அரக்கோணம் அருகே குடும்பத்தகராறு காரணமாக கர்ப்பிணி பெண் விஷம் குடித்து தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த அரும்பாக்கம் பகுதியைச் சேர்ந்த மோகனா (வயது 23). இவருக்கும் அதேப்பகுதியை சேர்ந்த மூர்த்தி என்பவருக்கு கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. மூர்த்தி ராணுவத்தில் பணியாற்றி வருகிறார். மோகனா 7 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். தற்போது மூர்த்தி விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்துள்ளார். இந்நிலையில் கணவன் மனைவி இடையே குடும்பத் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
குடும்பத் தகராறு காரணமாக மனஉளைச்சலில் இருந்த மோகனா வீட்டில் இருந்த எலி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனைக் கண்ட உறவினர்கள் உடனடியாக மோகனாவை மீட்டு அரக்கோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்க அனுமதித்துள்ளனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் மோகனா மற்றும் வயிற்றில் இருந்த குழந்தை ஏற்கனவே உயிரிழந்ததாக உறவினர்களிடம் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து மருத்துவமனை நிர்வாகம் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீஸார் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் திருமணமாகி நான்கு ஆண்டுகள் ஆனதால் கோட்டாட்சியர் விசாரணைக்கு உட்படுத்த காவல்துறையினர் கோட்டாட்சியருக்கு பரிந்துரை செய்துள்ளனர். குடும்ப தகராறா அல்லது வேறு ஏதேனும் காரணம் இருக்கிறதா என்பது குறித்தும் காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்காணும் எண்களுக்கு அழைக்கவும். மாநில உதவிமையம்: 104 ; சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050
Published by:Ramprasath H
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.