• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • இட ஒதுக்கீட்டுக்காக என்ன விலையும் கொடுப்போம்... எந்த தியாகமும் செய்வோம் - ராமதாஸ்

இட ஒதுக்கீட்டுக்காக என்ன விலையும் கொடுப்போம்... எந்த தியாகமும் செய்வோம் - ராமதாஸ்

ராமதாஸ்

ராமதாஸ்

பாட்டாளி மக்கள் கட்சியும், வன்னியர் சங்கமும் யாருடைய உரிமையையும் தட்டிப் பறிக்க நினைக்க வில்லை. அப்படி செய்வது அறமல்ல... நாங்கள் கேட்பது எங்களுக்கான உரிமையைத் தான்.

  • Share this:
    வன்னியர் இட ஒதுக்கீட்டுக்காக என்ன விலையும் கொடுப்போம் என்றும் எந்த தியாகமும் செய்வோம் எனவும் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து ராமதாஸ் விடுத்துள்ள மடலில், “வன்னியர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இடப்பங்கீடு வழங்க வேண்டும் என்ற மிகவும் நியாயமான கோரிக்கையை வலியுறுத்தி பாட்டாளி மக்கள் கட்சியும், வன்னியர் சங்கமும் இணைந்து நடத்தி வரும் தொடர் போராட்டங்கள் அடுத்தக்கட்டத்தை அடைந்திருக்கின்றன. அதன்படி, வரும் 29-ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 11.00 மணிக்கு தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டத் தலைநகரங்களிலும், வன்னியர்களுக்கு இடப்பங்கீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி மாபெரும் மக்கள்திரள் போராட்டம் நடைபெறவுள்ளது. அதைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர்களிடம் மனு அளிக்கப்படவுள்ளது.

    டிசம்பர் ஒன்றாம் தேதி தொடங்கி இன்று வரை கடந்த இரு மாதங்களாக போராட்டமே நமது வாழ்க்கை முறையாகி விட்டது. சென்னையில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் முன் டிசம்பர் 1 முதல் 4-ஆம் தேதி 4 நாட்களுக்கு தொடர் போராட்டம், கிராம நிர்வாக அலுவலர் அலுவலகங்கள் முன் டிசம்பர் 14-ஆம் தேதி போராட்டம், டிசம்பர் 23-ஆம் தேதி பேரூராட்சி அலுவலகங்கள் முன் போராட்டம், டிசம்பர் 30-ஆம் தேதி ஒவ்வொரு ஒன்றியத்திலும் வட்டார வளர்ச்சி அலுவலர் அலுவலகங்கள் முன் போராட்டம், ஜனவரி 7-ஆம் நாள் நகராட்சி அலுவலகங்கள் முன் போராட்டம் என கடந்த இரு மாதங்களில் மட்டும் 5 கட்டங்களாக 8 நாட்கள் வன்னிய மக்களின் சமூகநீதிக்காக நாம் தீவிரமாக போராடி வருகிறோம். ஒவ்வொரு கட்ட போராட்டமுமே மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றே வந்திருக்கின்றன. அந்த வகையில் 29-ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன் நடைபெறவுள்ள ஆறாம் கட்ட மக்கள்திரள் போராட்டமும் வெற்றி பெறப் போவது உறுதியிலும் உறுதியாகும்.

    ஐந்து கட்டங்களாகவும், எட்டு நாட்களாகவும் நாம் நடத்தியுள்ள போராட்டம் நமது வலிமையை தமிழகத்திற்கும், தமிழக அரசுக்கும் உணர்த்தியுள்ளது. அதைவிட அதிகமாக நமது போராட்டத்தின் நியாயத்தையும், சமூகநீதியையும் தமிழக அரசு நன்றாக உணர்ந்திருக்கிறது. ஆனாலும் மிக மிக பின்தங்கிய நிலையில் உள்ள ஒரு சமுதாயத்தின் முன்னேற்றத்திற்காக, பல ஆண்டுகளுக்கு முன்பே வழங்கியிருக்க வேண்டிய உள் இடப்பங்கீட்டை வழங்கத் தயங்குகிறது. தமிழக அரசின் இந்த தயக்கம் எவ்வகையிலும் நியாயமற்றது.

