எந்திரன் படத்தை ரூ.800 கோடிக்கு விற்பதற்கான தந்திரமே அரசியல் கட்சி தொடக்கம்: ரஜினி மீது நீக்கப்பட்ட நிர்வாகிகள் பாய்ச்சல்
ரஜினி
''ரஜினி வீட்டுக்கு மூன்று முறை சென்றுள்ளேன். என்னை கன்னியாகுமரி என்று தான் அழைப்பார். அவரை பற்றி எந்த விமர்சனமும் செய்யவில்லை. அப்படி இருக்க, என்னை ஏன் நீக்கினர் என்று தெரியவில்லை’
Last Updated :
Share this:
ரஜினி, என்னை மட்டும் ஏமாற்றவில்லை. ஒட்டுமொத்த ரசிகர்களையும், மக்களையும் ஏமாற்றியுள்ளார். எந்திரன் படத்தை, 800 கோடி ரூபாய்க்கு விற்க, அவர் காட்டிய தந்திரம்தான் அரசியல் கட்சி துவக்கம் என்ற அறிவிப்பு என்று குமரியில் நீக்கப்பட்ட ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகிகள் கடுமையாக ரஜினியை விமர்சனம் செய்தனர்.
ரஜினி மக்கள் மன்றத்தின் குமரி மாவட்ட துணை செயலர் ஆர்.எஸ்.ராஜன், சிறுபான்மை அணி இணை செயலர் சதீஷ்பாபு, மகளிரணி செயலர் ஈஸ்வரிமதி, ராஜாக்கமங்கலம் ஒன்றிய செயற்குழு உறுப்பினர் அசோக்குமார் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர்.மன்றத்தின் ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையில், கட்டுப்பாட்டை மீறி, ரஜினி பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதால், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுவதாக, நிர்வாகி சுதாகர் தெரிவித்தார்.
இது குறித்து குமரி மாவட்டத் துணைச் செயலர் ஆர்.எஸ். ராஜன் கூறியதாவது:
1986ல் இருந்து ரஜினி ரசிகர் மன்றத்தில் இருக்கிறேன். 2017 டிசம்பர் 31ல் கட்சி துவங்க போவதாக, ரஜினி அறிவித்தார். இதனால், நான் காங்கிரஸ் கட்சியில் வகித்து வந்த, மாநில விவசாய அணி செயலர் பதவியை ராஜினாமா செய்தேன்.தற்போது ரஜினி, என்னை மட்டும் ஏமாற்றவில்லை. ஒட்டுமொத்த ரசிகர்களையும், மக்களையும் ஏமாற்றியுள்ளார். எந்திரன் படத்தை, 800 கோடி ரூபாய்க்கு விற்க, அவர் காட்டிய தந்திரம்தான் அரசியல் கட்சி துவக்கம் என்ற அறிவிப்பு.
உயிரே போனாலும் தமிழக மக்கள் நலன்தான் முக்கியம் எனக் கூறியவர், பொய்யாக மருத்துவமனையில் படுத்து கொண்டார். என்னை நீக்கியதை நான் சும்மா விடப்போவது இல்லை.இது, என் மனதை பாதித்து விட்டது. கடந்த மூன்று ஆண்டுகளில், அவர் பெயரில், 13.50 லட்சம் ரூபாய்க்கு நற்பணிகள் செய்துள்ளேன். மானநஷ்ட ஈடு வழக்கு தொடருவேன்.இவ்வாறு, அவர் கூறினார்.
நீக்கப்பட்ட சிறுபான்மை அணி செயலர் சதீஷ் பாபு கூறும்போது, ராகவேந்தரா மண்டபம், எனக்கு கோவில் போன்றது. சுதாகர் உரிய விளக்கம் தராவிட்டால், அந்த மண்டபத்தில் தீக்குளிப்பேன். என்றார்.
மகளிர் அணி செயலர் ஈஸ்வரிமதி, ''ரஜினி வீட்டுக்கு மூன்று முறை சென்றுள்ளேன். என்னை கன்னியாகுமரி என்று தான் அழைப்பார். அவரை பற்றி எந்த விமர்சனமும் செய்யவில்லை. அப்படி இருக்க, என்னை ஏன் நீக்கினர் என்று தெரியவில்லை’என்று கூறியுள்ளார்.