பரமக்குடி அருகே மதுபோதையில் கர்ப்பிணி பெண்ணை அரிவாளால் வெட்டிய ஊராட்சி மன்ற தலைவரின் தம்பி குறித்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என பாதிக்கப்பட்டோர் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே வாணிய வல்லம் கிராமத்தைச் சேர்ந்த மருதன் மகன் கோபிநாதன்(32) இவர் அடிக்கடி மது அருந்திவிட்டு ஊர் மக்களிடம் தகராறில் ஈடுபடுவதாக கூறப்படுகிறது. கோபிநாதனின் சகோதரர் நாகநாதன் வாணிய வல்லம் கிராமத்தில் ஊராட்சி மன்ற தலைவராக உள்ளார்.
இந்நிலையில் அதே ஊரைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன் மனைவி லதா(36). இவரது மகன் சந்தோஷ் வீட்டிற்கு அருகே விளையாடிக் கொண்டிருக்கும் பொழுது மதுபோதையில் வந்த கோபிநாதன் சந்தோஷை ஆபாச வார்த்தைகளில் திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் சிறுவன் கண்ணீருடன் அவரது வீட்டிற்கு சென்று தெரிவித்தார் இதனைக் கேட்ட சந்தோஷின் தாத்தா முத்து கோபிநாதனிடம் பேரனை எதற்காக ஆபாச வார்த்தைகளில் திட்டினார் என்று கேட்டபொழுது அவரையும் தாக்கிவிட்டு ஆபாச வார்த்தைகளில் திட்டினார்.
இதனால் கோபமடைந்த லதா அவரது தங்கை ராசாத்தி, தாயார் பாஞ்சா ஆகிய மூவரும் கோபிநாதனிடம் வாய்த் தகராறில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் மூவரையும் கோபிநாதன் கற்களால் தாக்கி விட்டார். இதில் காயமடைந்த லதா,ராசாத்தி,பாஞ்சா ஆகிய மூவரும் வீட்டிற்கு சென்று கதவை பூட்டிக் கொண்டனர். பின் கோபிநாதன் அருகில் அவரது வீட்டிற்கு சென்று அரிவாளை எடுத்து வந்து மூன்று பெண்களையும் சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் மூன்று மாத கர்ப்பிணியான ராசாத்திக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார்.
இதையும் படிங்க: சென்னையில் மட்டும் நடப்பாண்டில் 117 பேர் குண்டர் சட்டத்தில் கைது!! காவல்துறை தகவல்
பின் மூவரும் பரமக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து நயினார்கோவில் காவல் நிலையத்தில் லதா புகார் அளித்தார். இந்த புகாரை காவல்துறையினர் நியாயமான முறையில் விசாரிக்கவில்லை என்று கூறப்படுகிறது . கோபிநாதனின் சகோதரர் நாகநாதன் வாணிய வல்லம் கிராமத்தில் ஊராட்சி மன்ற தலைவராக பதவியில் இருப்பதால் வழக்கு சம்பந்தமாக எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என காயம்பட்ட மூன்று பெண்களும் வேதனை தெரிவித்துள்ளனர்.
செய்தியாளர்: கு.தமிழ்ச்செல்வன் - ராமநாதபுரம்இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.