    பாட்டாளி மக்கள் கட்சியும், வன்னியர் சங்கமும் யாருடைய உரிமையையும் தட்டிப் பறிக்க நினைக்க வில்லை. அப்படி செய்வது அறமல்ல என்பது சமூகநீதியை கொள்கை மூச்சாகக் கொண்டிருக்கும் பாட்டாளி மக்கள் கட்சிக்கு நன்றாகத் தெரியும். நாங்கள் கேட்பது எங்களுக்கான உரிமையைத் தான். தமிழ்நாட்டில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 20% இட ஒதுக்கீட்டை 10 ஆண்டுகளுக்கும் மேலாக போராடியும் 21 உயிர்களை தியாகம் செய்தும் தான் வென்றெடுத்தோம். அது வன்னியர்களின் சொத்து ஆகும். ஆனால், அந்த சொத்தை, எங்களுக்கு கிடைக்கவிடாமல் யாரோ அனுபவிப்பதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்? நாம் போராடிப் பெற்ற இட ஒதுக்கீட்டில் ஒரு பகுதியைக் கூட, இதுவரை அதை அனுபவித்து வரும் சமுதாயங்களின் நலன் கருதி விட்டுக் கொடுக்க முன்வந்திருக்கிறோம்.

    இவ்வளவுக்கு பிறகும் கூட நமக்கான சமூக நீதியை வழங்க தமிழக அரசு மறுப்பது எந்த வகையில் நியாயம்? மக்களுக்கான அரசு நியாயத்தின் பக்கம் தானே நிற்க வேண்டும்? யாருக்கோ அஞ்சி, நமக்கான இடப்பங்கீட்டை வழங்க மறுப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. பாட்டாளிகளின் குரலாக பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடிய ‘‘வசதியிருக்கிறவன் தரமாட்டான்.... - வயிறு பசிக்கிறவன் விடமாட்டான்’’ என்ற வரிகள் நமது போராட்டத்திற்கும் பொருந்தும். ஆம்... வன்னியர்களுக்கான உள் இடப்பங்கீட்டை வென்றெடுக்கும் வரை நாம் ஓயப் போவதில்லை. அதற்காக என்ன விலை கொடுக்கவும், எத்தகைய தியாகங்களை செய்யவும் நாம் தயாராக இருக்கிறோம். நாம் சத்திரியர்கள் என்பதை மறக்க வேண்டாம்.

    வன்னியர்களுக்கு இடப்பங்கீடு கோரி நாம் ஏன் இப்போது போராட வேண்டியிருக்கிறது? கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் மாநில அளவில் 20 விழுக்காடும், தேசிய அளவில் 2 விழுக்காடும் வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற முழக்கத்துடன் 1980-ஆம் ஆண்டில் வன்னியர் சங்கம் போராட்டத்தைத் தொடங்கியது. பத்தாண்டுகள் தொடர் போராட்டங்களை நடத்தி, ஏராளமான தியாகங்களைச் செய்து, இழப்புகளை எதிர்கொண்டு, அவற்றின் பயனாகத் தான், 1989-ஆம் ஆண்டில் ஆட்சிக்கு வந்த கலைஞர், இட ஒதுக்கீடு குறித்து பேச என்னை அழைத்தார். அப்போது தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு ஒரே தொகுப்பாக உள்ள 50% இடஒதுக்கீட்டை, பிற தென் மாநிலங்களில் இருப்பதைப் போல, 6 தொகுப்புகளாக பிரித்து, அனைத்து சமூகங்களுக்கும் வழங்கலாம்; அவற்றில் 20% கொண்ட ஒரு தொகுப்பை வன்னியர்களுக்கு வழங்கலாம் என்ற அறிவியல்பூர்வமான திட்டத்தை முதல்வர் கலைஞரிடம் வழங்கினேன். அதை கலைஞர் செயல்படுத்தியிருந்தால், பிற்படுத்தப்பட்ட வகுப்பு சாதிகளுக்கு முழுமையான சமூகநீதி வழங்கப்பட்டிருக்கும். ஆனால், அதை கலைஞர் செய்யவில்லை.

    மாறாக, நான் தயாரித்து வழங்கியிருந்த இடப்பங்கீட்டுத் திட்டத்தை குப்பைத் தொட்டியில் வீசிய கலைஞர், அவர் ஏற்கனவே தயாரித்து வைத்திருந்த பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 30%, 108 சாதிகளைக் கொண்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு என்ற புதிய பிரிவை உருவாக்கி அதற்கு 20% இட ஒதுக்கீடு என்ற திட்டத்திற்கு இரவோடு இரவாக இறுதி வடிவம் கொடுத்து, அடுத்த நாள் காலையில் அரசாணையாக வெளியிட்டார். இட ஒதுக்கீடு என்ற கனியை கொடுத்திருக்கிறேன்... அதை சுவைத்துப் பாருங்கள் என்று கலைஞர் கூறினார். அதுபற்றி உடனடியாக கருத்து தெரிவித்த நான் அதை அழுகிய கனி என்று விமர்சித்தேன். அப்போது அழுகிய கனி என்று விமர்சிக்கப்பட்ட இட ஒதுக்கீடு இப்போது மட்டும் இனிக்குமா?

    மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 20% இட ஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு முழுமையான சமூகநீதி கிடைக்காது என்பது நன்றாகத் தெரியும். அதனால் தான் 1989-ஆம் ஆண்டில் தொடங்கி இப்போது வரையிலான 32 ஆண்டுகளாக வன்னியர்களுக்கு தனி இடப்பங்கீடு வழங்க வேண்டுமென வலியுறுத்தி வருகிறோம். இதற்கு முன் இருந்த அரசுகளிடமும் தொடர்ந்து இந்த கோரிக்கையை வலியுறுத்தி வருகிறோம்; அதற்காக ஏராளமான போராட்டங்களையும் நடத்தினோம். ஆனாலும் பயனில்லை.

    தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் கடந்த ஆண்டு நடத்திய முதல் தொகுதி தேர்வுகளில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்புக்கு ஒதுக்கப்பட்ட 6 மாவட்ட துணை ஆட்சியர் பணியிடங்களையும் வன்னியர் அல்லாதவர்களே கைப்பற்றியுள்ளனர். கடந்த காலங்களிலும் வன்னியர்களுக்கு ஏமாற்றமே மிச்சம். கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கும், பிற சமூகத்தினருக்கும் கிடைத்த பிரதிநிதித்துவம் குறித்த விவரங்களை வெளியிட வேண்டும் என்று தமிழக அரசிடமும், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்திடமும் பல முறை கோரினாலும் அதற்கு பதில் இல்லை. கலைஞர் உருவாக்கிக் கொடுத்த அழுகிய கனி இப்போது நாற்றமெடுத்த கனியாகி விட்டது. அதற்கு மாற்றாக சுவையான சமூகநீதிக் கனி வேண்டும் என்பதற்காகத் தான் இந்தப் போராட்டம் நடத்தப்படுகிறது.

    29-ஆம் தேதி நடைபெறும் போராட்டத்திற்காக கள அளவில் நடைபெற்று வரும் ஏற்பாடுகளைப் பார்க்கும் போது, போராட்டத்தின் வெற்றி இப்போதே உறுதியாகி விட்டது. போராட்டத்தை வெற்றிகரமாக நடத்தும் நோக்குடன் நமது பாட்டாளிகள் வீடு வீடாக சென்று திண்ணைப் பிரச்சாரம் செய்வதும், அதற்கு மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பு கிடைத்திருப்பதாக வரும் செய்திகளும் மகிழ்ச்சியளிக்கின்றன.

    மேலும் படிக்க.... டெல்லியை நோக்கி ஆயிரக்கணக்கான டிராக்டர்களில் படையெடுக்கும் விவசாயிகள்

    இட ஒதுக்கீட்டுப் போராட்டம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும், ஆதரவு திரட்டும் வகையிலும் தமிழகத்தின் அனைத்து கிராமங்களிலும் இரு சக்கர ஊர்தி பயணங்கள் நடைபெறுவதும், அதில் ஏராளமான இளம்பெண்கள் பாட்டாளி மக்கள் கட்சிக் கொடியையும், வன்னியர் சங்கக் கொடியையும் உயர்த்திப் பிடித்தவாறு வலம் வருவதும் மனதிற்கு புதிய வலிமையையும், உற்சாகத்தையும் அளிக்கின்றன. 29-ஆம் தேதி போராட்டத்தில் இரு சக்கர ஊர்தி பேரணியில் பங்கேற்கும் அனைத்து இளைஞர்களும் தங்களின் சகோதரிகளை, சகோதரர்களை ஊர்தியில் பின்னால் அமரச் செய்து....

    ‘‘அண்டம் கிடுகிடுங்க
    அகிலம் நடுநடுங்க,
    அன்புமணி சேனைகளே வாருங்கள்..
    மேகம் இடி முழங்க.. வேண்டும் உரிமை என,
    மஞ்சள் கொடி ஏந்தி ஒன்று சேருங்கள்!’’ என்ற பாடலை பரணி பாடிச் செல்ல வேண்டும்.

    இட ஒதுக்கீட்டுக் போராட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்தவர்கள் மட்டுமின்றி, மற்ற கட்சிகளைச் சேர்ந்த வன்னியர்களையும் அழைத்து வர வேண்டும். இது பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த வன்னியர்களுக்காக மட்டும் நடத்தப்படும் போராட்டமல்ல. அனைத்துக் கட்சிகளிலும் உள்ள வன்னியக் குடும்பங்கள் பயனடைய வேண்டும் என்பது தான் நமது நோக்கம். இதை அவர்களிடமும் எடுத்துக் கூறி போராட்டக்களத்திற்கு அழைத்து வர வேண்டும். வன்னியர்கள் அல்லாத மற்ற சகோதர சமுதாயங்களுக்காகவும் நாம் தான் குரல் கொடுத்து வருகிறோம். இந்த உண்மைகளையெல்லாம் அவர்களுக்கு புரிய வைத்து, வன்னியர் உள் ஒதுக்கீட்டுப் போராட்டத்தில் பங்கேற்கச் செய்ய வேண்டும்.

    எந்த ஓர் இலக்கை நோக்கியப் பயணமும் முதல் அடியை எடுத்து வைப்பதில் தான் தொடங்குகிறது. வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு என்ற கோரிக்கையை வலியுறுத்தி நமது போராட்டப் பயணம் 40 ஆண்டுகளைக் கடந்து நடைபெற்று வருகிறது. வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு கிடைப்பதை இனியும் எந்த சக்தியாலும் தாமதப்படுத்த முடியாது. பாட்டாளி இளைஞர்களே, பாட்டாளி சொந்தங்களே உங்களின் உழைப்புக்கும், போராட்டத்திற்கும் பயன் கிடைக்கும் நாள் நெருங்கி விட்டது. முழு உணர்வுடன் 29-ஆம் தேதி போராட்டத்தில், ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு லட்சம் பேர் என்ற அளவில் போராட்டத்தில் பங்கேற்க வேண்டும். அதன் மூலம் நமது இட ஒதுக்கீட்டு உரிமையை வென்றெடுக்க வேண்டும்.” இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Suresh V
    First published: