காவல் துணை ஆய்வாளர் எனக் கூறி பல லட்சங்களை மோசடி செய்த பெண் ராணிப்பேட்டையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
ராணிப்பேட்டை ஆற்காடு இந்திரா நகர் பகுதியை சேர்ந்தவர் தினேஷ்குமார்( வயது 43). இவர் வேலுார் எஸ்பி அலுவலகத்தில் கடந்த 25ம் தேதி புகார் மனு அளித்தார். அதில், சப் இன்ஸ்பெக்டர் என்று ஒரு பெண் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டு, 14 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து எஸ்பி ராஜேஷ் கண்ணன் உத்தரவின் பேரில், மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதில், புகார்தாரரின் தகவல்கள் அடிப்படையில், வேலுார் ஆற்காடு ரோட்டில் உள்ள லாட்ஜில் தங்கியிருந்த பெண்ணிடம், சந்தேகத்தின் அடிப்படையில் நேற்று போலீசார் விசாரணை நடத்தினர்.
Also Read: நள்ளிரவில் குடிபோதையில் கல்லூரி மாணவர்கள் அடாவடி.. போலீசாரை ஆபாசமாக பேசி தாக்குதல்.. சென்னையில் அதிர்ச்சி சம்பவம்..
அப்போது, முன்னுக்குபின் முரணாக பதில் அளித்ததால், அந்த பெண்ணை எஸ்பி அலுவலகத்துக்கு அழைத்து சென்று தீவிர விசாரணை நடத்தினர். அதில், சப் இன்ஸ்பெக்டர் என்று அந்த பெண் அடையாளப்படுத்தி கொண்டு, பலரிடம் பல லட்சம் ரூபாய் அளவுக்கு மோசடியில் ஈடுபட்டு இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் தரப்பில் கேட்டபோது, வேலுார் சேண்பாக்கம் பகுதியை பூர்வீகமாக கொண்டவர் ரோகினி (வயது 32). இப்போது, காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார் சத்திரம் பகுதியில் தன் கணவருடன் வசித்து வருகிறார்.
இந்நிலையில், தினேஷ்குமாருக்கு அவரின் நண்பர் ஒருவர் மூலமாக, சில மாதங்களுக்கு முன்பு இந்த பெண் அறிமுகமாகியுள்ளார். அப்போது, போலீஸ் யூனிபார்மில் உள்ள போட்டோ மற்றும் போலி ஐடி கார்டினை காண்பித்து, தான் சென்னையில் சப் இன்ஸ்பெக்டராக பணிபுரிவதாகவும், தற்போது சஸ்பெண்ட் நடவடிக்கையில் இருப்பதாகவும் ரோகினி தெரிவித்துள்ளார்.
Also Read: காரை உரிய நேரத்தில் டெலிவரி செய்யவில்லை என ஆனந்த் மஹேந்திரா மீது மோசடி வழக்கு - சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு
போலீஸ் துறையில் குற்ற வழக்குகளில் சிக்கிய டூ வீலர் முதல் கார் வரையிலான வாகனங்களை குறைந்த விலையில் பெற்று தருவதாக, தினேஷ்குமாருக்கு ஆசைவார்த்தை கூறியுள்ளார். அதன்பேரில், ரோகினியிடம் இன்னோவா காருக்கு 7 லட்சம் ரூபாய் பணமாகவும், மற்றொரு காருக்கு 7 லட்சம் ரூபாய் பணத்தை வங்கி கணக்கு மூலமாகவும் தினேஷ்குமார் வழங்கியுள்ளார்.

கைதான ரோகினி
தொடர்ந்து, தினேஷ்குமார் தன் நண்பர்களான சென்னையை சேர்ந்த செந்தில், வேலுாரை சேர்ந்த குமார் ஆகியோரை ரோகினிக்கு அறிமுகப்படுத்தியுள்ளார். அந்த நபர்களிடமும் தலா 5 லட்சம் ரூபாய் பெற்று கொண்டு மோசடி செய்துள்ளார். முதல்கட்ட விசாரணையில், மேற்குறிப்பிட்ட நபர்களிடம் மொத்தம் 24 லட்சம் ரூபாய் மோசடி செய்திருப்பது தெரியவந்துள்ளது. மேலும், வேலுாரில் தான் போலீஸ் என்று போலீஸ் யூனிபார்ம் அணிந்து வலம் வந்த விவகாரம் தொடர்பாக, பாகாயம் போலீசில் 2012ம் ஆண்டு வழக்குப்பதிவு செய்து கைதும் செய்யப்பட்டுள்ளார்.
இதன் அடுத்தக்கட்டமாக, இப்போது சப் இன்ஸ்பெக்டர் என்று மோசடியில் ஈடுபட்டுள்ளார். அதோடு, தமிழகத்தில் பல இடங்களில் பல பேரிடம், மேலும் பல லட்சம் ரூபாய் அளவுக்கு மோசடியில் ஈடுபட்டிருப்பதற்கு வாய்ப்பு உள்ளது. இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த மோசடிக்கு எல்லாம் உடந்தையாக ரோகினியின் கணவர் சந்துருவும் இருப்பதாக தெரியவந்துள்ளது.
அவரின் வங்கி கணக்கு மூலமாக தான் பணம் கைமாறி உள்ளது.” எனத் தெரிவித்தனர்.
இதையடுத்து, தவறான முறையில் போலீஸ் யூனிபார்ம் அணிந்து, ஆசை வார்த்தை கூறி மோசடியில் ஈடுபட்டது தொடர்பாக, மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் மொத்தம் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து ரோகினியை கைது செய்தனர்.
செய்தியாளர் - செல்வம் (வேலூர்) இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.