தமிழரின் தொன்மையைப் பறைசாற்றும் ஆதிச்சநல்லூர் ஆய்வறிக்கையை வெளியிட வேண்டும்! ராமதாஸ் வலியுறுத்தல்

தமிழரின் தொன்மையைப் பறைசாற்றும் ஆதிச்சநல்லூர் ஆய்வறிக்கையை வெளியிட வேண்டும்! ராமதாஸ் வலியுறுத்தல்
ராமதாஸ்
  • Share this:
ஆதிச்சநல்லூர் தொல்லியல் ஆய்வு அறிக்கையை மத்திய அரசு விரைந்து வெளியிட வேண்டுமென்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

தூத்துக்குடியிலுள்ள ஆதிச்சநல்லூரில் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று இந்த பட்ஜெட் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். இந்தநிலையில், இதுதொடர்பாக பா.ம.க நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’தூத்துக்குடி மாவட்டத்தில் பழந்தமிழர் நாகரிகத்தின் ஆதாரமாகத் திகழும் ஆதிச்சநல்லூரில் தொல்லியல் ஆய்வு மேற்கொள்ளப்பட்ட பகுதியில் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று மத்திய நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழர்களுக்கு அடுத்த மகிழ்ச்சி செய்தி கிடைத்துள்ளது. ஆதிச்சநல்லூர் பகுதியில் 15 ஆண்டுகளுக்கு முன் மேற்கொள்ளப்பட்ட தொல்லியல் ஆய்வுகள் குறித்த இரு அறிக்கைகள் மத்திய தொல்லியல் துறையிடம் ஒப்படைக்கப்பட்டு விட்டன என்பது தான் அதுவாகும்.

மதுரையை அடுத்த கீழடியில் தமிழக தொல்லியல் துறை மேற்கொண்ட ஆராய்ச்சியில் கீழடி தமிழர் நாகரிகம் குறைந்தது 2,600 ஆண்டுகள் பழமையானது என்று தெரியவந்துள்ளது. ஆனால், ஆதிச்சநல்லூர் நாகரிகம் அதைவிட பழமையானதாகும். திருநெல்வேலியில் இருந்து 24 கிலோ மீட்டர் தொலைவில் தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ள ஆதிச்சநல்லூரின் தொல்லியல் சிறப்பு, உலகம் அறிந்ததாகும். அதனால் தான் 1868-ஆம் ஆண்டிலேயே அங்கு தொல்லியல் ஆய்வுகள் தொடங்கப்பட்டன. பின்னர் 1886-ஆம் ஆண்டில் ஜெர்மனியைச் சேர்ந்த தொல்லியல் அறிஞர்களும், 1902-ஆம் ஆண்டில் இங்கிலாந்து நாட்டின் தொல்லியல் அறிஞர் அலெக்சாண்டர் ரீ-யும் ஆதிச்சநல்லூரில் தொல்லியல் ஆய்வு செய்தனர்.


நிறைவாக 2004-05 ஆம் ஆண்டில் மத்திய தொல்லியல் துறை ஆய்வு மேற்கொண்டது. இதுவரை மொத்தம் 4 முறை ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், எகிப்திய பிரமிடுகளில் உள்ளதைவிட பழமையான புதைகுழிகள் ஆதிச்சநல்லூரில் உள்ளன என்று அலெக்சாண்டர் ரீ அறிவித்ததைத் தவிர, ஆதிச்சநல்லூரின் சிறப்புகள் குறித்து அதிகாரப்பூர்வமாக எந்த அறிக்கையும் வெளியிடப்படவில்லை.

மத்திய தொல்லியல்துறை கண்காணிப்பாளர் தியாக.சத்தியமூர்த்தி தலைமையில் 2004-ஆம் ஆண்டில் நடைபெற்ற ஆய்வுகள் மிகவும் விரிவாக அமைந்தன. ஆனால், அதன்பின் 15 ஆண்டுகள் நிறைவடைந்த பிறகும் கூட அதன் முடிவுகள் வெளியிடப்படவில்லை. இதுதொடர்பாக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட பின்னர் இந்த விவகாரத்தில் படிப்படியாக முன்னேற்றம் ஏற்பட்டு வந்த நிலையில், 15 ஆண்டுகளுக்கு முன் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் குறித்த இரு அறிக்கைகள் கடந்த மாதத்தில் தாக்கல் செய்யப்பட்டிருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த அறிக்கைகளை தொல்லியல் துறையின் வெளியீட்டுப் பிரிவு ஆய்வு செய்து, பின்னர் வெளியிடும். இந்த ஆய்வறிக்கை ஆதிச்சநல்லூர் பழந்தமிழர் நாகரிகம் குறித்த வியப்பூட்டும் உண்மைகளை உலகுக்கு தெரிவிக்கும்.

ஆதிச்சநல்லூரில் கிடைத்த இரு பொருட்களை அமெரிக்காவில் ஃப்ளோரிடா நகரிலுள்ள ஆய்வகத்துக்கு அனுப்பி கரிம ஆய்வுக்கு உட்படுத்தியதில், அவற்றில் ஒரு பொருள் கி.மு. 905-ஆம் ஆண்டை சேர்ந்தது என்றும், இன்னொரு பொருள் கி.மு. 791-ஆம் ஆண்டை சேர்ந்தது என்றும் தெரியவந்துள்ளது. வேறு சில ஆதாரங்களையும், சந்தர்ப்ப சாட்சியங்களையும் வைத்துப் பார்க்கும் போது ஆதிச்சநல்லூர் நாகரிகம் 3700 ஆண்டுகள் பழமையானதாக இருக்கலாம் என்று தொல்லியல் அறிஞர் சாந்தலிங்கமும், 3500 ஆண்டுகள் பழமையானதாக இருக்கலாம் என்று 2004-05 ஆம் ஆண்டில் ஆய்வு நடத்திய சத்தியமூர்த்தியும் தெரிவித்துள்னர். அதனால், ஆதிச்சநல்லூர் தொல்லியல் ஆய்வு குறித்த அறிக்கை வெளியிடப்பட்டால் தமிழர் நாகரிகம் தான் உலகின் பழமையான நாகரிகம் என்பது உறுதி செய்யப்படும்.ஆதிச்சநல்லூர் நாகரிக காலத்தில் தமிழர்கள் எழுத்தறிவு பெற்றிருந்தார்களா? என்பதற்கு உறுதியான ஆதாரங்கள் இல்லை என்றாலும் கூட, மனித மூளையில் ஏற்பட்ட நோய்களுக்கு அறுவை சிகிச்சை செய்திருப்பது அங்கு கண்டெடுக்கப்பட்டுள்ள மண்டை ஓடுகளின் மூலம் தெரியவந்திருக்கிறது. உலகின் மூத்த குடி தமிழ்க்குடி என்பது மட்டுமின்றி, பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மருத்துவத் துறையில் சிறந்து விளங்கியுள்ளனர் என்பதும் உலகிற்கு ஆதாரங்களுடன் தெரிவிக்கப்பட வேண்டும். அதற்கு வசதியாக ஆதிச்சநல்லூர் ஆய்வறிக்கையை தொல்லியல்துறை விரைந்து வெளியிட வேண்டும்.

ஆதிச்சநல்லூரை ஒட்டிய தாமிரபரணியின் வடக்குப் பகுதியிலும், சிவகளை கிராமத்திலும் மனிதர்கள் வாழ்ந்ததற்கான அடையாளங்களும், கட்டிடங்களும் இருப்பதாகக் கூறப்படும் நிலையில், அப்பகுதிகளில் தொல்லியல் ஆய்வு நடத்துவதற்கான பணிகளை தமிழக தொல்லியல் துறை விரைவுபடுத்த வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

Also see:

First published: February 3, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்