முகப்பு /செய்தி /தமிழ்நாடு / ராமஜெயம் கொலை வழக்கு.. கொலையாளியை நெருங்கிய போலீசார்?! - காட்டிக்கொடுக்கப்போகும் துருப்புச்சீட்டு!

ராமஜெயம் கொலை வழக்கு.. கொலையாளியை நெருங்கிய போலீசார்?! - காட்டிக்கொடுக்கப்போகும் துருப்புச்சீட்டு!

ராமஜெயம் கொலை வழக்கு

ராமஜெயம் கொலை வழக்கு

உண்மை கண்டறியும் சோதனையின் போது, ராமஜெயம் அணிந்திருந்த நீலக்கல் மோதிரம் மாயமானது தொடர்பான கேள்வி வழக்கை முடிவுக்கு கொண்டுவரும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

தி.மு.க அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரரும், தொழில் அதிபருமான ராமஜெயம் கொலை வழக்கில் உண்மை கண்டறியும் சோதனை நிறைவடைந்துள்ளது. அதன் அறிக்கை ஓரிரு வாரங்களில் திருச்சி ஜெ.எம்.6 நீதிமன்றத்தில் நீதியரசர் சிவக்குமார் முன்னிலையில் தாக்கல் செய்யப்படும் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்நிலையில் 12 பேரிடம் நடத்தப்பட்ட உண்மை கண்டறியும் சோதனையின் போது அனைவரிடமும் பொதுவாக கேட்கப்பட்ட முக்கிய கேள்வி ஒன்று இந்த வழக்கில் திருப்பத்தை ஏற்படுத்துமா? என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மைலாப்பூரில் உள்ள தடய அறிவியல்துறை அலுவலகத்தில் கடந்த 18-ம் தேதி முதல் உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட்டது. டெல்லியில் இருந்து வந்திருந்த மத்திய தடயவியல்துறை நிபுணர்கள், ராமஜெயம் கொலை தொடர்பாக 12 பேரிடமும் கேள்விகளை எழுப்பி பதில்களை வீடியோ பதிவு செய்துள்ளனர். ஒவ்வொரு நபரிடமும் 12-க்கும் மேற்பட்ட கேள்விகள் கேட்கப்பட்டாலும் ஒரு கேள்வி மட்டும் பொதுவானதாகவே இருந்ததாகக் கூறப்படுகிறது. ராமஜெயம் அணிந்திருந்த நீலக்கல் மோதிரம் குறித்த அந்த கேள்விதான் இந்த வழக்கில் துருப்புச் சீட்டாக இருக்கும் என கூறப்படுகிறது.

ராமஜெயம் தனது விரலில் விலை உயர்ந்த நீலக்கல் பதிக்கப்பட்ட தங்க மோதிரத்தை அணிந்திருப்பது வழக்கம். அவர் கொலை செய்யப்பட்ட அன்று அவரது உடலிலிருந்து வாட்ச், மற்றொரு மோதிரம், தங்ச செயின் உள்ளிட்டவை மீட்கப்பட்டன. ஆனால் அவர் அணிந்திருந்த நீலக்கல் மோதிரத்தை மட்டும் காணவில்லை. கொலையாளிகளில் ஒருவர் அந்த மோதிரத்தை எடுத்திருக்க வேண்டும் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இதனால் நீலக்கல் மோதிரம் குறித்த கேள்வியை மட்டும் அனைவரிடமும் பொதுவாக அதிகாரிகள் கேட்டுள்ளனர் எனக் கூறப்படுகிறது.

உண்மை கண்டறியும் சோதனையில் நீலக்கல் மோதிரம் யாரிடம் தற்போது உள்ளது என்பது மட்டும் தெரியவந்தால் ராமஜெயம் கொலை வழக்கு முடிவுக்கு வந்துவிடும் எனக் கூறப்படுகிறது. இந்த கேள்விக்கு விடை கிடைத்ததா? என்பது தடயவியல் நிபுணர்களின் அறிக்கை வெளியான பின்னரே தெரியவரும். தற்போது உண்மை கண்டறியும் சோதனை நிறைவுற்ற நிலையில் கேள்வி பதில் தொடர்பான அனைத்து விபரங்களையும் அறிக்கையாக தயாரிக்கும் பணியில் தடயவியல் நிபுணர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்த அறிக்கையை அவர்கள் விரைவில் சி.பி.சி.ஐ.டி எஸ்.ஐ.டி. எனும் சிறப்பு புலனாய்வு பிரிவு போலீஸாரிடம் வழங்கப்பட உள்ளது.

அந்த அறிக்கை ஓரிரு வாரத்தில் திருச்சி ஜெ.எம்.6 நீதிமன்றத்தில் நீதிபதி முன்னிலையில் தாக்கல் செய்யப்பட உள்ளது. 10 ஆண்டுகளாக ராமஜெயம் கொலை வழக்கின் மர்ம முடுச்சிகள் அவிழ இந்த உண்மை கண்டறியும் சோதனை கை கொடுக்கும் என சி.பி.சி.ஐ.டி போலீஸார் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

First published:

Tags: Crime News, K.N.Nehru, Murder case, Ramajeyam Murder Case, Trichy