வன்னியர் இடஒதுக்கீடு குறித்து பேசியது தவறாக புரிந்துகொள்ளப்பட்டது - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விளக்கம்

அமைச்சர் ஆர்.பி உதயகுமார்

வன்னியர் இடஒதுக்கீடு தற்காலிகமானது என்று நான் கூறியது தவறாக புரிந்துகொள்ளப்பட்டு திரித்து செய்தியாக வெளியானது என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விளக்கம் அளித்துள்ளார்.

 • Share this:
  மதுரை மாவட்டம் திருமங்கலம் சட்டமன்றத் தொகுதியில் அ.தி.மு.க வேட்பாளராக போட்டியிடும் அமைச்சர் ஆர். பி.உதயகுமார் நேற்று செளடார்பட்டி கிராமத்தில் பிரச்சாரத்தில் பேசிய அவர், ‘வன்னியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள 10.5 சதவீத இட ஒதுக்கீடு என்பது தற்காலிகமானது தான். மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு பின்னரே அனைவருக்கும் சமமான இட ஒதுக்கீடு வழங்கப்படும். இது ஆறு மாத காலத்திற்கு தான் என பேசினார். இது தொடர்பான செய்தி அனைத்து ஊடகங்களிலும் பத்திரிகைகளிலும் வெளியானது.

  இதனைத் தொடர்ந்து இன்று ஆர்.பி.உதயகுமார் திருமங்கலத்தில் செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார். அப்போது அவர், ‘அனைத்து தரப்பு மக்களையும் ஒரு தாய் வயிற்று பிள்ளைகளாக அனைத்துப் பிரிவு மக்களையும் ஒரு தாய் வயிற்று பிள்ளைகளாக முதல்வர் கருதி சேவை செய்து வருகிறார். ஆனால் பிற்பட்ட நலத்துறைக்காக 20 சதவீத இட ஒதுக்கீட்டில் 10.5 சதவீத இட ஒதுக்கீடு 7.5 சதவீத இட ஒதுக்கீடும் 2.5 சதவீத இட ஒதுக்கீடும் மசோதா தாக்கல் செய்யப்பட்டு அது ஆளுநரால் மசோதா நிறைவேற்றப்பட்டு சட்டமாக உள்ளது. அதற்குரிய விளக்கத்தை கொடுக்க வேண்டிய பொறுப்பும் கடமையும் எங்களுக்கு இருக்கிறது.

  நாங்கள்தான் சட்டமன்றத்திலே நிறைவேற்றும்போது அந்த அமைச்சரவையில் நான் பங்கேற்ற காரணத்தினாலே முதலமைச்சரின் எண்ணங்களை விளக்கங்களாக சொல்வதற்கு பொறுப்பும் கடமையும் எங்களுக்கு இருக்கிறது. ஏனென்றால் எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு இதை அவதூறு பிரச்சாரமாக கொண்டு செல்கிறார்கள். எங்கள் மீது தொடர்ந்து பழி சுமத்துகிறார்கள். ஏதோ ஒரு சாராருக்கு சாதகமாகவும் ஏதோ ஒரு சாராருக்கு பாதகமாகவும் ஏதோ நாங்கள் திட்டமிட்டு செய்தது போலவும் பல்வேறு அவதூறு செய்திகளை சமூக ஊடங்களில் செய்து கொண்டிருக்கிறார்கள். தேர்தல் காலத்தில் உரிய விளக்கங்களை கொடுக்கக் கடமைப்பட்ட காரணத்தினால் நேற்றைய தினம் நான் பல்வேறு பகுதிகளில் செல்கிறபோது அங்கே விளக்கத்தை கொடுத்தேன். அந்த விளக்கத்தில் நான் என்ன சொன்னேன் என்றால், தற்போது தான் மக்கள் தொகை கணக்கெடுப்பு சாதிவாரியாக மக்கள்தொகை கணக்கெடுப்பு மேற்கொள்வதற்கு ஆணையிடப்படுகிறது.

  ஆறுமாத காலத்திலேயே சாதிவாரியான கணக்கெடுப்பு நிறைவடையும். இன்று முதல்வர் வேலை வாய்ப்பிலும் கல்வியிலும் முன்னுரிமை கொடுக்கின்ற வகையிலே உள்ஒதுக்கீடு அறிவித்திருந்தார். அதற்கு அரசியல் ரீதியாக களங்கம் கற்பித்து பல்வேறு அவதூறு பிரச்சாரங்கள் செய்கிற காரணத்தினாலே அதற்கு உரிய விளக்கங்களை நான் தெரிவிக்கிற போது இன்று பத்திரிகைகளிலும் ஊடகங்களிலும் நான் சொன்ன உண்மை செய்தியை மறைத்து திட்டமிட்டு அரசுக்கு அவப்பெயர் ஏற்பட வேண்டும், முதல்வருக்கு அவப்பெயரை ஏற்படுத்த வேண்டும் என்று என்னுடைய பிரச்சாரத்தை அரசியல் உள்நோக்கத்தோடு திரித்துக் கூறப்பட்டுள்ளது. இதை நான் கண்டிக்கிறேன். சாதி சமய வேறுபாடு இன்றி சமதர்மக் கொள்கையை உருவாக்குவது தான் அதிமுக அரசின் ஒரே இலட்சியம். ஒரே கொள்கை.

  ஆனாலும் இந்த சமுதாயத்தில் கல்வியிலே பொருளாதாரத்திலே பின் தங்கியவர்கள், கல்வி பொருளாதாரத்தில் முன்னேற்றம் பெற்று சமதர்ம சமுதாயம் உருவாக்குவதற்காக தான் இன்றைக்கு சாதி ரீதியான கணக்கெடுப்பு அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

  சாதி ரீதியான மக்கள் கணக்கெடுப்பு வந்த பின்னர் அவர் அதற்கு ஏற்ற வகையில் பின்தங்கிய வகுப்பினருக்கு கல்வி மற்றும் பொருளாதாரத்தில் அவர்களுக்கு தேவையான இட ஒதுக்கீடுகளை தேவையான அளவு கொடுத்து அனைத்துப் பிரிவினரும் சமமாக கருதப்படுவார்கள். அவர்கள் அரவணைத்துச் செல்லப்படுவார்கள். அவர்கள் பாதுகாக்கப்படுவார்கள் என்பதுதான் சத்தியம்.
  இது தான் அதற்குரிய உண்மையான விளக்கம்.

  தேர்தல் காலத்தில் சொல்கிற கருத்துக்களை திரித்து மறைத்து செய்திகளை வெளியிட வேண்டாம் என கூறிக்கொண்டு சட்டமன்றத்தில் முதல்வர் கூறிய கருத்து ஆறு மாதத்தில் சாதிரீதியான கணக்கெடுப்பு முடிவுற்ற பின்பு அவரவர்களுக்கு ஏற்ற உரிய பிரதிநிதித்துவத்தில் இந்த உள் ஒதுக்கீடு வழங்கப்படும். அ.தி.மு.க அரசின் மீது உறுதியான நம்பிக்கை வைத்திருக்கிற சமுதாய மக்களின் மன வருத்தத்தை ஏற்படுத்துகிற வகையில் யாரேனும் செய்திகளை வெளியிடுவார்களேயானால் அதற்கு நான் கடுமையான கண்டனத்தை தெரிவிக்கின்றேன்’ என்று தெரிவித்தார்.


  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Karthick S
  First published: