இளவரசன் மரணத்தில் பாமக களங்கம் நீங்கியுள்ளது- ராமதாஸ்

இளவரசனுக்கு நீண்டநாட்களாகவே தற்கொலை சிந்தனை இருந்திருக்கிறது. ஏற்கனவே சென்னையில் ஒருமுறை தமது மணிக்கட்டை அறுத்துக்கொண்டு தற்கொலை செய்து கொள்ள முயன்றதையும் நீதிபதி அவரது அறிக்கையில் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

இளவரசன் மரணத்தில் பாமக களங்கம் நீங்கியுள்ளது- ராமதாஸ்
பாமக நிறுவனர் ராமதாஸ்
  • News18
  • Last Updated: June 9, 2019, 8:35 PM IST
  • Share this:
தருமபுரி இளவரசன் கொலை செய்யப்படவில்லை. தற்கொலை செய்து கொண்டார் என்று வெளிவந்துள்ள சிங்காரவேலு ஆணையத்தின் அறிக்கை பாமக மீதான களங்கத்தைப் போக்கியுள்ளது என்று அக்கட்சி நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். 

தருமபுரி இளவரசன் மரணம் தொடர்பாக ஃபிரண்ட்லைன் வார இதழில் வெளியான செய்தி குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தருமபுரி இளவரசன் கொலை செய்யப்படவில்லை, அவர் தற்கொலை தான் செய்து கொண்டார் என இருமுறை நடத்தப்பட்ட உடற்கூறு ஆய்விலும், காவல்துறை விசாரணையிலும் ஆதாரங்களுடன் உறுதி செய்யப்பட்டது.

ஆனால், இளவரசனின் மரணத்தில் அரசியல் லாபம் தேடத் துடித்த திமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள், மனசாட்சியை மரணிக்கச் செய்து விட்டு, இளவரசன் மரணத்தில் மர்மம் இருப்பதாகவும், அதுகுறித்து நீதி விசாரணை நடத்த ஆணையிட வேண்டும் என்றும் நெருக்கடி கொடுத்தனர்.  அதைத்தொடர்ந்து அமைக்கப்பட்ட நீதிபதி சிங்காரவேலு ஆணையம் தான் விரிவான விசாரணைக்குப் பிறகு தருமபுரி இளவரசன் கொலை செய்யப்படவில்லை;  மதுபோதையில் தற்கொலை


செய்து கொண்டார் என அறிக்கை தாக்கல் செய்திருக்கிறது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதமே தமிழக
அரசிடம் தாக்கல் செய்யப்பட்ட விசாரணை ஆணையத்தின் அறிக்கை இதுவரை வெளியிடப்படாத நிலையில்,தி இந்து குழுமத்தின் பிரண்ட்லைன் இதழ் இதுகுறித்த விவரங்களை சிறப்புச் செய்தியாக வெளியிட்டிருக்கிறது.  தருமபுரி மருத்துவமனையில் இரு முறை செய்யப்பட்ட இளவரசனின் உடற்கூறு ஆய்விலும் ‘‘வேகமாக
சென்ற தொடர்வண்டியின் பக்கவாட்டுப் பகுதி மோதியதில் அவரது இடது கையில் காயம் ஏற்பட்டிருக்கலாம்;
தலையில் தொடர்வண்டி மோதியதால் தான் அவர் உயிரிழந்துள்ளார்’’ என்று தெளிவாக கூறப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி, இறப்பதற்கு முன் அவர் மது அருந்தியிருந்தார்.

மதுவில் உள்ள எத்தில் ஆல்கஹால் என்ற போதைப்பொருள் மட்டும் தான் அவரது உள் உறுப்புகளில் காணப்பட்டதாகவும், விஷத்தன்மையுடைய
வேறு பொருட்கள் எதுவும் அவரது உடலில் இல்லை என்றும் உடற்கூறு ஆய்வில் குறிப்பிடப்பட்டிருப்பதை
சுட்டிக்காட்டியுள்ள நீதிபதி சிங்காரவேலு, இது சந்தேகத்திற்கிடமின்றி தற்கொலை தான் என்று கூறியுள்ளார்.

இளவரசனுக்கு நீண்டநாட்களாகவே தற்கொலை சிந்தனை இருந்திருக்கிறது. ஏற்கனவே சென்னையில்
ஒருமுறை தமது மணிக்கட்டை அறுத்துக் கொண்டு தற்கொலை செய்து கொள்ள முயன்றதையும் நீதிபதி
அவரது அறிக்கையில் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

இளவரசனின் உயிரிழப்பு வேதனையளிக்கும் துயரமான நிகழ்வு என்பதில் சந்தேகமில்லை. ஆனால்,
அவரது மரணம் தொடர்பான விஷயத்தில் செய்யப்பட்ட அரசியல் மிகவும் அருவருக்கத்தக்கது. திமுகவில்
தொடங்கி இப்போது அதன் கூட்டணியில் இருக்கும் இடதுசாரிகள் உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும்
பிணத்தை வைத்துக் கொண்டு அரசியல் செய்தன. சிங்காரவேலு அறிக்கையால் பாமகவின் மீது சுமத்தப்பட்ட களங்கம் நீக்கப்பட்டுள்ளது.

இளவரசன் கொல்லப்படவில்லை; தற்கொலை தான் செய்து கொண்டார் என நீதியரசர் சிங்காரவேலு
ஆணையம் அறிக்கை தாக்கல் செய்துள்ள நிலையில் பாமக மீது பழி சுமத்திய புதிய போலி புரட்சியாளர்கள்
அனைவரும் அதற்காக நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும். அதை அவர்கள் செய்வார்களா?’ என்று குறிப்பிட்டுள்ளார்.

Also see:

First published: June 9, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading