ராமநாதபுரத்தில் ஆயுதப்படை காவலர் தூக்கிட்டு தற்கொலை; பணிச்சுமை காரணமா?

தற்கொலை செய்து கொண்ட காவலர்

பணிச்சுமை காரணமாக காவலர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாரா என போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். 

 • Share this:
  ராமநாதபுரத்தில் ஆயுதப்படை காவலர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  ராமநாதபுரம் மாவட்ட காவல்துறையில் ஆயுதப் படையில் காவலராக பணியாற்றி வந்தவர் அசோக்குமார். இவர் கடந்த 2010ம் ஆண்டு காவல்துறையில் சேர்ந்தார். இதே துறையில் இவரின் மனைவி சித்ராதேவி அனைத்து மகளிர் காவல் துறையில் காவலராக பணியாற்றி வருகிறார். இவர்கள் இருவருக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமான நிலையில், ஒரு வயதில் பெண் குழந்தை உள்ளது.

  இந்நிலையில், இருவருக்கும் கடந்த ஒரு மாத காலமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகவும் இதனால் அசோக்குமார் பல்வேறு மன அழுத்தத்தில் இருந்ததாகவும், அதேநேரத்தில் காவல்துறையில் தொடர்ச்சியாக பணியாற்றி வந்ததால் அசோக்குமார் மன விரக்தியில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

  இந்நிலையில், ஆயுதப்படை காவலர் குடியிருப்பு பகுதியில் இருந்த அசோக்குமார் இன்று காலை திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

  இதை அறிந்த கேணிக்கரை காவல் துறை ஆய்வாளர் மலைச்சாமி தலைமையிலான காவலர்கள் சம்பவ இடத்திற்கு வந்து உடலை கைப்பற்றி ராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர்.

  மேலும் பணியின் காரணமாக அசோக்குமார் உயிர் இறந்தாரா அல்லது குடும்ப தகராறில் உயிரிழந்தாரா என்பது பற்றி காவல்துறையினர் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர். அசோக்குமாரின் சொந்த ஊர்  திருப்பாச்சேத்தி அருகேயுள்ள வேலாங்குளம் என்பது குறிப்பிடத்தக்கது.

  செய்தியாளர் - பொ.வீரக்குமரன்  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Esakki Raja
  First published: