பாமக நிறுவனர் ராமதாஸ் தனது பேஸ்புக் கணக்கில் பதிவு ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் அமைச்சர் அதிகாரம் மட்டுமல்ல.. அதன் வசதிகள் கூட எனை நெருங்கக் கூடாது என்ற தலைப்பிட்டு கீழ்காணும் நிகழ்ச்வை பகிர்ந்துள்ளார்.
பழைய செய்தி தான் - இன்றைய இளைஞர்கள் தெரிந்து கொள்வதற்காக... அது 2003-ஆம் ஆண்டு என்று நினைவு.. தில்லியில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக சென்றிருந்தேன். அங்குள்ள பணிகள் முடிவடைந்த பின்னர் அடுத்த நாள் கோவையில் பா.ம.க. நிகழ்ச்சிகள் சிலவற்றில் கலந்து கொள்ள வேண்டும்.
கோவைக்கு நேரடி விமானம் இல்லாத நிலையில், பெங்களூர் நகருக்கு விமானத்தில் சென்று, அங்கிருந்து தொடர்வண்டி மூலம் பயணம் செய்ய திட்டமிட்டோம். அதன்படி தில்லியிலிருந்து பெங்களூர் சென்றோம். என்னுடன் அப்போதைய தொடர்வண்டித்துறை இணையமைச்சர் ஏ.கே.மூர்த்தியும் பயணம் செய்தார். பெங்களூர் வந்தடைந்த நாங்கள் அங்கிருந்து கோவைக்கு தொடர்வண்டியில் புறப்பட்டோம். ஏ.கே.மூர்த்தி தொடர்வண்டித்துறை இணையமைச்சர் என்பதால் அவருக்கு அனைத்து வசதிகளுடன் கூடிய தனிப்பெட்டி ஒதுக்கப்பட்டிருந்தது. நான் எனக்கு ஏ.சி. இரண்டாம் வகுப்பு முன்பதிவு செய்து இருந்தேன்.
பெங்களூர் தொடர்வண்டி நிலையத்தில் ஏ.கே.மூர்த்தியை வரவேற்று வழியனுப்பி வைக்க தொடர்வண்டித் துறை அதிகாரிகள் திரண்டு வந்திருந்தனர். தொடர்வண்டி புறப்படுவதற்கு சிறிது நேரம் முன்பு வரையிலும் தனது பெட்டிக்கு செல்லாத ஏ.கே.மூர்த்தி, ‘‘என்னை அமைச்சராக்கி அழகு பார்த்தது நீங்கள் தான். அதனால் நீங்களும் என்னுடன் தனிப் பெட்டியில் பயணிக்க வேண்டும்’’ என்று மன்றாடினார்.
ஆனால், அதை ஏற்க நான் மறுத்து விட்டேன். ‘‘தொடர்வண்டித்துறை இணையமைச்சர் என்ற முறையில் உனக்காக அந்த தனிப் பெட்டி ஒதுக்கப்பட்டுள்ளது. எந்த பதவியிலும் இல்லாத நான் அதில் பயணம் செய்வது முறையல்ல. எந்த அதிகார பதவியையும் வகிப்பதில்லை என நான் உறுதி ஏற்றுள்ளேன். அதிகாரப் பதவி மட்டுமல்ல.... அதனால் கிடைக்கும் வசதிகளையும் கூட நான் அனுபவிக்க மாட்டேன்’’ என்று திட்டவட்டமாக கூறிவிட்டு எனக்கான இரண்டாம் வகுப்பு இருக்கையில் பயணித்தேன்.
வேறு வழியின்றி என் தொண்டன் ஏ.கே. மூர்த்தி அமைச்சருக்கான தனிப்பெட்டியில் பயணித்தார். தனது மகனின் உயர்வை தாய் எப்படி ரசிப்பாளோ, அதே மகிழ்ச்சியுடன் என்னால் உயர்த்தி வைக்கப்பட்ட எனது தொண்டனின் பயணத்தை ரசித்தபடி நான் எனது பயணத்தைத் தொடர்ந்தேன்.
இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: News On Instagram, PMK, Ramadoss