முதல்வர் வேட்பாளர் ஆவாரா ரஜினிகாந்த்..! இன்று அறிவிக்கப்பட இருக்கும் முக்கிய அறிவிப்பு என்ன?

முதல்வர் வேட்பாளராக வேறு ஒருவரை நிறுத்தினால் ஏற்றுக் கொள்வீர்களா என ரஜினி கேட்டதாக தகவல்.

முதல்வர் வேட்பாளர் ஆவாரா ரஜினிகாந்த்..! இன்று அறிவிக்கப்பட இருக்கும் முக்கிய அறிவிப்பு என்ன?
ரஜினிகாந்த்
  • Share this:
மக்கள் மன்றத்தின் மாவட்டச் செயலாளர்களை ரஜினிகாந்த் மீண்டும் இன்று சந்தித்துப் பேச உள்ளார். தான் முதல்வர் பதவியை வகிக்கப் போவதில்லை என்ற அறிவிப்பை கூட்டத்தில் இன்று ரஜினிகாந்த் வெளியிடுவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரஜினிகாந்த் அரசியல் பிரவேச அறிவிப்புக்குப் பிறகு 2 ஆண்டுகள் கடந்துவிட்டன. அரசியல் கட்சிகளும் அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள ஆயத்தமாகிவிட்டன. ஆனால் ரஜினியின் பேச்சு சினிமா பட டயலாக் போலவே கடந்து விடுமா என்ற அச்சம் மன்ற நிர்வாகிகள் மத்தியில் எழுந்தன. அவற்றுக்கு இன்று நடைபெற இருக்கும் நிர்வாகிகள் கூட்டத்தில் முற்றுப்புள்ளி வைக்கப்படும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

கடந்த 5-ஆம் தேதி சென்னை ராகவேந்திரா மண்டபத்தில், ரஜினி மக்கள் மன்றத்தின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. அப்போது, முதல்வர் வேட்பாளராக வேறு ஒருவரை நிறுத்தினால் ஏற்றுக் கொள்வீர்களா என ரஜினிகாந்த் கேட்டதாகவும், அதற்கு பெரும்பாலான மாவட்டச் செயலாளர்கள் மறுப்பு தெரிவித்து அவரே முதல்வர் வேட்பாளராக வேண்டும் என வலியுறுத்தியதாகவும் கூறப்பட்டது.


இந்நிலையில், மாவட்டச் செயலாளர்களை அவர் இன்று மீண்டும் சந்தித்துப் பேசுகிறார். அப்போது, தான் முதலமைச்சர் ஆகப் போவதில்லை என ரஜினி அறிவிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அடுத்த மாதம் 14-ஆம் தேதி கட்சி தொடங்க ரஜினிகாந்த் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. அதற்கேற்ப, தென்சென்னை மாவட்ட நிர்வாகிகளுடன் ரஜினிகாந்த் இன்று ஆலோசனை நடத்தவுள்ளார்.

கடந்த வாரம் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் உடனான கூட்டத்திற்கு பிறகு, இந்திய குடியரசு கட்சித் தலைவர் செ.கு.தமிழரசன், தமிழருவி மணியன், கராத்தே தியாகராஜன் உள்ளிட்ட நட்பு வட்டாரங்களையும் ரஜினி சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார். தான் முதல்வராக் போவதில்லை என்ற அறிவிப்பை ரஜினி இன்று வெளியிடுவார் என தெரிகிறது.
 
First published: March 12, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading