இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட ராமேஸ்வரம் மீனவா்கள் 15 போ் தமிழகம் திரும்பினர்.
ராமேஸ்வரம் மீனவா்கள் கடந்த பிப்ரவரி மாதம் 8ஆம் தேதி எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி, இலங்கை கடற்படையினரால் மீனவர்கள் 15 பேர் கைது செய்யப்பட்டனர்.பின்னர், இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவர்களை, விடுதலை செய்ய அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன் படி அவர்கள் விடுவிக்கப்பட்டனர். இந்நிலையில், கொழும்புவில் இருந்து விமானம் மூலம் அவர்கள் சென்னை வந்தடைந்தனர். தமிழக மீன்வளத்துறை அதிகாரிகள் அவர்களை வரவேற்று, ராமேஸ்வரத்திற்கு வாகனம் மூலம் அனுப்பி வைத்தனர். இதற்கிடையில், பறிமுதல் செய்யப்பட்ட படகுகளையும் விடுவிக்க வேண்டும் என தமிழக மீனவா்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில், இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 16 பேரை, உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தி, ராமேஸ்வரம் மீனவர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடந்த 23-ம் தேதி, கச்சத் தீவு அருகே ராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டு இருந்தனர். அப்போது, ஒரு விசைப்படகில் மீன் பிடித்துக் கொண்டிருந்த 12 மீனவர்கள் எல்லை தாண்டி வந்ததாக கூறி, இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.
இதேபோன்று, நெடுந்தீவு அருகே ஒரு படகில் மீன் பிடித்துக் கொண்டிருந்த மண்டபம் பகுதியை சேர்ந்த மீனவர்கள் 4 பேரை கைது செய்து, படகையும் சிறைபிடித்தனர். இதையடுத்து, ராமேஸ்வரம் செட்டிப்பகுதியில் மீனவர்களின் அவசரக் கூட்டம் நடைபெற்றது. அப்போது, இலங்கை கடற்படையை கண்டித்தும், கைது செய்யப்பட்ட 16 மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தியும் தொடர் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்யப்பட்டது.
Must Read : 15 ஆண்டுகளாக மின்சாரம், குடிநீர் வசதி இன்றி தவிக்கும் அரசு பள்ளி மாணவர்கள் - நடவடிக்கை எடுக்க கோரிக்கை!
அதன்படி, ராமேஸ்வரம் மற்றும் மண்டபம் மீனவர்கள் இன்று முதல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அத்துடன், தமிழக மீனவர்களை மீட்டு வர மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.
Read More : சிதம்பரத்தில் 144 தடை உத்தரவு வாபஸ்... கோட்டாட்சியர் அறிவிப்பு
மீனவர்களின் இந்த போராட்டத்தால், ராமேஸ்வரம் துறைமுகத்தில் நூற்றுக்கணக்கான படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.