ரேஷன் கடைகளில் கைரேகை பதிவு செய்யும் இயந்திரத்தில் தொடரும் தொழில்நுட்ப கோளாறு காரணமாக பொதுமக்கள் பொருட்களை பெறுவதில் சிரமம் ஏற்படுகிறது. இதனை தவிர்க்க உணவு பொருள் வழங்கல் துறை ஆணையர் புதிய உத்தரவை பிறப்பித்துள்ளார்.
தமிழகத்தில் ரேஷன் கடைகளில் பொருட்களை வாங்குவதற்கு பயோமெட்ரிக் முறை பயன்படுத்தப்படுகிறது. ஒருசில வேளைகளில் பயோமெட்ரிக் இயந்திரங்களில் கோளாறு ஏற்படுவதால் பொருட்களை பெறுவதில் சிரமம் ஏற்படுகிறது. இது தொடர்பாக கடையின் ஊழியர்கள், பொதுமக்கள் இடையே சில சமயங்களில் வாக்குவாதங்களும் ஏற்படுகின்றன.
இதனை தவிர்க்கும் விதமாக உணவு பொருள் வழங்கல் துறை ஆணையர் புதிய உத்தரவை பிறப்பித்துள்ளார். அதன்படி, தொழில்நுட்ப கோளாறுகள் ஏற்பட்டால் QR கோட்டினை ஸ்கேன் செய்து வழங்க வேண்டும் மற்றும் குடும்ப அட்டையின் எண்ணை விற்பனை முனையத்தில் பதிவுசெய்து வழக்க வேண்டும் என்ற 2 முறைகளில் ரேசன் பொருட்களை தடையின்றி வழங்க உத்தரவிட்டுள்ளார்.
மேலும் 2020 ஆம் ஆண்டு முதல் பயன்படுத்தப்பட்டு வரும் இடங்களில் அவ்வப்போது தொழில்நுட்ப மேம்பாடுகள் செய்யப்பட்டு வருவதால், கோளாறுகள் ஏற்பட அரிதினும் அரிதாகவே நடக்கும் என்று தெரிவித்துள்ள உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை ஆணையர், விற்பனை முனைய இயந்திரங்கள் கையாளுதல் மற்றும் அனைத்து வழிமுறைகளிலும் வினியோகம் மேற்கொள்ள நியாய விலைக் கடை ஊழியர்களுக்கு பயிற்சி வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: பாழடைந்து போன வேலுநாச்சியார், மருது சகோதரர்களின் போர் பயிற்சிக்கூடம்
மண்டல மற்றும் வட்டார அளவில் அனைத்து பணியாளர்களுக்கும் பயிற்சி வழங்குமாறு உணவுப் பொருள் வழங்கல் துறை துணை ஆணையர்கள் மற்றும் மாவட்ட வழங்கல் அலுவலர்களுக்கு இந்த உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.