இலங்கையில் இருந்து பாக் ஜலசந்தி கடல் வழியாக இந்தியா வரை நீந்தி மாற்றுத்திறனாளி சிறுமி சாதனை
மும்பையை சேர்ந்த மாற்றுதிறனாளி சிறுமி இலங்கை தலைமன்னார் முதல் தனுஷ்கோடி அரிச்சல்முனை வரையிலான பாக் ஜலசந்தி கடல் பகுதியில் 13. 10 மணி நேரத்தில் நீந்தி கடந்தார்.
மும்பையில் உள்ள இந்திய கடற்படை நிலையத்தில் பணிபுரியும் மதன்ராய். அவரது மனைவி ரெஜினா ராய். இவர்களது மகள் ஜியாராய் (வயது13). சிறுமி ஜியாராய் ஆட்டிசம் ஸ்பெக்டரம் பாதிப்புக்குள்ளானவர். மேலும் இச்சிறுமி வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி.
இவர் மும்பை கடற்படை பள்ளியில் படிக்கிறார். 2021 ஆம் ஆண்டு மும்பை கடலில் 36 கிலோமீட்டர் நீந்தி சாதனை படைத்தார். இவரது சாதனையை பிரதமர் மோடி 'மான் கி பாத்’ நிகழ்ச்சியில் பாராட்டினார். இந்நிலையில் இலங்கை தலைமன்னார் முதல் தனுஷ்கோடி அரிச்சல்முனை வரை 29 கிலோ மீட்டர் தொலைவுள்ள பாக் ஜலசந்தி கடற்பகுதியை நீந்தி கடப்பதற்காக கடந்த மாதம் டெல்லியில் உள்ள வெளியுறவுத்துறை, பாதுகாப்புதுறை அமைச்சகங்கள் மற்றும் இலங்கை தூதரகத்திற்கு அனுமதி கோரி கடிதம் அனுப்பி இருந்தார்.
இந்திய-இலங்கை இரு நாட்டு அனுமதியும் கிடைத்த நிலையில் இலங்கையிலுள்ள தலைமன்னாரிலிருந்து நேற்று அதிகாலை 4.22 மணிக்கு மும்பையை சேர்ந்த மாற்றுதிறனாளி சிறுமி நீந்த துவங்கினார். மதியம் 02.10 மணியளவில் இலங்கை - இந்திய சர்வதேச எல்லைக்கு வந்தடைந்தார். மாலை 5.32 மணியளவில் தனுஷ்கோடி அரிச்சல்முனை வந்தடைந்தார். சிறுமி 13 மணிநேரம் 10 நிமிடத்தில் கடந்துள்ளார்.
Also Read: யோகாசனத்தில் 2-வது முறையாக கின்னஸ் சாதனை.. பள்ளி மாணவி அசத்தல்.. ஆட்சியர் நேரில் சென்று பாராட்டு
கடலில் நீந்தி வந்த சிறுமியை தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திர பாபு பூங்கொத்து கொடுத்து வரவேற்று சிறுமியை வாழ்த்தினார். மேலும் ஆட்டிசம் பாதிக்கப்பட்ட குழந்தைகளால் எதையும் சாதிக்க முடியும் என்பதற்கு ஜியாராய் ஒரு எடுத்துக்காட்டு, கடலில் உளன்ள பல சவால்களை கடந்து சிறுமி சாதனை படைத்துள்ளதாக சைலேந்திர பாபு பாராட்டினார்.
இவர்களுக்கு உதவியாக இலங்கை கடற்படையின் ரோந்து படகு சர்வதேச எல்லை வரையிலும், இந்திய கடற்பகுதியில் மெரைன் போலீஸார் மற்றும் இந்திய கடலோர காவல்படையின் ஹொவர் கிராஃட் கப்பலும் பாதுகாப்பினை வழங்கினர்.
செய்தியாளர்: சேது குமரன் ( இராமேஸ்வரம்)
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Dhanushkodi, Record, Srilanka, Sylendra Babu