அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 94வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. மொத்தமாக 24 பிரிவுகளில் ஆஸ்கர் விருதுகள் வழங்கப்பட்டது. இதில் கிங் ரிச்சர்ட் படத்திற்காக சிறந்த நடிகருக்கான விருதைப் பெற்றார் நடிகர் வில் ஸ்மித். சிறந்த நடிகைக்கான விருது ஜெசிகா கேஸ்டெய்னுக்கு வழங்கப்பட்டுள்ளது. The Eyes of Tammy Faye திரைப்படத்தில் நடித்ததற்காக இந்த விருது கிடைத்துள்ளது.
முன்னதாக நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய நகைச்சுவை நடிகர் கிறிஸ் ராக், வில் ஸ்மித் மனைவி ஜாடா பிங்கெட் ஸ்மித் மொட்டை அடித்தது போன்ற சிகை அலங்காரத்துடன் காணப்பட்டது தொடர்பாக கிண்டல் செய்துள்ளார். இதற்கு வில் ஸ்மித்தும் சிரித்தபடி இருந்தார். திடீரென மேடையில் ஏறிய வில் ஸ்மித் கிறிஸ் ராக் கன்னத்தில் பளார் என அறைந்தார். இதனை சற்றும் எதிர்பார்க்காத அங்கிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்த விவகாரம் உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. சிறிது நேரத்தில் விருது வாங்கும்போது பேசிய வில் ஸ்மித், ‘தொகுப்பாளரை அடித்ததற்காக மன்னிப்பு கோரினார். இந்தநிலையில் வில் ஸ்மித்துக்கு பா.ம.க நிறுவனர் ராமதாஸ் பாராட்டு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்த அவருடைய ஃபேஸ்புக் பதிவில், ‘சபாஷ்.... சரியான தண்டனை! ஹாலிவுட் டால்பி திரையரங்கத்தில் இந்திய நேரப்படி இன்று காலை அகாடமி விருது (ஆஸ்கர் விருது) வழங்கும் விழா நடைபெற்றுக்கொண்டிருந்தது. சிறந்த ஆவணப்படத்திற்கான விருதை வழங்குவதற்காக கிரிஸ் ராக் என்ற நகைச்சுவை நடிகர் மேடையேறினார். அப்போது நகைச்சுவை செய்வதாக நினைத்துக் கொண்டு, நடிகர் வில் ஸ்மித்தின் மனைவி ஜடா பின்கெட்டின் தலைமுடி பிரச்சினையை கிண்டல் செய்தார். ஜடாவுக்கு alopecia என்ற முடி உதிரும் நோய் இருக்கிறது. கிரிஸ்ராக்கின் நகைச்சுவைக்கு பெரிய வரவேற்பு இல்லை. வில்ஸ்மித்துக்கு சிறந்த நடிகருக்கான விருது வழங்கப்படுவதால் அதை வாங்குவதற்காக வந்திருந்தார்.
கிரிஸ் ராக்கின் நகைச்சுவையைக் கேட்டு வில்ஸ்மித் ஆரம்பத்தில் சிறிது சிரித்தார். ஆனால், அருகிலிருந்து அவரது மனைவியின் கண்களில் இருந்து கண்ணீர் வழிவதைப் பார்த்து கொதித்துப் போனார். உடனடியாக மேடையில் ஏறிய வில் ஸ்மித் கிரிஸ்ராக்கின் கன்னத்தில் பளார் என அறைந்திருக்கிறார். அவை நாகரிகத்தையெல்லாம் விடுங்கள். வில் ஸ்மித்தின் செயல் மிகவும் சரியானது. கிரிஸ்ராக்கின் செயலுக்கு உடனடியாக சரியான தண்டனை கொடுத்திருக்கிறார்.
Oscar 2022: மனைவி குறித்து கிண்டல்.. ஆஸ்கர் விழாவில் தொகுப்பாளரை கன்னத்தில் அறைந்த வில் ஸ்மித் (வீடியோ)
அதுமட்டுமல்ல.... ஜடாவை தாம் கிண்டல் செய்ததில் உள்நோக்கமில்லை என்று கிரிஸ்ராக் விளக்கமளித்தபோது அதை ஸ்மித் ரசிக்கவில்லை. அப்போதும் கூட என் மனைவியின் பெயரை உச்சரிக்கக்கூட உனக்குத் தகுதியில்லை என்று பொங்கியிருக்கிறார். அவர் உண்மையான கதாநாயகன்.
இந்த நிகழ்வு சொல்லியிருப்பது இரண்டு உண்மைகளை...
1. ஒருவரின் ஊனத்தை,(body shaming) குறையை நகைச்சுவைக்கான கருப்பொருளாக்காதீர்கள்.
2. மனைவியையும், அவரது உணர்வையும் மதித்தால் உலகம் உங்களை மதிக்கும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.