’பொருளைப் பறிகொடுத்த வலி தெரியும்’ - வழிப்பறி கொள்ளையர்களை துரத்திப்பிடித்து ஒரு லட்ச ரூபாயை மீட்ட நிஜ ஹீரோ கார்த்திக்..

’பொருளைப் பறிகொடுத்த வலி தெரியும்’ - வழிப்பறி கொள்ளையர்களை துரத்திப்பிடித்து ஒரு லட்ச ரூபாயை மீட்ட நிஜ ஹீரோ கார்த்திக்..

கார்த்திக், கார்த்திக்கின் அம்மா கலைவாணி

பாக்ஸிங் கிளாஸ் போறப்போ பயமா இருந்த எனக்கு இப்போ ரொம்ப சந்தோஷமா இருக்கு" என்று கூறி பூரிப்படைகிறார் கார்த்திக்கின் தாய் கலைவாணி.

  • Share this:
சென்னையில் நாளுக்கு நாள் செயின் பறிப்பு, மொபைல் பறிப்பு போன்ற  சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. காவல் துறையின் சார்பாக சென்னை மாநகர் முழுவதும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு இருந்தாலும் இந்த குற்றங்கள் குறைந்தபாடில்லை. குறிப்பாக ஒவ்வொரு குற்ற சம்பவம் நடைபெறும்போது, அக்கம்பக்கத்தில் இருப்போர் சலனமின்றி கண்டும் காணாமல் செல்லும் மனநிலையானது சென்னையில் அதிகரித்து வருவதையும் காணமுடிகிறது. நமக்கு ஏதேனும் ஆபத்து வந்துவிட்டால் என்ன செய்வது என்ற எண்ணமே குற்ற சம்பவங்களுக்கு அருகில் இருக்கும் பொதுமக்களை தூரத்தில் இருந்து வேடிக்கை பார்க்க வைக்கிறது.

இப்படியான ஒரு சம்பவம் சென்னையில் நேற்றிரவு பொதுமக்கள் பலர் வேடிக்கை பார்க்க நடந்து இருக்கிறது. ஆனால் கூட்டத்தில் இருந்த 19 வயது இளைஞன் மட்டும் பார்வையாளராக இல்லாமல் ஹீரோவாக மாறி குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை அடித்து அவர்கள் பறித்துச் சென்ற ரூபாய் ஒரு லட்சம் பணத்தை மீட்டு உரியவரிடம் ஒப்படைத்திருக்கிறார்.

சென்னை நுங்கம்பாக்கம் கிராமா தெருவைச் சேர்ந்தவர் கார்த்திக்(19 ). இவர் பி.காம் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.
இவர் நேற்று இரவு சரியாக 6.30 மணியளவில் நுங்கம்பாக்கம் ஜோசியர் தெருவில் தனது இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். அப்போது சுமார் 35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் தனது கையில் கைக்குழந்தையுடன் நின்று அழுதுகொண்டு கூச்சலிட தொடங்கியுள்ளார்.

மேலும் படிக்க: சினிமா பாணியில் வழிப்பறி கொள்ளையனை இருசக்கர வாகனத்தில் துரத்திப் பிடித்த 19 வயது இளைஞர்..

அவர் கைப்பையில் ரூபாய் ஒரு லட்சம் பணம் வைத்திருந்ததும், அந்த பணப்பையை இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு இளைஞர்கள் பறித்து சென்றதுமே அவர் கூச்சலிட்டு அழுதுகொண்டிருந்ததற்கான காரணம். இதனை அறிந்த கார்த்திக் தனது இருசக்கர வாகனத்தின் மூலம் அந்த இரண்டு வழிப்பறி கொள்ளையர்களையும் துரத்தி உள்ளார். ஆனால் போக்குவரத்து நெரிசல் காரணமாக கொள்ளையர்களை தொடர்ந்து இரு சக்கர வாகனத்தால் துரத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு இரண்டு கொள்ளையர்களையும் நோக்கி ஓடத் தொடங்கி உள்ளார் கார்த்திக்.

சுமார் 30 மீட்டர் தூரம் ஓடி இரண்டு வழிப்பறி கொள்ளையர்களின் சட்டையை பிடித்து இழுத்து கீழே தள்ளி அவர்கள் மீது பாய்ந்து அடித்துள்ளார். அதில் ஒரு வழிப்பறி கொள்ளையன் தனது இடுப்பில் இருந்து கத்தியை உருவ முயற்சி செய்தும் அதை எடுக்க முடியாதபடி கார்த்தி தடுத்து தாக்கியுள்ளார். இதனால் அந்த கொள்ளையன் தப்பித்து ஓடியுள்ளார். மேலும் பணப்பையை வைத்திருந்த கொள்ளையன் தப்பித்து ஓடாதவாறு அவரை இறுகப் பிடித்து அடிக்க, அக்கம் பக்கத்தில் இருந்த பொதுமக்கள் உடனே அங்கு வந்து வழிப்பறிக் கொள்ளையனைப் பிடித்துள்ளனர்.

கார்த்திக், கார்த்திக்கின் அம்மா கலைவாணி


பின்னர் கார்த்திக் வழிப்பறி கொள்ளையனிடமிருந்து ரூபாய் ஒரு லட்சம் அடங்கிய பணப்பையை பிடுங்கி பணத்துக்கு உரிய அந்தப் பெண்ணிடம் ஒப்படைத்துள்ளார். இந்த சம்பவம் குறித்து பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் நுங்கம்பாக்கம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து, வழிப்பறி கொள்ளையனை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை செய்தனர். விசாரணையில் சைதாப்பேட்டையைச் சேர்ந்த அவர் முக்தார் உசேன்(21) என்பது தெரியவந்தது. மேலும் அவருடன் வந்த மற்றொரு வழிப்பறி கொள்ளையன் பெரம்பரை சேர்ந்த ஹாலித் என்பதும் தெரியவந்தது. அவர்கள் கொண்டு வந்திருந்த இரு சக்கர வாகனம் திருட்டு வாகனம் என்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் இவர்கள் மீது வேளச்சேரியில் வழக்குப்பதிவு இருப்பதும் தெரியவந்தது.

வாடகை வீட்டில் தனது பெற்றோருடன் வசித்து வரும் கார்த்திக் பல்லாவரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். மேலும், கடந்த மூன்று ஆண்டுகளாக பாக்ஸிங் கற்று வந்துள்ளார். கல்லூரி செல்லும் கார்த்திக் தனது பெற்றோர்கள் நடத்தும் தெருவோர தள்ளுவண்டி பிரியாணி கடையில் கார்த்திக் மாலை நேரங்களில் பணிபுரிந்து அந்த பணத்தில் கல்லூரி படிப்பை படித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

குற்றவாளி முக்தார் உசேன்


"மூணு மாசத்துக்கு முன்னாடி எங்க அப்பாவோட மொபைல்ஃபோனை இப்படித்தான் பைக்கில் வந்த 2 பேர் புடுங்கிட்டு போனாங்க, அத நினைச்சி அப்பா நைட் ஃபுல்லா தூங்காம இருந்தாரு. பொருளை பறிகொடுத்த வலி எனக்கு தெரிஞ்சதால தான், அந்த பெண்ணோட வலியும் எனக்கு தெரிஞ்சிது. அதனாலதான் குற்றவாளிகளை தொரத்தி புடிச்சேன். அந்த நேரத்துல வழிப்பறி கொள்ளையனுங்க ரெண்டு பேருமே ஆயுதம் வெச்சிருப்பாங்கன்னு எண்ணம் இருந்தாலும் அந்த பெண்ணோட அழுகதான் கண் முன்னாடி இருந்துச்சு என்று கூறிய கார்த்திக்கின் லட்சியம் காவல்துறையில் சேர்வதுதான்" என்கிறார் கார்த்திக், மிளிரும் கண்களுடன்.

"உசுர பணயம் வச்சி குற்றவாளிகளை பிடிச்சு அவங்ககிட்ட இருந்து பணத்தை மீட்டுக் கொடுத்த என் பையன நினைச்சா ரொம்ப பெருமையா இருக்கு. பாக்ஸிங் கிளாஸ் போறப்போ பயமா இருந்த எனக்கு இப்போ ரொம்ப சந்தோஷமா இருக்கு" என்று கூறி பூரிப்படைகிறார் அவரது தாய் கலைவாணி.

வழிப்பறிக் கொள்ளையர்களைப் துரத்தி சென்று பிடித்து ரூபாய் ஒரு லட்சம் பணத்தை உரியவரிடம் மீட்டுக்கொடுத்த இந்த சம்பவமானது காவல் துறையினர் மத்தியில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல் கார்த்திக்கை காவல்துறை அதிகாரிகள் வெகுவாக பாராட்டியும் வருகின்றனர்.
Published by:Gunavathy
First published: