Home /News /tamil-nadu /

கச்சத்தீவு அந்தோணியார் ஆலயத் திருவிழா - 81 பக்தர்கள் கச்சத்தீவு பயணம்

கச்சத்தீவு அந்தோணியார் ஆலயத் திருவிழா - 81 பக்தர்கள் கச்சத்தீவு பயணம்

ராமேஸ்வரம்

ராமேஸ்வரம்

கொரோனா பரவலால் கடந்த 2 வருடங்களாக தடைப்பட்டிருந்த திருவிழா, தற்போது நடத்தப்படுகிறது.

    கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழாவில், தமிழகத்தைச் சேர்ந்த பக்தர்கள் பங்கேற்றுள்ளனர்.

    ராமேஸ்வரம் அருகே நடுக்கடலில் உள்ள கச்சத்தீவில், புனித அந்தோணியார் ஆலயம் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறும். கொரோனா பரவலால் கடந்த 2 வருடங்களாக தடைப்பட்டிருந்த திருவிழா, தற்போது நடத்தப்படுகிறது. திருவிழாவில் தமிழக பக்தர்கள் 100 பேர் மட்டும் கலந்து கொள்ள இலங்கை அரசு அனுமதி வழங்கியது. இதையடுத்து கச்சத்தீவு திருவிழாவில் கலந்து கொள்வதற்காக 81 பேர், ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்திற்கு சென்றனர்.

    சுங்கத்துறை, காவல்துறை மற்றும் சுகாதாரத்துறையினரின் முழுமையான சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்பட்ட பக்தர்கள், 3 விசைப்படகுகள், 1 நாட்டுப்படகு மூலம் கச்சத்தீவிற்கு புறப்பட்டனர். கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழா, வெள்ளிக்கிழமை மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து தேர்பவனி, பிரார்த்தனைகள் நடைபெற்று, இலங்கை - இந்திய பங்கு தந்தைகளின் கூட்டு திருப்பலியுடன் திருவிழா நிறைவடையும்.

    இந்த ஆலய திருவிழாவில், இந்தியா - இலங்கை மீனவ பிரதிநிதிகளை சந்தித்து, மீனவர் பிரச்னை குறித்து கலந்து ஆலோசிக்க உள்ளதாக தமிழக மீனவர் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர். கச்சத்தீவு திருவிழாவை முன்னிட்டு, பாதுகாப்பு நலன் கருதி 800க்கும் மேற்பட்ட விசைப்படகுகளும், 300க்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகளும் ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ளன.

     
    Published by:Ramprasath H
    First published:

    Tags: Festival, Fisher man, Rameshwaram

    அடுத்த செய்தி