ஒட்டுண்ணியாய் வாழ்ந்தவர் அ.தி.மு.கவை அபகரிக்கப்பார்க்கிறார்: சசிகலாவுடன் பேசுபவர்களை நீக்கவேண்டும் - மதுரையில் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் தீர்மானம்

ஆர்.பி. உதயகுமார்

சசிகலாவுடன் தொலைபேசியில் பேசுபவர்களை கட்சியிலிருந்து நீக்க வேண்டும் என்று ஆர்.பி.உதயகுமார் தலைமையில் மதுரையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

 • Share this:
  சொத்துக்குவிப்பு வழக்கில் கைதாகி சிறையில் இருந்த சசிகலா கடந்த ஜனவரி மாதம் விடுதலையானார். சசிகலாவின் வருகை அதிமுகவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற பேச்சுகள் எழுந்தது. அதிமுகவில் இருந்து பிரிந்து தினகரன் பின்னால் அமமுகவுக்கு சென்றவர்கள் மீண்டும் தாய் கழகத்தில் இணைந்துவிடலாம் என நினைத்தனர். ஆனால், அ.தி.மு.கவில் சசிகலாவை இணைப்பதற்கு எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர் செல்வமும் உறுதியாக மறுத்துவிட்டனர். அதனையடுத்து யாரும் எதிர்பாராத வகையில், அரசியலில் இருந்து விலகுவதாக சசிகலா அறிக்கை வெளியிட்டார்.

  அதனையடுத்து, அ.தி.மு.க தன்னிச்சையாக தேர்தலைச் சந்தித்தது. அதில், அ.தி.மு.க தனிப்பட்டு 66 தொகுதிகளிலும், கூட்டணி 75 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. தி.மு.க ஆட்சி வந்து ஒரு மாதம் கடந்துள்ளநிலையில், அ.தி.மு.க தொண்டர்களிடம் சசிகலா தொடர்ந்து பேசும் ஆடியோக்கள் வெளிவருகின்றன. தொண்டர்களிடம் பேசும் சசிகலா, கண்டிப்பாக கட்சிக்கு வருவேன். மீண்டும் கட்சியை தலைமையேற்று நடத்துவேன்’ என்று பேசிவருகிறார். இதுவரையில், 40-க்கும் மேற்பட்ட ஆடியோக்கள் வெளிவந்துள்ளன.

  அதிமுக நிர்வாகிகளிடம் சசிகலா பேசும் ஆடியோக்கள் வெளியாகி அதிமுகவில் புதிய புயலை கிளப்பியது. அதனையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் சசிகலாவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், சசிகலாவுடன் பேசிய 15-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கட்சியிலிருந்து நீக்கப்பட்டனர். மேலும், சசிகலாவுக்கு எதிராக மாவட்டக் கழகங்களில் தீர்மானம் நிறைவேற்றுவதற்கு முடிவு செய்யப்பட்டது.

  மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அதிமுக நிர்வாகிகள் கூட்டம் குன்னத்தூர் ஜெயலலிதா கோயில் வளாகத்தில் இன்று நடந்தது. இதில் மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் கலந்துகொண்டு பேசினார். இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில், 'எம்.ஜி.ஆர் மறைவிற்குப்பின் அதிமுகவை உலகம் புகழும் இயக்கமாக மாற்றியவர் ஜெயலலிதா. அவர் மறைவுக்குப் பின் அனைத்தும் தகர்ந்துவிடும், என்று எண்ணியவர்களுக்கு ஏமாற்றத்தை அளித்து ஜெயலலிதாவின் ஆட்சியை வெற்றிகரமாக நடத்திக் காட்டினோம். இந்த சாதனையைக் கண்டு நம் எதிரிகளும் வியந்தனர் .

  உழைப்பைச் சுரண்டும் ஒட்டுண்ணிகளாகவும் , நற்பெயரை அழிக்கும் நச்சுக் களைகளாகவும் தங்களை வளப்படுத்தி கொண்ட சிலர், அதிமுகவை அபகரித்துவிடலாம் என்று வஞ்சக வலையை விரித்துக் கொண்டிருக்கின்றனர். சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக அரசியலிலிருந்து ஒதுங்கி இருக்கப் போவதாக அறிவித்த திருமதி சசிகலா, இப்போது கழகம் இவ்வளவு வலுவும், பொலிவும், தொண்டர் பெரும்படையும், மக்கள் செல்வாக்கும் பெற்றிருப்பதைப் பார்த்ததும் அரசியலில் முக்கியத்துவத்தைத் தேடிக்கொள்ள அதிமுகவை அபகரிக்கும் முயற்சியில் இறங்கப்போவதாக ஒவ்வொரு நாளும் தொலைபேசியில் சிலருடன் பேசுவதும் அதை ஊர் அரிய தொலைக்காட்சியில் ஒளிபரப்புவதுமாக விநோதமான ஒரு நாடகத்தை அரங்கேற்றி வருகிறார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  சசிகலாவுடன் தொலைபேசியில் உரையாடியவர்களை கழகத்தில் உடனடியா நீக்கவேண்டும். இனிமேலும், அதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோர் யாராக இருந்தாலும் அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளரை மதுரை புறநகர் மேற்கு மாவட்டக் கழகம் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்’ என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
  Published by:Karthick S
  First published: