ராமநாதபுரம் மாவட்டம் கொட்டகை கிராமத்தைச் சேர்ந்தவர் 20 வயதுடைய ரேஷ்மா. இவருக்கும் பரமக்குடி அருகே செல்லூர் கிராமத்தை சேர்ந்த விமல்ராஜ் என்பவருக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 3 வயதில் பெண் குழந்தையும், 10 மாத ஆண் குழந்தையும் உள்ளது.
இந்த நிலையில் ரேஷ்மாவுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த தென்னரசு என்பவருக்கும் முறையற்ற உறவு இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது இரவு நேரத்தில் விமல்ராஜ் வீட்டில் இல்லாத நேரத்தில் தென்னரசு, ரேஷ்மாவை சந்தித்து சென்றதாக கூறப்படுகிறது. ஒருநாள் இரவு ரேஷ்மாவை சந்தித்து விட்டு தென்னரசு சுவர் ஏறிக் குதித்துச் சென்றதை, அதே பகுதியைச் சேர்ந்த முத்துக்குமாரும், பாலமுருகனும் பார்த்துள்ளனர்.
இந்த நிலையில், முத்துக்குமார், பாலமுருகன், ஆகியோர் விமல்ராஜுடன் ஒருநாள் மது அருந்திக் கொண்டிருந்த போது தென்னரசு சுவர் ஏறிக்குதித்து சென்றது குறித்து கூறியுள்ளனர். மதுபோதையில் ஆத்திரத்தின் உச்சிக்கே சென்ற விமல்ராஜ் தனது மனைவி ரேஷ்மாவை கடுமையாக அடித்து உதைத்ததாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து ரேஷ்மா, முத்துக்குமாரையும், பாலமுருகனையும் செல்போனில் தொடர்பு கொண்டு, தென்னரசு குறித்து எதற்காக தனது கணவரிடம் கூறினீர்கள் என கேள்வி எழுப்பியுள்ளார். அவர்கள் இருவரின் பெயரையும் எழுதி வைத்துவிட்டு தான் தற்கொலை செய்து கொள்வேன் என மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.
தனது கணவனுக்கு கள்ளத் தொடர்பு தெரிந்த நிலையில், மனமுடைந்த ரேஷ்மா கடந்த 5ம்தேதி வீட்டில் தனிமையில் இருந்தபோது தன் குழந்தையின் தொட்டில் கயிற்றில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். தற்கொலைக்கு முன்பாக தனது மரணத்திற்கு பாலமுருகனும், முத்துகுமாரும் தான் காரணம் என்று கடிதம் எழுதி வைத்து விட்டு ரேஷ்மா தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
திருமணமான பெண் என்பதால், பரமகுடி உட்கோட்ட கோட்டாட்சியர் முன்னிலையில் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இச்சம்பவம் குறித்து கீழத்தூவல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வந்த நிலையில், முத்துக்குமார், பாலமுருகன் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். அவர்கள் மீது தற்கொலைக்கு தூண்டுதல் என்ற பிரிவின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தகாத உறவால் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரமகுடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-----------------------------------------------------------------------------------------------
மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்காணும் எண்களுக்கு அழைக்கவும்.மாநில உதவிமையம்: 104
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.