பெண்ணிடம் பணம்பறிப்பு.. திருடனை பிடித்து மாஸ் காட்டிய நிஜ ஹீரோ

Youtube Video

சென்னையில் பெண்ணிடம் பணப்பறிப்பில் ஈடுபட்ட திருடர்களை பைக்கில் துரத்திச் சென்று பிடித்து ஒரு லட்சம் ரூபாய் ரொக்கத்தையும் பெண்ணின் பையையும்  இளைஞர் ஒருவர் மீட்டுக் கொடுத்துள்ளார்.

 • Share this:


  சாலையில் கைக்குழந்தையுடன் நின்றிருந்த பெண்ணிடம் வழிப்பறியில் ஈடுபட்டவர்களை துரத்தி பிடித்துள்ளார் 19 வயதான கார்த்திக். தான் கற்றுக்கொண்ட குத்துச்சண்டையைப் பயன்படுத்தி திருடர்களிடம் இருந்து ஒரு லட்சம் ரூபாயை மீட்டது எப்படி?

  சென்னை நுங்கம்பாக்கம் கிராமத் தெருவைச் சேர்ந்தவர் 19 வயதான கார்த்திக். கல்லூரியில் பி.காம் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். செவ்வாய்க்கிழமை மாலை 6.30 மணியளவில் நுங்கம்பாக்கம் ஜோசியர் தெருவில் தனது இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.

  அப்போது சாலையின் ஒரத்தில் கைக்குழந்தையுடன் நின்று கொண்டிருந்த பெண் திடீரென அழுது கூச்சலிட்டுள்ளார். ஒரு லட்சம் ரூபாய் ரொக்கம் தனது பையில் வைத்திருந்ததாகவும் , அந்த பையை இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு இளைஞர்கள் பறித்து சென்றதாகவும் கதறியுள்ளார்.

  விசாரித்தறிந்த கார்த்திக், அந்தப் பெண் சுட்டிக் காட்டிய இளைஞர்களை இருசக்கர வாகனத்தில் துரத்தியுள்ளார். போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருந்ததால் இருசக்கரவாகனத்தில் துரத்திப் பிடிக்க முடியவில்லை. அதனால் சாலையோரம் வாகனத்தை நிறுத்தி விட்டு கொள்ளையர்களை நோக்கி ஓடியுள்ளார்.

  30 மீட்டர் தூரம் ஓடி சென்று கொள்ளையர்களின் இருசக்கரவாகனத்தை பிடித்து தள்ளி இருவரையும் பிடிக்க முயன்றார். ஏற்கனவே குத்துச் சண்டை பயிற்சி பெற்ற கார்த்திக், கொள்ளையர்களைத் தாக்கி நிலைகுலையச் செய்தார். கொள்ளையன் ஒருவன் மறைத்து வைத்திருந்த கத்தியால் தாக்க முயன்றுள்ளார்; அவரையும் மடக்கி பிடித்துள்ளார் கார்த்திக்.

  கார்த்திக்கின் தாக்குதலை தாக்குபிடிக்க முடியாத ஒரு. கொள்ளையன் அங்கிருந்து ஓட்டம் பிடித்தார்.

  பணப்பையை வைத்திருந்த கொள்ளையன் தப்பித்து ஓட முடியாதவாறு அவரை இறுகப் பிடித்தபடி கார்த்திக் குரல் கொடுத்தார். அக்கம்பக்கத்தினர் வந்து வழிப்பறிக் கொள்ளையனைப் பிடித்துக் கொண்டனர். கொள்ளையனிடமிருந்து ஒரு லட்சம் ரூபாய் அடங்கிய பணப்பையை மீட்ட கார்த்திக் அதை உரிய பெண்ணிடம் ஒப்படைத்தார்.

  தகவல் அறிந்த நுங்கம்பாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பிடிபட்ட கொள்ளையனைப் பிடித்து விசாரித்தபோது அவர் சைதாப்பேட்டையைச் சேர்ந்த 21 வயதான முக்தார் உசேன் என்பதும், தப்பியோடியவர், பெரம்பூரைச் சேர்ந்த ஹாலித் என்பதும் தெரியவந்தது. அவர்கள் பயன்படுத்திய இருசக்கர வாகனம் திருட்டு வாகனம் என்பதும்; இருவர் மீதும் வேளச்சேரியில் வழக்கு இருப்பதும் தெரியவந்துள்ளது.

  மேலும் படிக்க...எத்தனால் கலந்த பெட்ரோல் விற்பனை: பிரதமர் நரேந்திர மோடி விளக்கம்

  சம்பவம் நடந்த இடத்தில் உள்ள சிசிடிவி கேமரா வேலை செய்யவில்லை; முக்தார் அளித்த தகவலின் மூலம் ஹாலித்தை போலீசார் தேடி வருகின்றனர்.

  வாடகை வீட்டில் தனது பெற்றோருடன் வசித்து வரும் கார்த்திக் பல்லாவரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். மேலும், கடந்த மூன்று ஆண்டுகளாக குத்துச் சண்டை கற்று வந்துள்ளார். பெற்றோர் நடத்தும் தெருவோர தள்ளுவண்டி பிரியாணி கடையில் மாலை நேரங்களில் பணிபுரிந்து, கிடைத்த வருமானத்தில் கார்த்திக் கல்லுாரிப் படிப்பு படித்து வருகிறார்.

  வழிப்பறிக் கொள்ளையனைத் துரத்திப் பிடித்து ஒரு லட்சம் ரூபாய் பணத்தை உரியவரிடம் சேர்த்த கார்த்திக்கை காவல்துறையினர் உள்ளிட்ட பலரும் பாராடி வருகின்றனர்.

   


  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Vaijayanthi S
  First published: