ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

ஜூன் 10-ல் மாநிலங்களவை எம்.பி. தேர்தல்.. தமிழ்நாட்டில் 6 இடங்களுக்கு போட்டி

ஜூன் 10-ல் மாநிலங்களவை எம்.பி. தேர்தல்.. தமிழ்நாட்டில் 6 இடங்களுக்கு போட்டி

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

Rajya Sabha MP Election : தமிழ்நாடு உட்பட 15 மாநிலங்களில் 57 மாநிலங்களவை உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான தேர்தல், வரும் ஜூன் 10-ம் தேதி நடைபெறவுள்ளது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  மாநிலங்களவை எம்.பி. தேர்தல் ஜூன் 10ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்திற்கு திமுக கூட்டணியில் 4 இடங்களும்,  அதிமுக கூட்டணியில் 2 இடங்களும் கிடைக்க வாய்ப்புள்ளது.

  தமிழ்நாட்டிலிருந்து மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்ட அதிமுக உறுப்பினர்கள் எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன், நவநீதகிருஷ்ணன், விஜயகுமார் மற்றும் திமுக உறுப்பினர்கள் ஆர்.எஸ். பாரதி, டிகேஎஸ் இளங்கோவன், ராஜேஷ் குமார் ஆகியோரின் பதவிக்காலம் வரும் ஜூன் மாதம் 29ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. புதிய உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் வரும் ஜூன் 10-ம் தேதி நடைபெறவுள்ளது.

  தமிழ் நாட்டில் ஒரு மாநிலங்களவை உறுப்பினரை தேர்வு செய்வதற்கு 34 எம்எல்ஏ-க்களின் ஆதரவு தேவை. தற்போது, திமுக தலைமையிலான கூட்டணிக்கு 159 எம்எல்ஏ-க்கள் உள்ளதால், காலியாக உள்ள 6 மாநிலங்களவை இடங்களில் 4 திமுக வசம் செல்ல வாய்ப்புள்ளது.

  அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாமக, பாஜக கட்சிகளை சேர்த்து 75 உறுப்பினர்கள் உள்ளனர். எனவே அவர்களுக்கு 2 பதவிகள் கிடைக்க வாய்ப்புள்ளது. இந்த இரண்டு இடங்களுக்கு சுமார் 60 பேர் வரை அதிமுக தலைமைக்கு விருப்பம் தெரிவித்துள்ளனர்.

  முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், சிவி சண்முகம், பா வளர்மதி கோகுல இந்திரா செம்மலை ஆகியோர் கடும் போட்டியில் உள்ளனர். அதேபோல முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் டாக்டர் வேணுகோபால், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் ஜேசிடி பிரபாகர் மற்றும் செல்வராஜ் ஆகியோர் இடையேயும் கடும் போட்டி நிலவுகிறது.

  அதிமுகவில் மூத்த உறுப்பினர்களில் ஒருவரும் அதிமுக அமைப்புச் செயலாளருமான செம்மலைக்கு கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடுவதற்கான வாய்ப்பை அதிமுக தலைமை தரவில்லை அதனால் மாநிலங்களவை உறுப்பினர் பதவி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் உள்ளார்.

  நடைபெற்று முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெறுவார்கள் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் சி.வி சண்முகம் தோல்வி அடைந்தனர் கட்சியின் முன்னணி தலைவர்களாக இருக்க கூடிய இவர்கள் தாங்கள் மாநிலங்களவை உறுப்பினர் ஆக வேண்டும் என்கிற முயற்சியிலும் தீவிரமாக உள்ளனர்.

  இந்த இரண்டு மாநிலங்களவை உறுப்பினர் பதவி இடங்களுக்கு அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் ஆதரவாளர் ஒருவருக்கும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடிபழனிசாமி ஆதரவாளர் ஒருவருக்கும் ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

  Must Read : சசிகலாவுக்கு காலம் கடந்த ஞானோதயம் வந்துள்ளது - கடம்பூர் ராஜூ விமர்சனம்

  மேலும், கர்நாடகாவில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்வான மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ்; மகாராஷ்டிராவில் இருந்து தேர்வான மத்திய அமைச்சர் பியூஸ் கோயல், காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் உள்ளிட்டோரின் பதவிக்காலமும் நிறைவடைகிறது.

  இந்நிலையில், 57 மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தலில் போட்டியிடுவோருக்கான வேட்புமனு தாக்கல் வரும் 24-ம் தேதி தொடங்குகிறது. இதில் போட்டி ஏற்படும் நிலையில், ஜூன் 10-ம் தேதி தேர்தல் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

  Published by:Suresh V
  First published:

  Tags: Election, Parliament, Rajya sabha MP