தை திருநாளை சிறப்பாக கொண்டாடும் வகையில்
ரேஷன் கடைகளில் 21 தொகுப்புகள் கொண்ட பொங்கல் பரிசு வழங்கப்பட்டது. ரேஷன் கடையில் வழங்கப்பட்ட பரிசு தொகுப்பின் பொருட்களில் தரம் குறைபாடாக இருப்பதாக பல இடங்களிலிருந்து புகார் எழுந்தன.
பொங்கல் தொகுப்பில் இடம் பெற்றிருந்த வெல்லம், பருப்பு உள்ளிட்டவை மிகவும் தரமின்றி இருந்ததாக சமூக வலைதளங்களில் வீடியோக்கள் வெளியாகி வைரலானது. மேலும் பொங்கல் பரிசு தொகுப்பில் பல கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றதாக எதிர்கட்சிகள் புகார் தெரிவித்தன. பொங்கல் பரிசு தொகுப்பு மீது அடுத்தடுத்து புகார் எழுந்ததால் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இது தொடர்பான விசாரணை நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பின்னர் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் பொங்கல் பரிசு பொருட்கள் வழங்குவதில் சில இடங்களில் பொருட்களின் தரம் குறித்த புகார்கள் வந்ததை தொடர்ந்து விரிவான விசாரணை மேற்கொள்ளப்பட்டது. சில இடங்களில் கொள்முதல் செய்த பொருட்களின் தரத்தை உறுதிப்படுத்துவதில் மெத்தனமாக செயல்பட்ட தமிழ்நாடு குடிமைப்பொருள் வழங்கல் முதுநிலை தரக்கட்டுப்பாட்டு மேலாளரை பணி இடைநீக்கம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
Also Read : குடியரசு தலைவராக உங்களுக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிகிறதே? கையெடுத்து கும்பிட்ட தமிழிசை!
பொங்கல் பரிசு பொருட்கள் வழங்கியதில் சில இடங்களில் ஏற்பட்ட குளறுபடிகளை மிக விரிவாக விசாரணை செய்து முதலமைச்சரிடம் விளக்கப்பட்டு உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இனிவரும் காலங்களில் நியாயவிலை கடைகளில் வழங்கப்படும் பொருட்களின் தரத்தை உறுதிப்படுத்த விரிவான வழிகாட்டு நெறிமுறைகள் உருவாக்கப்பட்டு வருவதாகவும் தவல்கள் தெரிவிக்கின்றன.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.