முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான மோசடி வழக்கில் அடுத்த திருப்பம் ஏற்பட்டுள்ளது. அவருக்கு சொந்தமான 6 வங்கிக் கணக்குகளை முடக்கியுள்ள காவல்துறை, அடுத்த நெருக்கடியை ராஜேந்திர பாலாஜிக்கு கொடுத்துள்ளனர்.
ஆவின் உள்ளிட்ட அரசுத் துறைகளில் வேலை வாங்கித் தருவதாக 3 கோடி ரூபாய் வரை பெற்றுக் கொண்டு மோசடி செய்து விட்டார் என விஜய நல்லதம்பி என்பவர் ராஜேந்திர பாலாஜி, அவரது தனிச் செயலாளர்கள், பாபுராஜ், பலராமன், முத்துப்பாண்டியன் ஆகியோர் மீது புகார் அளித்திருந்தார்.
புகாரின் மீதான விசாரணையில் முகாந்திரம் இருந்ததால், 4 பேர் மீதும் விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் முன்ஜாமின் கோரி ராஜேந்திர பாலாஜி தாக்கல் செய்து மனு மீதான விசாரணை டிசம்பர் 17ம் தேதி, சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்தது. அன்று தான், விருதுநகரில், திமுக அரசைக் கண்டித்து அதிமுக சார்பில் கண்டனப் பொதுக்கூட்டமும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
திருத்தங்கலில் உள்ள தனது வீட்டில் இருந்து காலை 10 மணிக்கு ஆதரவாளர்கள் பல கார்களில் பின்தொடர தனது காரில் விருதுநகருக்குப் புறப்பட்டார். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று மைக்கைப் பிடித்த நேரத்தில், அவரது முன்ஜாமின் மனு உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்ட தகவல் கிடைத்துள்ளது. சாதாரணமாக மேடையில் ஏறி மைக்கைப் பிடித்தால் மணிக்கணக்கில் பேசக் கூடிய ராஜேந்திர பாலாஜி, இந்தத் தகவலைக் கேட்ட உடன், 15 நிமிடங்களில் பேச்சை முடித்து விட்டார்.
எப்போதும் மூன்று நான்கு கார்களில் ஆதரவாளர்களுடன் செல்லும் அவர், அன்று பேச்சை முடித்து விட்டுத் தனது காரில், தனியாக மதுரை நோக்கிப் புறப்பட்டதாகக் கூறப்படுகிறது. மதுரை நான்கு வழிச் சாலையில் திருமங்கலம் சுங்கச் சாவடி செல்லாமல், கள்ளிக்குடியில் இருந்து வாகனத்தை காட்டுப் பகுதி வழியாக திருப்பிச் சென்றதாக போலீசார் கூறுகின்றனர்.
காட்டுப் பகுதியில் பாதி வழியில் இறங்கிய ராஜேந்திர பாலாஜி, தனது வாகனத்தை வீட்டில் விட்டு விடும்படி ஓட்டுநரிடம் கூறி அனுப்பி விட்டார்.
இதையும் படிங்க : Rajendra Balaji : தேடப்பட்டு வரும் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி எங்கே இருக்கிறார்?
அங்கிருந்து வேறொரு சிறிய காரில், தென்காசி, செங்கோட்டை வழியாக கேரளாவிற்குச் சென்று தலைமறைவாகி விட்டதாக காவல்துறையில் ஒரு தரப்பினர் கூறுகின்றனர்.ஆனால், அவர் மதுரையில் இருந்து திருச்சி, சேலம் ஓசூர் வழியாக பெங்களூருவிற்கு சென்று தலைமறைவாகி விட்டார் என இன்னொரு தரப்பு காவல்துறையினர் கூறுகின்றனர்.
இதையும் படிங்க : ராஜேந்திர பாலாஜி வெளிநாடு தப்பி செல்வதை தடுக்க லுக் அவுட் நோட்டீஸ்?
மேலும் விருதுநகர் ஆர்ப்பாட்டத்திற்குப் பின்னர் இதுவரை தனது செல்போனை அவர் பயன்படுத்தாததால், செல்போன் சிக்னல் வழியாகவும் ஆய்வு செய்து கண்டுபிடிப்பதில் போலீசாருக்குப் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அவருடன் இருப்பவர்கள் என யூகிக்கப்படுபவர்கள், அவரது ஆதரவாளர்கள் என 600 பேரின் செல்போன் சிக்னல்களைப் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். விமானம் மூலம் இந்தியாவிற்குள் ராஜேந்திர பாலாஜி எங்கும் தப்பிச் செல்லவில்லை என்பதையும் போலீசார் உறுதிப்படுத்திவிட்டதாகக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க : ராஜேந்திர பாலாஜி சினிமா பாணியில் கார்களில் மாறி மாறிச் சென்று தப்பித்தார் - போலீசார் தகவல்
தற்போது வரையில் அவரைப் பிடிப்பதற்காக 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. 9 நாட்கள் ஆகியும் பிடிபடாமல் போலீசாருக்கு அவர் போக்கு காட்டி வருகிறார். இந்நிலையில் அவரது 6 வங்கி கணக்குகளை போலீசார் முடக்கியுள்ளனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Rajendra balaji