ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

ஃபேஸ்புக்கில் மார்பிங் படத்தால் இளம்பெண் தற்கொலை: ராமதாஸ் கண்டனம்

ஃபேஸ்புக்கில் மார்பிங் படத்தால் இளம்பெண் தற்கொலை: ராமதாஸ் கண்டனம்

பாமக நிறுவனர் ராமதாஸ்

பாமக நிறுவனர் ராமதாஸ்

இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டிய கடலூர் மாவட்டக் காவல்துறை குற்றவாளிகளுக்கு சாதகமாகவே செயல்பட்டு வருகிறது என்றும் ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.

  • News18
  • 2 minute read
  • Last Updated :

ஃபேஸ்புக்கில் மார்பிங் படம் வெளியானதால் இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ’கடலூர் மாவட்டத்தில் பாலியல் சீண்டலை தடுத்ததுடன், காவல்துறையிடம் சாட்சியம் அளித்ததற்காக வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்த இளைஞர் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

அந்த இளைஞர் திருமணம் செய்து கொள்ளவிருந்த பெண்ணின் புகைப்படத்தை ஆபாசமாக மார்பிங் செய்து முகநூலில் பதிவிட்டதால் அவமானமடைந்த அப்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பதாகவும், இந்தக் கொடூரச் செயல்கள் கண்டிக்கத்தக்கவை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடலூர் மாவட்டம் நெய்வேலியை அடுத்த ஏ.குறவன்குப்பம் பகுதியைச் சேர்ந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் முகாம் அமைப்பாளருமான பிரேம்குமார், வடலூரைச் சேர்ந்த ஒரு மாணவியை பிரேம்குமார் தொடர்ந்து பாலியல் சீண்டல் செய்து வந்த நிலையில், அது குறித்து அவரது பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் செய்துள்ளதாகவும்,  மாணவியை பிரேம்குமார் சீண்டியதை, மாணவியின் தெருவில் வசிக்கும் விக்னேஷ் என்ற இளைஞர் கண்டித்ததால் அவர் இவ்வழக்கில் சாட்சியாக சேர்க்கப்பட்டுள்ளதாகவும்,  அந்த வழக்கில் பிரேம்குமார் கைது செய்யப்படுவதற்கும் விக்னேஷ் உதவியுள்ளதாகவும் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த பிரேம்குமார், அவரது தந்தை பன்னீர், உறவினர் வல்லரசு ஆகிய மூவரும் விக்னேஷை பழிவாங்க திட்டமிட்டு,  ஏ.குறவன்குப்பத்தில் வாழும் விக்னேஷின் உறவினர் நீலகண்டன், அவரது மகளும் கல்லூரி மாணவியுமான ராதிகா மற்றும் குடும்பத்தினருக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளதாக ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

விக்னேஷுக்கும், ராதிகாவுக்கும் திருமணம் செய்து வைக்க அவர்களின் குடும்பத்தினர் முடிவு செய்திருந்த நிலையில், அந்த திருமணத்தை நடக்க விட மாட்டோம் என்றும் மிரட்டி வந்ததாகவும்,  நேற்று மதியம் 12 மணிக்கு நீலகண்டனின் வீட்டுக்கு சென்ற பன்னீர், பிரேம்குமார், வல்லரசு ஆகியோர் ராதிகாவின் புகைப்படத்தை ஆபாசமாக மார்பிங் செய்து முகநூலில் பதிவேற்றம் செய்து விட்டதாகக் கூறி, அந்த படத்தையும் காட்டியுள்ளதாகவும் ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் அவர் மணம் முடிக்கவுள்ள விக்னேஷை கொலை செய்யப்போவதாகவும் மிரட்டியதாகவும் ராமதாஸ் தெரிவித்தார்.

இதனால் அவமானம் அடைந்த ராதிகா தமது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என்றும்,  அடுத்த சில மணி நேரத்தில் வீணங்கேணி என்ற இடத்தில் விக்னேஷ் அடித்து கொலை செய்யப்பட்டு, அங்குள்ள மரம் ஒன்றில் தூக்கில் தொங்கவிடப்பட்டிருந்ததாகவும் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

வடலூரில் பெண்ணை பாலியல் சீண்டல் செய்ததை தட்டிக் கேட்டதற்காக ஒரு இளைஞரை கொடூரமாக கொலை செய்ததுடன், அவர் திருமணம் செய்து கொள்ளவிருந்த பெண்ணின் புகைப்படத்தை ஆபாசமாக மார்பிங் செய்து முகநூலில் வெளியிட்டு அவரை தற்கொலைக்கு தள்ள முடிகிறது என்றால் அந்த கும்பல் எந்தளவுக்கு வலிமை பெற்றிருக்கிறது என்பதை புரிந்து கொள்ள முடியும் என்றார்.

இவற்றை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டிய கடலூர் மாவட்டக் காவல்துறை குற்றவாளிகளுக்கு சாதகமாகவே செயல்பட்டு வருவதாகவும், இப்போதும் கூட பாதிக்கப்பட்ட மக்கள் விடிய, விடிய மறியல் போராட்டம் நடத்தியும் இந்த வழக்கில் குற்றவாளிகளை பிடிக்க காவல்துறை தீவிரம் காட்டவில்லை என்றும் ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டிய கடலூர் மாவட்ட காவல்துறை, குற்றவாளிகளுக்கு சாதகமாக செயல்படுவதை கைவிட வேண்டும் என்றும்,குற்றவாளிகளை கைது செய்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ராமதாஸ் கேட்டுக் கொண்டார். அதன்மூலம் கடலூர் மாவட்ட காவல்துறை அதன் நடுநிலையை நிரூபிக்க வேண்டும் என்றும் ராமதாஸ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Also see...

Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Ramadoss