300 % அபராதம் விதிக்க வாய்ப்பிருந்தும் ரஜினிகாந்துக்கு 100% மட்டும் அபராதம் விதித்த வருமான வரித்துறை...!

ரஜினிகாந்த்

 • News18
 • Last Updated :
 • Share this:
  வரி ஏய்ப்பு விவகாரத்தில் நடிகர் ரஜினிகாந்துக்கு குறைந்தபட்ச அபராதத் தொகையாக 66 லட்சம் ரூபாயை வருமானவரித்துறை நிர்ணயித்துள்ளது தெரியவந்துள்ளது.

  நடிகர் ரஜினிகாந்த் 2002-03 மற்றும் 2004-05ம் ஆண்டு கால கட்டத்தில் வருமான வரியை செலுத்தவில்லை என்று கூறி அவருக்கு 66 லட்சத்து 21 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து வருமானவரித்துறை நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இதனை எதிர்த்து ரஜினிகாந்த் தொடர்ந்த வழக்கை விசாரித்த வருமான வரித்துறை மேல்முறையீட்டு தீர்ப்பாயம்,அந்த நோட்டீஸை ரத்துசெய்து உத்தரவிட்டது.

  இந்த உத்தரவை எதிர்த்து வருமான வரித்துறை தரப்பில் 2014ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. சுமார் ஆறு ஆண்டுகாலம் இந்த வழக்கு நிலுவையில் இருந்து வந்த நிலையில், வருமானவரித்துறை தங்களது வழக்கை திரும்பப் பெறுவதாக கூறியதால் அந்த வழக்கை நீதிமன்றம் முடித்து வைத்தது.

  அப்போது, ஒரு கோடி ரூபாய்க்கும் குறைவான அபராதத் தொகையை கொண்ட வழக்குகளை இனி தொடர்வதில்லை என்று முடிவெடுத்திருப்பதாகவும், அந்த வகையில் ரஜினிகாந்த் மீதான வழக்கை திரும்பப் பெறுவதாகவும் வருமானவரித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

  இந்நிலையில், ரஜினிகாந்துக்கு வருமான வரியை மறைத்த விவகாரத்தில் அதிகபட்சமாக 300 சதவீதம் அபராதம் விதிக்க வாய்ப்பிருந்தும் கூட அதிகாரிகள் குறைந்தபட்சமாக 100 சதவீதம். அதாவது 66 லட்சத்து 21 ஆயிரம் ரூபாய் மட்டும் அபராதம் விதிக்க முடிவு செய்திருப்பது தெரியவந்துள்ளது. இதனடிப்படையிலேயே, அவருக்கு ஒரு கோடி ரூபாய்க்கும் குறைவான அபராதம் என்பதால் வருமானவரித்துறை தனது வழக்கை வாபஸ் பெற்றுள்ளது. அதிகபட்சமாக 300 சதவீதம் என அபராதம் விதிக்கப்பட்டிருந்தால், ரஜினிகாந்த் ஒரு கோடியே 98 லட்சம் ரூபாயை அபராதமாக செலுத்த நேரிட்டிருக்கும்.

   
  Published by:Sankar
  First published: