இடமாற்றம் செய்த ஊழியர்களை மீண்டும் அண்ணாமலைப் பல்கலை.யிலேயே பணியமர்த்த வேண்டும் - திருமாவளவன் கோரிக்கை

"ஊழியர்களில் சிலருக்கு பதவி உயர்வு அளித்தும் பெரும்பாலானவர்களை இப்படி இடமாற்றல் செய்தும் பாகுபாடு காட்டுவது ஏற்புடையது அல்ல"

இடமாற்றம் செய்த ஊழியர்களை மீண்டும் அண்ணாமலைப் பல்கலை.யிலேயே பணியமர்த்த வேண்டும் - திருமாவளவன் கோரிக்கை
திருமாவளவன், எம்.பி.,
  • Share this:
இடமாற்றல் செய்த ஊழியர்களை மீண்டும் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலேயே பணியமர்த்த வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் எம்.பி கோரிக்கை வைத்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது, ”மூன்று ஆண்டுகளுக்கு முன்பு செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் பணிநிரவல் என்னும் பெயரில் இடமாற்றல் செய்யப்பட்ட ஊழியர்களை மீண்டும் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்திலேயே பணி அமர்த்தம் செய்யவேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம்.

அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தைத் தமிழக அரசு ஏற்ற பிறகு, அங்கு தேவைக்கு அதிகமாக பணியமர்த்தம் செய்யப்பட்டிருந்த ஊழியர்களை பணிநிரவல் அடிப்படையில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு இடமாற்றல் செய்தது. மூன்று ஆண்டு கால ஒப்பந்த அடிப்படையில் அந்த இடமாற்றல் மேற்கொள்ளப்பட்டது. அவ்வாறு இடமாற்றல் செய்யப்பட்டவர்கள் சுமார் 3,600 பேர் என்று தெரியவந்துள்ளது. அவர்களுக்கெல்லாம் மே மாதம் 15ஆம் தேதியோடு அந்த ஒப்பந்தம் முடிவடைகிறது. மீண்டும் அவர்கள் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்திலேயே பணியமர்த்தம் செய்யப்பட வேண்டும். ஆனால் ஒப்பந்தத்தின் நிபந்தனைக்கு மாறாக அவர்களுடைய ஒப்பந்த காலத்தைத் தன்னிச்சையாக நீட்டிக்கும் முயற்சியில் தமிழக அரசு இறங்கி உள்ளதாகத் தெரியவந்துள்ளது.


இது அந்த ஊழியர்களுக்கு இழைக்கப்படும் அநீதியாகும்.
'சி மற்றும் டி' பிரிவுகளைச் சேர்ந்த ஊழியர்கள் இந்த இடமாற்றலால் பொருளாதார ரீதியில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த கொரோனா பேரிடர் காலத்தில் அவர்களை இடமாற்றல் செய்து வதைப்பது முறையல்ல. இப்போக்கை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.

எனவே, ஒப்பந்த அடிப்படையில் இடமாற்றல் செய்யப்பட்ட அனைவரையும் ஒப்பந்த நிபந்தனையின்படி மீண்டும் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்திலேயே பணியமர்த்தம் செய்ய வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தை நிதிச் சிக்கலில் இருந்து மீட்பதற்கு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் தமிழக அரசை வலியுறுத்துகிறோம்.ஊழியர்களில் சிலருக்கு பதவி உயர்வு அளித்தும் பெரும்பாலானவர்களை இப்படி இடமாற்றல் செய்தும் பாகுபாடு காட்டுவது எவ்விதத்திலும் ஏற்புடையது அல்ல என்பதையும் சுட்டிக்காட்டுகிறோம்.”

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube
Also see:
First published: May 23, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading