இந்தி தெரியாததால் லோன் தர மறுத்த வங்கி மேலாளரை உத்தரப் பிரதேசம் விரட்டவேண்டும் - ராமதாஸ் காட்டம்

பாமக நிறுவனர் ராமதாஸ்.

இந்தி தெரியாததால் லோன் தர மறுத்த வங்கி மேலாளரை உத்தரப் பிரதேசத்துக்கு விரட்ட வேண்டும் என்று பா.ம.க நிறுவனர் ராமதாஸ் கடும் காட்டமாக தெரிவித்துள்ளார்.

  • Share this:
    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் வசித்து வருபவர் ஓய்வு பெற்ற தலைமை அரசு மருத்துவர் பாலசுப்பிரமணியன். இவர் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிந்து கடைசியாக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் தலைமை மருத்துவராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது சொந்த ஊர் கங்கைகொண்ட சோழபுரம் அருகே உள்ள யுத்தப்பள்ளம். இவருக்கு இந்த யுத்தப்பள்ளம் ஜெயங்கொண்டம் ஆகிய பகுதிகளில் பல்வேறு இடங்களில் சொந்த நிலம் வீடு ஆகியவை உள்ளது. இவர் கங்கைகொண்ட சோழபுரத்தில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் வங்கி கணக்கு வைத்து வரவு-செலவு பார்த்து வருகிறார். இந்நிலையில் ஜெயங்கொண்டம் பேருந்து நிலையம் அருகே உள்ள தனது இடத்தில் வணிக வளாகம் கட்ட முடிவு செய்து கங்கைகொண்ட சோழபுரத்தில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்கு லோன் கேட்டு சென்றுள்ளார்.

    வங்கியில் தற்போது மகாராஷ்டிராவைச் சேர்ந்த விஷால் பட்டேல் என்பவர் கிளை மேலாளராக பணியாற்றி வருகிறார். இவரிடம் சென்று பாலசுப்பிரமணியன் தனது இடம் சம்பந்தமான ஆவணங்கள், வரவு செலவு கணக்குகள் மற்றும் வருமான வரி செலுத்தும் படிவம் ஆகியவற்றை காண்பித்து கடன் கேட்டு உள்ளார்.

    அப்போது பேசிய வங்கி மேலாளர், "Do u know Hindi" என ஆங்கிலத்தில் கேட்டுள்ளார், அதற்கு மருத்துவர் "I don't know Hindi, but i know Tamil and English" என ஆங்கிலத்தில் தெரிவித்த அவர், "I am from Maharashtra, I know Hindi. Language problem" என தெரிவித்துள்ளார். மருத்துவர் மீண்டும் தனது ஆவனத்தை காண்பித்து, தான் உங்கள் கிளையில் தான் கணக்கு வைத்துள்ளேன்.

    ஆனால், வங்கி மேலாளர் லோன் தருவதற்கு மறுத்துவிட்டார். அதனையடுத்து, வங்கி மேலாளர் மீது மான நஷ்ட வழக்குத் தொடர்ந்துள்ளார் மருத்துவர் பாலசுப்ரமணியன். இதுகுறித்த பா.ம.க நிறுவனர் ராமதாஸ் ட்விட்டர் பதிவில், ‘அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் இந்தி தெரியவில்லை என்பதற்காக ஓய்வுபெற்ற அரசு மருத்துவர் ஒருவருக்கு கடன் வழங்க முடியாது என்று பொதுத்துறை வங்கியில் பணியாற்றும் வட இந்தியாவைச் சேர்ந்த மேலாளர் கூறியிருப்பது கண்டிக்கத்தக்கது.


    மேலாளர் மீது கடும் நடவடிக்கை தேவை. தமிழ்நாட்டில் வங்கியில் பணியாற்றிக் கொண்டு இந்தி தெரியாவிட்டால் கடன் வழங்க முடியாது என்று திமிராகக் கூறிய வங்கி மேலாளர் தமிழகத்தில் பணியாற்றத் தகுதியற்றவர். உடனடியாக அவரை உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட இந்தி பேசும் மாநிலத்திற்கு வங்கி நிர்வாகம் விரட்டியடிக்க வேண்டும்.

    மத்திய அரசுத்துறை அலுவலங்களிலும், பொதுத்துறை நிறுவனங்களிலும் உள்ளூர் மக்களை பணிக்கு அமர்த்த வேண்டும் என்று பாமக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. அதை அரசு செவிமடுக்காததன் விளைவு தான் இத்தகைய கூத்துகள். இனியாவது நிலைமை மாற வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
    Published by:Karthick S
    First published: