80 நாட்களுக்கு பிறகு திறக்கப்பட்டது ராஜராஜசோழனின் பெரிய கோயில்...

பெரிய கோயில்

பக்தர்கள் சமூக இடைவெளியைக் கடைபிடிக்கும் வகையில் 2 அடி இடைவெளி விட்டு வட்டம் வரையப்பட்டுள்ளது. பக்தர்கள் வந்து செல்வதற்கு வசதியாக 2 வழிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

  • Share this:
    கொரோனா பரவல் காரணமாக தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள பாரம்பரிய சின்னங்கள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டதையடுத்து, தஞ்சாவூர் பெரியகோயில் ஏப்ரல் 16ம் தேதி முதல் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. ஆனால், கோயிலுக்குள் வழக்கம்போல தினந்தோறும் நான்கு கால பூஜைகள், விழாக்கள் நடைபெற்று வந்தன.

    இந்நிலையில், பொதுமுடக்கத்தில் தளர்வுகளைத் தமிழக அரசு அறிவித்துள்ளதால், கோயில்கள் இன்று திறக்கப்படுகின்றன. இதன்படி, தஞ்சாவூர் பெரியகோயிலும் இன்று காலை 6 மணிக்கு திறக்கப்பட்டு முதல் கால பூஜை நடைபெற்றது. இக்கோயிலிலுள்ள பெருவுடையார் சன்னதி, பெரியநாயகி அம்மன் சன்னதி மற்றும் வாராஹி அம்மன் சன்னதி, விநாயகர், தட்சிணாமூர்த்தி, சண்டிகேசுவரர், கருவூரார், முருகன் சன்னதிகள் ஆகியவற்றில் பக்தர்கள் தரிசனம் செய்ய வசதியாகச் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    மேலும் பக்தர்கள் சமூக இடைவெளியைக் கடைபிடிக்கும் வகையில் 2 அடி இடைவெளி விட்டு வட்டம் வரையப்பட்டுள்ளது. பக்தர்கள் வந்து செல்வதற்கு வசதியாக 2 வழிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.



    கோயிலுக்குள் வரும் பக்தர்கள் அனைவருக்கும் நுழைவுவாயிலில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு வெப்பமானி மூலம் பரிசோதனையும் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முகக்கவசம் அணிந்து வரும் பக்தர்கள் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்படுவர் 65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அனுமதி கிடையாது. எனவும் கோயில் அலுவலர்கள் தெரிவித்தனர்.இதேபோல, மாவட்டத்திலுள்ள மற்ற கோயில்களும், இன்று முதல் திறக்கப்பட்டது.



    55 நாட்களுக்கு பிறகு உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயில், கோவை மாவட்டத்தில் உள்ள பேரூர் பட்டீஸ்வரர் திருக்கோயில் உட்பட மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து வழிபாட்டு தலங்களும் அதிகாலையில் திறக்கப்பட்டன. தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் தேங்காய், பழம் போன்ற பூஜை பொருட்களை கொண்டு வரக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகாலையிலேயே கோயில்களுக்கு வந்த பக்தர்கள், நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sankaravadivoo G
    First published: