டெல்லியில் குடியரசு தின விழாவில் பங்கேற்க இருந்த தமிழக வாகன ஊர்தி நிராகரிப்பு செய்யப்பட்டதை கண்டித்து, கோவில்பட்டியில் சுதந்திர போராட்ட வீரர்கள் புகைப்படங்கள் அடங்கிய பதாகைகளுடன் ஊர்வலம் நடைபெற்றது.
டெல்லியில் நடைபெற்ற குடியரசு தின விழா அணிவகுப்பில் சுதந்திர போராட்ட வீரர்கள் வ.உ.சி, வீரமங்கை வேலுநாச்சியார், மகாகவி பாரதியார் உள்ளிட்டோர் அடங்கிய தமிழக அரசின் வாகன ஊர்தி நிராகரிக்கப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு தமிழக தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்தனர்.
இந்தப் பிரச்சனை தொடர்பாக மத்திய அரசு சார்பிலும் விளக்கம் அளிக்கப் பட்டிருந்தது. மேலும் நிராகரிக்கப்பட்ட வாகன ஊர்தி சென்னையில் நடைபெறும் குடியரசு தின விழாவில் இடம்பெறும் என்று தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
இந்நிலையில், தமிழக அரசின் வாகன ஊர்தி நிராகரிக்கப்பட்டதை கண்டித்து தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் அம்பேத்கர், பெரியார் மார்க்சிய உணர்வாளர்கள் கூட்டமைப்பினர் சுதந்திர போராட்ட வீரர்கள் அழகு முத்துக்கோன், பூலித்தேவன், ஒண்டி வீரன், வேலுநாச்சியார், அம்பேத்கர், சுபாஷ் சந்திரபோஸ், வீரபாண்டிய கட்டபொம்மன், பெரியார், காயிதே மில்லத், காமராஜர் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் புகைப்படங்கள் அடங்கிய பதாகைகளுடன் கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகம் முன்பிருந்து கண்டன கோஷங்களை எழுப்பியவாறு ஊர்வலமாக சென்றனர்.
Must Read : திருவொற்றியூர் தனியரசு உள்ளிட்ட 8 பேருக்கு வீரதீர செயலுக்கான அண்ணா பதக்கம் : மு.க.ஸ்டாலின் வழங்கினார்
இந்த ஊர்வலம் கோவில்பட்டி அரசு மருத்துவமனை எதிரே உள்ள அம்பேத்கர் சிலை அருகே நிறைவு பெற்றது. ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள், கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையொட்டி அப்பகுதியில் அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.