு உள்ளாட்சி தேர்தலில் அது தலித் மக்கள் போட்டியிடும் தனி ஊராட்சியாக அறிவிக்கப்பட்டது.
இதனை ஏற்க மறுத்த ஆதிக்க சாதியினர் தேர்தலை புறக்கணிப்பது, வேட்புமனு தாக்கல் செய்வதைத் தடுப்பது, தாக்கல் செய்த வேட்பு மனுக்களை வாபஸ் பெறச்சொல்லி வேட்பாளர்களுக்கு கொலை மிரட்டல் விடுப்பது போன்ற சம்பவங்களில் ஈடுபட்டனர்.
அதையும் மீறி தேர்தல் நடைபெற்றால், ஆதிக்க சாதி மக்கள் ஒன்றுகூடி, தங்களுக்கு கீழ் படிந்த தலித் ஒருவரை வேட்பாளராக நிறுத்தி வெற்றி பெறச் செய்து, அடுத்த சில மணி நேரங்களிலேயே அவரை ராஜினாமாவும் செய்ய வைத்தனர். அரசு தரப்பில் பல கட்டமாக நடந்த பேச்சுவார்த்தைகளும் தோல்வியுற, 1996 முதல் 2006 வரை ஆறு மாதத்திற்கு ஒரு மறு தேர்தல் என, பத்து ஆண்டுகளில் 19 முறை அங்கு உள்ளாட்சி தேர்தல் தேர்தல் தள்ளி வைக்கப்பட்டது. 2006 ஆம் ஆண்டில் இந்த ஊராட்சித் தொகுதிகள் சுழற்சி முறையில் பொதுத்தொகுதிகளாக மாற்றப்பட வேண்டும் எனும் கோரிக்கை எழுந்தது.
ஆனால், அதையேற்க மறுத்த அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி, தனித்தொகுதிகளாகவே குறிப்பிட்ட ஊராட்சிகளில் தேர்தல் நடத்த முடிவு செய்தார்.
அந்த சூழலில் தான், முதலமைச்சரின் தற்போதைய தனிச்செயலாளராக உள்ள உதயச்சந்திரன், அன்று மதுரை மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்றார். உள்ளட்சித்துறை அமைச்சராக இருந்த ஸ்டாலினின் அறிவுறுத்தலின் பேரில் , அவர் கிராம மக்களிடம் பலகட்ட சமரச பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்ததன் மூலம், 10 வருடங்களுக்குப் பிறகு அமைதியான முறையில் தேர்தல் நடத்தப்பட்டு பாப்பாப்பட்டி உள்ளிட்ட, 4 ஊராட்டி மன்றங்களுக்கும் தலித் சமூகத்தை சேர்ந்தவர்களே ஊராட்சி மன்ற தலைவர்களாக தேர்வு செய்யப்பட்டனர்.
அதைதொடர்ந்து, சென்னை கலைவாணர் அரங்கில் ஸ்டாலின் முன்னிலையில் நடைபெற்ற சமத்துவ பெருவிழாவில், குறிப்பிட்ட கிராம ஊராட்சி மன்ற பிரதிநிதிகளை அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி நேரில் அழைத்து பொன்னாடை அணிவித்து, கேடயங்கள் வழங்கி கவுரவித்தார்.
சாதிய வன்மத்தால் 10 ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த தேர்தல் உள்ளாட்சித்துறை அமைச்சர் ஸ்டாலின் நடவடிக்கையால் வெற்றிகரமாக நடத்தப்பட்டது, அவரது அரசியல் வாழ்வில் பெரும் சாதனையாகவே கருதப்படுகிறது. இதுவே, கிராம சபைக் கூட்டத்தில் பங்கேற்க முதல்வர் ஸ்டாலின் மதுரை பாப்பாப்பட்டியை தேர்வு செய்ததற்கான காரணம் ஆகும்.
Published by:Esakki Raja
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.