• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்: இலங்கை அரசின் செயலுக்கு ராமதாஸ் கண்டனம்

இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்: இலங்கை அரசின் செயலுக்கு ராமதாஸ் கண்டனம்

ராமதாஸ்

ராமதாஸ்

இலங்கைக்கு எவ்வளவு தான் உதவிகளைச் செய்தாலும் அது நமக்கு ஆதரவாக இருக்கப் போவதில்லை.

  • Share this:
    சீனாவின் மின் உற்பத்தி திட்டங்களுக்கு இலங்கை வழங்கிய தீவுகளால் இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருப்பதாக பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கூறியுள்ளார்.

    இது தொடர்பாக ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இலங்கையில் என்ன நடக்கக்கூடாது என்று அஞ்சிக் கொண்டிருந்தோமோ, அது கடைசியாக நடந்தே விட்டது. தமிழ்நாட்டை ஒட்டியுள்ள 3 தீவுகளை சீனாவுக்கு எழுதிக் கொடுக்காத குறையாக தாரை வார்த்திருக்கிறது சிங்கள அரசு.

    இலங்கைக்கும், தமிழகத்திற்கும் இடையில் உள்ள நெடுந்தீவு, அனலைத் தீவு, நயினாத் தீவு ஆகிய 3 தீவுகளில் காற்றாலை மற்றும் சூரிய ஒளியை ஆதாரமாகக் கொண்டு மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தை செயல்படுத்துவதற்கான ஒப்பந்தத்தை சீனாவைச் சேர்ந்த சினோசர் இடெக்வின் நிறுவனத்திற்கு இலங்கை அரசு வழங்கியுள்ளது.

    மேலோட்டமாகப் பார்க்கும் போது இது ஒரு புதுப்பிக்கவல்ல எரிசக்தித் திட்டத்தைப் போன்று தோன்றும். ஆனால், இதன் நோக்கம் இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துவது தான்.

    உண்மையில் இந்தத் திட்டம் என்பது இந்தியாவுக்கோ, சீனாவுக்கோ அல்லது அவற்றின் நிறுவனங்களுக்கோ சுண்டைக்காய்க்கு சமமானது ஆகும். இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ள நிலப்பரப்பின் மீது ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்பதே சீனாவின் விருப்பம் ஆகும்.

    கலப்பு மின்திட்டம் செயல்படுத்தப்பட உள்ள நெடுந்தீவு, அனலைத் தீவு, நயினாத் தீவு ஆகிய தீவுகளில் மிகவும் பெரியது நெடுந்தீவு தான். இந்தத் தீவு தமிழ்நாட்டின் ராமேஸ்வரத்திலிருந்து 48 கி.மீ தொலைவில் உள்ளது.

    இலங்கைக்கு இந்தியா தாரைவார்த்த கச்சத் தீவிலிருந்து இந்தத் தீவு வெறும் 23 கி.மீ தொலைவில் தான் உள்ளது. அத்தீவுகளை இந்தியாவுக்கு எதிரான ராணுவத் தளமாக மாற்றிக் கொள்ளலாம் என்பது தான் சீனாவின் திட்டம்.

    நெடுந்தீவில் மின்திட்டங்களை செயல்படுத்தும் போர்வையில் இந்தியாவை 24 மணி நேரமும் கண்காணிக்க முடியும். ஆயுதங்களையும், ராணுவத் தளவாடங்களையும் கொண்டு வந்து சேமித்து வைத்துக் கொண்டால், இரு நாடுகளுக்கு இடையே போர் ஏற்பட்டால் உடனடியாக இந்தியாவைத் தாக்கி நிலைகுலைய வைக்க முடியும். இது சாதாரணமான ஆபத்து அல்ல.

    இந்த ஆபத்தின் தீவிரத்தை இந்தியா உடனடியாக உணர்ந்து, அதை முறியடிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால், இந்தியா, குறிப்பாக தமிழ்நாடு எந்த நேரமும் ஆபத்தின் விளிம்பில் தான் இருக்க வேண்டும்.

    தென்னிந்தியாவில் சீனா தாக்குதல் நடத்த முயன்றால் அது இலங்கை வழியாகத் தான் நடைபெறக்கூடும் என்பதை பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறேன். அது இப்போது உண்மையாகி வருகிறது. இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் விடுதலைப் புலிகள் வலிமையாக இருந்தவரை இலங்கையில் காலூன்றி இந்தியாவை கண்காணிக்க வேண்டும். அச்சுறுத்த வேண்டும் என்ற உலக வல்லரசுகளின் முயற்சிகள் பலிக்கவில்லை.

    இலங்கைக்கு எவ்வளவு தான் உதவிகளைச் செய்தாலும் அது நமக்கு ஆதரவாக இருக்கப் போவதில்லை. இப்போதும் இலங்கையில் தமிழர்கள் வலிமையுடன் இருப்பதுதான் இந்தியாவின் பாதுகாப்புக்கு நல்லது. இலங்கைக்கு தாரைவார்க்கப்பட்ட கச்சத்தீவை திரும்பப் பெறுவது, இலங்கையில் தமிழர்களின் கரங்களை வலுப்படுத்துவது உள்ளிட்ட நடவடிக்கைகளின் மூலமாகத் தான் சீனாவின் அச்சுறுத்தலை முறியடிக்க முடியும்.

    மேலும் படிக்க... குலாம் நபி ஆசாத் பிரிவு உபசார விழா: ‘உண்மையான நண்பர்’ ஆசாதுக்காக கண்கலங்கி பிரியாவிடை அளித்த பிரதமர் மோடி

    எனவே, அதற்கேற்ற வகையில் இலங்கை சார்ந்த தனது வெளியுறவுக் கொள்கையை இந்தியா மாற்றியமைத்துக் கொள்ள வேண்டும். ஈழத்தமிழர்களை ஆதரிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.” இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Suresh V
    First published: