ரோபோ சின்னம் வாங்கியும் தேர்தலுக்கு குட் பை சொன்ன அர்ஜூனமூர்த்தி

ரோபோ சின்னம் வாங்கியும் தேர்தலுக்கு குட் பை சொன்ன அர்ஜூனமூர்த்தி

ரஜினிகாந்த் உடன் அர்ஜூனமூர்த்தி

ரஜினிகாந்தின் நண்பர் அர்ஜூனமூர்த்தியின் இந்திய மக்கள் முன்னேற்ற கட்சி வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடவில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

  • Share this:
    ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவேன் என்று அறிவித்த போது பாஜகவில் இருந்து விலகிய அர்ஜூனமூர்த்தி ரஜினி தொடங்க இருந்த அரசியல் கட்சியின் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். பின்னர் ரஜினிகாந்த் அரசியலுக்கு குட் பை சொல்லிவிட்டதால் இந்திய மக்கள் முன்னேற்ற கட்சி என்ற கட்சியைத் தொடங்கிய அர்ஜூனமூர்த்தி அக்கட்சியின் சின்னமாக ரோபோவையும் அறிவித்திருந்தார். மேலும் தேர்தல் அறிக்கையையும் அவர் வெளியிட்டார்.

    இந்நிலையில் தற்போது இந்திய மக்கள் முன்னேற்ற கட்சி வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடவில்லை என்று அறிக்கை வாயிலாக தெரிவித்துள்ளார்.

    அந்த அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது, “தமிழக அரசியலில் ஒரு மாற்றத்தின் அவரசியமும், நம் தமிழ் மக்களுக்கு அர்ப்பணிப்புடன் சேவை செய்வதற்கு ஒரு முற்போக்கான மற்றும் நேர்மையான அரசியல் கட்சியின் வலுவான தேவையும் தான் ஒரு புதிய அரசியல் கட்சியான நமது இந்திய மக்கள் முன்னேற்றக் கட்சி உருவாவதற்கு காரணமாக அமைந்தது.

    பிப்ரவரி 26, 2021-ம் தேதி தமிழக சட்டசபை தேர்தலுக்கான அட்டவணையை தேர்தல் ஆணையம் அறிவித்த ஒரு நாளைக்குப் பிறகு பிப்ரவரி 27-ம் தேதுஇ இந்திய மக்கள் முன்னேற்றக் கட்சியின் தொடக்கவிழா நடைபெற்றது. ஆரம்பகட்ட முயற்சியாக வரும் 2021 தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் பங்கேற்க வேண்டும் என்ற திட்டமும் கட்சிக்கு இருந்தது.

    கால அவகாசம் போதாமையா, நேரத்திற்கு எதிரான ஒரு பந்தயத்தில் நாம் இருந்தோம். இருந்தும் 2021 மார்ச் 9-ம் தேதி எங்கள் புதுமையான, மிக்க நம்பிக்கை அளிக்கும் சின்னமான ரோபோட் என்ற எந்திரன் மற்றும் எங்கள் புரட்சிகரமான எண்ணங்களைக் கொண்ட தேர்தல் அறிக்கையை வெளியிட்ட போது, பொதுமக்கள் மற்றும் ஊடகங்கள் மிகுந்த உற்சாகத்துடனும் பாராட்டுதலுடனும் வரவேற்றன.

    அடுத்த சில நாட்களிலேயே எங்கள் இ.ம.மு.கட்சி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பல்வேறு நலன் மற்றும் மேம்பாட்டு திட்டங்களை மற்ற முன்னணி அரசியல் கட்சிகள் தமது தேர்தல் வாக்குறுதிகளில் உள்ளடக்கி வெளியிட்டுள்ளன. தமிழகத்தின் சிறந்த நலனுக்காக எங்கள் புதுமையான மற்றும் புரட்சிகரமான தேர்தல் அறிககியை அதன் சாராம்சமான கருத்துகளை வழிமொழிந்ததை நாங்கள் மனமாற பாராட்டுகிறோம்.

    ஆனால் உண்மை என்னவென்றால் காலத்திற்கு எதிரான ஒரு பந்தயத்தில் நாம் களமிறக்கப்பட்டுள்ளோம். எங்கள் சத்தியம், சமத்துவம் மற்றும் சமர்பணம் என்ற கொள்கைகள் தான் எமது அனைத்து பணிகளுக்கும் - செயல்முறைகளுக்கும் வழிகாட்டுகின்றன. அனைத்து தொகுதிகளுக்கும் அலைமோதும் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்களிலிருந்து வேட்பாளர்களை தரமறிந்து தேர்வு செய்தல், தேவையான மற்ற வளங்கள் சேகரிப்பு மற்றும் சீரிய நிர்வாகம், அனைத்து தொகுதிகளிலும் ரோபோட் சின்னத்திற்கான தொழில்நுட்ப வரிசைப்படுத்துதல், எடுத்துச் செல்வது, மாநிலம் முழுவதும் திட்டமிட்டபடி விரிவான களப்பிரசாரம் செய்தல் போன்ற அனைத்து செயல்பாடுகளும் இந்த குறுகிய காலத்தில் முழுமையான தரத்தில் கையாளுவதற்கு நமக்கு இடம் தரவில்லை என்பதே உண்மை.

    இந்த சூழ்நிலையில் ஏப்ரல் 6, 2021-ம் தேதி நடைபெறவிருக்கும் தற்போதைய தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் எங்கள் கட்சியின் சார்பாக வேட்பாளர்களை நிறுத்தி பங்கேற்க வேண்டாம் என்று இந்திய மக்கள் முன்னேற்றக் கட்சி முடிவு செய்துள்ளது.

    நாங்கள் தொடர்ந்து எங்கள் கொள்கையின் அடிப்படையில் களபலத்தை வளர்த்துக் கொள்வோம். மேலும் தமிழ்நாட்டு அரசியலில் ஒரு மாற்று சக்தியாக இருப்பதற்கான எங்கள் பணியை வலுப்படுத்துவோம். அனைவரின் ஆதரவோடு சற்றும் தொய்வில்லாமல் நமது மாநிலத்திற்கும் நாட்டிற்கும் சத்தியம், சமத்துவம் மற்றும் சமர்பணம் ஆகிய எங்கள் கொள்கையின் அடிப்படையில் தொடர்ந்து சேவை செய்வோம்” இவ்வாறு இந்திய மக்கள் முன்னேற்றக் கட்சியின் தலைவர் அர்ஜூனமூர்த்தி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
    Published by:Sheik Hanifah
    First published: