ராமநாதபுரம் நகர் பகுதியில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணை கம்பியால் தாக்கி ஐந்து பவுன் நகையை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
ராமநாதபுரம் நகராட்சி பகுதியான தங்கப்பா நகர் 3வது தெருவில் வசித்து வந்தவர் சுமைதூக்கும் தொழிலாளர் ஜெயச்சந்திரன், இவர் சில மாதங்களுக்கு முன் உயிரிழந்த நிலையில், அவருடைய மனைவி ராசாத்தி (59) மற்றும் மகன்கள் சங்கர் (31) ராஜு (28) ஆகியோர் வசித்து வந்துள்ளனர்.
இந்நிலையில் மகன்கள் இருவரும் வழக்கம்போல் வேலைக்கு சென்றுள்ளனர், ராசாத்தி மட்டும் வீட்டில் தனியாக இருந்த நிலையில், சுமார் 2 மணி அளவில் வீட்டில் இருந்த ராசாத்தியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து பார்த்தபோது ரத்தவெள்ளத்தில் ராசாத்தி துடித்துக் கொண்டிருந்துள்ளார்.
இதனை பார்த்த அப்பகுதியினர் காவல்துறைக்கு தகவல் கொடுத்ததையடுத்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அந்த பெண் அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு தலையில் படுகாயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதனிடையே, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திக் மற்றும் தடயவியல் நிபுணர்கள் சோதனை மேற்கொண்டு இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவத்தால் அப்பகுதி முழுவதும் பெரும் பரபரப்பு காணப்பட்டு வருகிறது.
செய்தியாளர் - பொ.வீரக்குமரன்
Published by:Esakki Raja
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.