திராவிட கட்சிகளை வீழ்த்த ரஜினிக்கு மேடை அமைக்கிறதா பாஜக!

திராவிட கட்சிகளை வீழ்த்த ரஜினிக்கு மேடை அமைக்கிறதா பாஜக!

நடிகர் ரஜினிகாந்த்

"மாத்துவோம்.. எல்லாத்தையும் மாத்துவோம்" என்ற ரஜினியின் தொனி திராவிட கட்சிகளுக்கு எதிரான போக்காகவே பார்க்கப் படுகின்றது.

  • Share this:
ரஜினி தனது அரசியல் என்ட்ரியின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்டு கவனத்தை ஈர்த்துள்ளார். இதனைத் தொடர்ந்து, தமிழக அரசியலின் எதிர்காலப் போக்கு எப்படி இருக்கும் என்ற விவாதங்கள் சூடுபிடித்துள்ளன. அத்துடன், வரவிருக்கும் சட்டமன்ற தேர்தல் களத்தில் நிகழ இருக்கும் மாற்றங்கள் தொடர்பான கருத்துகளும் அதிகரித்து வருகின்றன.

தற்போது, மாநிலத்தில் ஆளும் கட்சியாக இருக்கும் அதிமுகவும், மத்தியில் ஆளும் பாஜகவும் கூட்டணியில் இருக்கின்றன. இருந்த போதிலும், தமிழகத்தில் திராவிட கட்சிகளை ஆட்சியில் இருந்து அகற்றுவதையே தனது நோக்கமாகக் கொண்டிருக்கின்றது பாஜக. இந்த கருத்தை அக் கட்சி தொடர்ந்து கூறி வருகின்றது.

இதனால், பாஜகவின் எதிர்கால இலக்கு திமுகவுக்கு மட்டும் அன்றி, அதிமுகவுக்குக்கும் சவாலாகவே இருக்கப் போகின்றது. பாஜகவின் இந்த நோக்கத்தை திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் நேரடியாகவே எதிர்த்து பிரசாரம் செய்து வருகின்றனர்.

ஆனால், அதிமுகவின் நிலைமை வேறுபட்டதாக இருக்கின்றது. உறவுடனும் இருக்க வேண்டும்; பாதுகாப்பு கருதி எதிர்ப்புடனும் இருக்க வேண்டும் என்ற இருவேறு நிலையை முறையாகக் கடைபிடிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப் பட்டுள்ளது.

நாடு முழுவதும் விவசாயிகளின் போராட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில், மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டத்திற்கு எதிரான பேச்சு திமுக மேடைகளில் முக்கிய விஷயமாகப் பேசப்படுகின்றன. ஆனால், கூட்டணி தர்மத்தால் அதிமுகவால் இந்த விவகாரம் குறித்து பேசமுடியாமல் போகின்றது. இதனால் பாஜகவுக்கு எதிரான தமிழக மக்களின் மனநிலையை "பாவம் ஒருபக்கம் பழி ஒரு பக்கம்" என்ற வகையில் அதிமுக தாங்கி நிற்க வேண்டியுள்ளது. எனவே, விவசாயிகளின் ஆதரவு திமுகவுக்கு சாதகமாக அமைய வாய்ப்பிருப்பதாக கருதப் படுகிறது.

அதிமுகவின் அரசியல் மேடைகள் தமிழக அரசின் திட்டங்களையும், சாதனைகளையும் எடுத்துரைப்பதாகவும், அதே சமயம் திமுகவை விமர்சிப்பதாகவுமே இருக்கின்றது. இந்தப் போக்கை பாஜக ரசிக்கக் கூடும். இந்நிலையில், பாஜகவுடன் தன்னை இணைத்துப் பேசுவதை ரஜினி மறுத்துப் பேசி வருகிறார். ஆயினும், வெள்ளைச் சட்டைக்குப் பின்னால் காவி மறைந்திருப்பதாகவே அதிகப்படியான விமர்சனங்கள் எழுந்துள்ளன.

பாஜகவின் நீண்டகால திட்டத்தையும், ரஜினி தொடங்க இருக்கும் கட்சியின் திட்டங்களை வகுக்கும் நிலையில், அவருடன் இருக்கும் நிர்வாகிகளையும் கணக்கில் கொள்ள வேண்டியது அவசியம். "மாத்துவோம்.. எல்லாத்தையும் மாத்துவோம்" என்ற ரஜினியின் தொனி திராவிட கட்சிகளுக்கு எதிரான போக்காகவே பார்க்கப் படுகின்றது.

எனவே, வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் ரஜினி கூட்டணி வைப்பதற்கு வாய்ப்பில்லை என்றே கருதப்படுகின்றது. அதே சமையம் அதிமுக-பாஜக கூட்டணி தொடரக் கூடும் என்ற கருத்து பலமாக ஒலிக்கின்றது.

ஆனபோதிலும், பின்னணியில் தனது எதிர்கால நோக்கத்தை நிறைவேற்றும் வகையில், அதிமுக அதிருப்தியாளர்களையும், திராவிட கட்சிகளை எதிர்ப்பவர்களையும் ரஜினியைக் கொண்டு அணி திரட்ட பாஜக விதை போடக் கூடும். இதனை 2026 சட்டமன்ற தேர்தலில் அக்கட்சி அறுவடை செய்ய திட்டமிடலாம். அதிமுக கூட்டணியால் குறுகிய கால அறுவடை; ரஜினியை முன்னிறுத்தி நீண்டகால அறுவடை என பாஜக காய் நகர்த்தக் கூடும்.

திராவிட கட்சிகளை ஓரங்கட்டும் நோக்கில் வியூகம் வகுத்து களமிறங்கியுள்ள பாஜகவின் நேக்கம் நிறைவேறுமா, அல்லது திராவிட கட்சிகள் அதை முறியடிக்குமா என்பதை அறிய பொறுமையுடன் காத்திருப்போம்.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Vijay R
First published: