பரமக்குடி அரசு மருத்துவமனையில் உள்நோயாளிகள் பிரிவின் நுழைவாயிலில் கொரோனா பாதித்தவரின் சடலம் கேட்பாரற்று கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் தற்போது 3151 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு தினசரி பாதிப்பு என்பது 300க்கும் குறைவாக உள்ளநிலையில், இதுவரை 250 பேர் உயிரிழந்துள்ளனர். தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனைகளில் வீடுகளில் தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில்,திருவாடானை பகுதியைச் சேர்ந்த ஆசிரியர் மணிகண்டன் (39 சில தினங்களுக்கு முன்பு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து, பரமக்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.இந்நிலையில் நோயின் தாக்கம் தீவிரமானதையெடுத்து சிகிச்சைக்காக பரமக்குடி அரசு மருத்துவமனையில் மணிகண்டனை உறவினர்கள் அனுமதித்தனர்.
எனினும் சிகிச்சை பயனின்று மணிகண்டன் உயிரிழந்தார். இந்நிலையில் இறந்தவுடன் அவரது உடல் சரியாக பேக்கிங் செய்யப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. இதனால் மணிகண்டனின் உடல் உள்நோயாளிகள் பிரிவின் நுழைவு வாயிலில் ஒரு மணி நேரமாக மேல் ஸ்ட்ரெச்சரில் கேட்பாரற்று கிடந்தது.
மேலும் படிக்க: வாட்ஸ் அப் மெசேஜ்களை வேவு பார்க்கிறதா மத்திய அரசு?
அதன் பின்னர், சடலம் அப்புறப்படுத்தப்பட்டது. இதுபற்றி மருத்துவமனை அதிகாரியிடம் கேட்டபோது சரியான பதில் அளிக்கவில்லை.
கொரோனா பாதித்து இறந்தவரின் உடல் எவ்வித பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்படாமல் உள் நோயாளிகள் பிரிவில் கிடத்தப்பட்டதால் மருத்துவமனையில் சிறிது நேரம் பதட்டம் ஏற்பட்டது.
செய்தியாளர்: தமிழ்செல்வன்
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.