சீர்காழியில் தமிழ்த் தேசியப் பேரியக்கம் சார்பில் தமிழ்நாட்டில் தொழில், வணிகம், வேலை வாய்ப்பில் தமிழருக்கே முன்னுரிமை அளிக்கப்படவேண்டும் என்பதை வலியுறுத்தி கருத்தரங்கம் நடைபெற்றது. அதில், அந்த இயக்கத்தின் தலைவர் பெ.மணியரசன் கலந்துகொண்டு பேசினார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தமிழ்நாட்டில் தொழில், வணிகம், வேலைவாய்ப்பில் தமிழருக்கே முன்னுரிமை அளிக்கவேண்டும், வெளி மாநிலத்தவருக்கு முன்னுரிமை கொடுக்கக்கூடாது எனும் முழக்கங்களை வலியுறுத்தி கடந்த ஒரு மாத காலமாக ஒத்துழையாமை இயக்கம் மூலம் தமிழகம் முழுவதும் கருத்துகளை துண்டறிக்கை மூலம் பரப்பி வருகிறோம் என்றார்.
சீர்காழி பகுதியில் இவ்வாறு துண்டறிக்கை வழங்க காவல்துறை தடுத்து இயக்க பொறுப்பாளரைக் கைதுசெய்து வழக்கு போடுவதாக மிரட்டுகின்றனர் என்று கூறிய மணியரசன், தமிழர்கள் தமிழ்நாட்டில் தொழில் செய்ய முடியாமல் நொடித்துபோகும் நிலையில் உள்ளனர். மார்வாடிகள், மலையாளிகள் அவர்களுக்குக் கீழ் தொழில்செய்து தங்களது வாழ்வுரிமையை இழந்துவருகின்றனர் என்றார்.
Also read: மினி கிளினிக்குகளில் புதிய மருத்துவர்களை நியமிக்க வேண்டும் - அரசு மருத்துவர்கள் கோரிக்கை
தொடர்ந்து பேசுகையில், தமிழர்களுக்கு ஒரே தாயகம் தமிழகம்தான். இங்கு மார்வாடிகள், மலையாளிகள், குஜராத்திகள் தொழில் செய்யக்கூடாது. இங்கிருந்து வெளியேறவேண்டும். 100ல் 10 விழுக்காடுதான் தமிழகத்தில் அயலார்கள் இருக்கவேண்டும். டெல்லி விவசாயிகள் போராட்டத்தை வரவேற்கிறோம். அதுபோல தமிழகத்திலும் உழவர்களின் உரிமையை மீட்க வரும் 23ம் தேதி தொடர் போராட்டத்தை காவிரி உரிமை மீட்பு இயக்கம் மூலம் நடத்திட உள்ளோம் என்று கூறினார்.
ரஜினி, கமல் ஆகியோர் திரைத்துறையில் இனி சம்பாதிக்க முடியாது என்று ஓய்வுபெற்ற பின்னர் அரசியலுக்கு வருவதாகக் குற்றம்சாட்டிய மணியரசன், தமிழர்களுக்கு நல்லது செய்யவேண்டும் என்ற லட்சியமில்லாமல், தேர்தல் சமயம் மற்ற அரசியல் கட்சிகளுடன் சீட்டு பேரத்தில் ஈடுபடவே அரசியலுக்கு வந்துள்ளனர். பணம் சம்பாதிக்கவும் புகழ், பிரபல்யத்தைத் தக்கவைத்துக்கொள்ளவும் அரசியலைத் தேர்ந்தெடுத்து தாமதமாக வந்துள்ளனர். அவர்கள் கனவு பலிகாது என்று தெரிவித்தார்.
உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்