ராமநாதபுரம் இளைஞர் கொலை - நான்கு பேரைப் பிடித்து போலீசார் விசாரணை

ராமநாதபுரத்தில் இளைஞர் ஒருவர் 12 பேர் கொண்ட கும்பலால் படுகொலை செய்யப்பட்டார்.

  • News18
  • Last Updated: September 2, 2020, 9:43 AM IST
  • Share this:
ராமநாதபுரம் கள்ளர் தெருவைச் சேர்ந்த சுவாமிநாதன் மகன் 23 வயதான அருண்பிரகாஷ். அதே பகுதியைச் சேர்ந்த சுரேஷ் மகன் 20 வயதான யோகேஸ்வரன். கூலித் தொழிலாளர்களான இவர்கள் இருவரும் திங்கட்கிழமை மாலை கள்ளர் தெரு சந்திப்பில் நின்று கொண்டிருந்தனர்.

அப்போது மோட்டார் சைக்கிள்களில் பயங்கர ஆயுதங்களுடன் சென்ற 10க்கும் மேற்பட்டோர் கொண்ட கும்பல், அருண்பிரகாஷ் மற்றும் யோகேஸ்வரனை சுற்றி வளைத்தது. அவர்களிடமிருந்து தப்பிக்க இருவரும் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். ஆனால் அவர்களை விடாமல் துரத்திச் சென்ற அந்த கும்பல், சரமாரியாக அரிவாளால் வெட்டியும், கத்தியால் குத்தியும் உள்ளது.

இதில் இரத்த வெள்ளத்தில் இருவரும் கீழே சரிந்துள்ளனர். அருகில் இருந்தவர்கள் அந்த கும்பலை விரட்டியவுடன் அங்கிருந்து அவர்கள் தப்பிச் சென்றனர். பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய இருவருரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி அருண் பிரகாஷ் உயிரிழந்தார்.


முதலுதவி சிகிச்சைக்குப்பின் யோகேஸ்வரனுக்கு தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து தகவல் அறிந்து சென்ற கேணிக்கரை போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

குற்றவாளிகளை கைது செய்யும் வரை உடலை வாங்க மாட்டோம் எனக்கூறி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  இரவுக்குள் குற்றவாளிகளை கைது செய்வதாக போலீசார் அளித்த வாக்குறுதியை ஏற்று உறவினர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் அருண் பிரகாஷ் மற்றும் யோகேஸ்வரன் இருவரும் நண்பர்கள். இவர்கள் முன்விரோதம் காரணமாக திங்கட்கிழமை நண்பகல் 12 மணி அளவில் வைகைநகரைச் சேர்ந்த சரவணன் நாகநாதபுரத்தைச் சேர்ந்த சபிக் ரகுமான் ஆகியோரை தாக்கியுள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த அவர்கள், நண்பர்கள் லெப்ட் ஷேக் உள்ளிட்டவர்களுடன் சென்று கள்ளர் தெரு சந்திப்பில் நின்று கொண்டிருந்த அருண்பிரகாஷ் மற்றும் யோகேஷ்வரனிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர்.

பின்னர் சரமாரியாக வெட்டி கொலை செய்தது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. லெப்ட் சேக் உடன் ராமநாதபுரத்தைச் சேர்ந்த இம்ரான்கான், சரவணன், வெற்றி, சதாம், ஹக்கிம், வாப்பா என்ற ரஷீக், அசார் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்டவர்கள் கொலையில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது.

அவர்கள் மீது வழக்கு பதிவு செய்த போலீசார், முகமது ரியாஸ், காமாட்சி, சுரேஷ், சாகுல் ஹமீது ஆகிய 4 பேரை பிடித்து விசாரித்து வருகின்றனர். லெப்ட் சேக் உள்ளிட்டவர்களை தேடி வருகின்றனர். அருண் பிரகாஷ் விநாயகர் சதுர்த்தி கமிட்டியில் வசூல் செய்யும் பொறுப்பில் கடந்த வருடம் இருந்ததாக கூறப்படுகிறது. அதில் ஏதேனும் முன்விரோதம் இருக்குமா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த கொலையில் முக்கிய குற்றவாளியான லெப்ட் சேக் ஒரு வருடத்திற்கு முன்பு இந்து முன்னணியின் ராமநாதபுரம் மாவட்ட செயற்குழு உறுப்பினரான திருப்புல்லாணி சக்திவேலை கொலை செய்ய முயன்றதாக அவர் மீது பதிவு செய்யப்பட்ட கொலை முயற்சி வழக்கு நிலுவையில் உள்ளது. அதனால் மதரீதியான முன்விரோதம் ஏதும் உள்ளதா என போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்

இந்த கொலையில் தொடர்புடைய குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்ய வேண்டும் எனக்கூறி உறவினர்கள் மருத்துவமனை முன்பு காலையிலும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் காவல் துணை கண்காணிப்பாளர் வெள்ளத்துரை தலைமையிலான போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை அமைதி படுத்தினர்.
First published: September 2, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading