• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • சென்னை: மழை நீர் வடிகால் திட்டப்பணி ஆவணங்களை கேட்ட 2 பேர் திடீரென கைது

சென்னை: மழை நீர் வடிகால் திட்டப்பணி ஆவணங்களை கேட்ட 2 பேர் திடீரென கைது

குமார், பாலசந்தர்

குமார், பாலசந்தர்

இருவர் திடீர் கைது செய்யப்பட என்ன காரணம்? என சிட்லப்பாக்கம் காவல் ஆய்வாளர் கிருஷ்ணனிடம் கேட்டபோது, புகார் கொடுக்கப்பட்டது அதனால் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என விளக்கம் அளித்தார். சிவக்குமார் கொடுத்த புகார் குறித்து விளக்கம் அளிக்க காவல் ஆய்வாளர் மறுத்துவிட்டார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
    மழைநீர் வடிகால் திட்டப்பணிகள் குறித்த ஆவணங்களை கேட்ட 2 சமூக ஆர்வலர்களை சென்னை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளதற்கு கடும் கண்டனம் எழுந்துள்ளது. 

    சென்னையை அடுத்த சிட்லப்பாக்கம் சேதுநாராயணன் தெருவில் நடந்து வரும் மழை நீர் வடிகால் திட்டம் குறித்த ஆவணங்களை கேட்ட இவர்கள் தற்போது கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அதே பகுதியைச் சேர்ந்த பாலசந்தர், குமார் ஆகியோரை ஞாயிறு அதிகாலை திடீரென போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்துள்ளனர்.

    பருவமழை தொடங்கும் நிலையில் அவசர கதியில் சிட்லப்பாக்கம் சேதுநாராயணன் தெருவில் மழைநீர் வடிகால் திட்டப்பணிகள் நடந்து வருகின்றன. இந்த மழைநீர் வடிகால் திட்டப் பணிகளை சிட்லப்பாக்கம் பஞ்சாயத்து உதவி பொறியாளர் வெங்கடேசன் மேற்பார்வை செய்துள்ளார். அப்போது, வடிகால் திட்டப் பணிகளில் முறைகேடு நடந்துள்ளதாக பாலசந்தர், குமார் உள்ளிட்டோர் அங்கிருந்த உதவி பொறியாளர் வெங்கடேசனிடம் முறையிட்டுள்ளனர்.

    மேலும் நடந்துவரும் பணிக்கான ஆணையின் நகலை தருமாறு, உதவிப்பொறியாளர் வெங்கடேசனிடம் அப்பகுதிவாசிகள் கேட்டதையடுத்து இரு தரப்புக்குமிடையே வாக்குவாதம் நடந்ததாக கூறப்படுகிறது. அப்போது அப்பகுதியை சேர்ந்த சிவக்குமார், அங்கு நடந்த திட்டப்பணிகளை தனது செல்போனில் படம்பிடிக்க முயற்சித்தபோது, வெங்கடேசன் அவரது செல்போனை பறித்துள்ளார். அதனைத் தொடர்ந்து, உதவி பொறியாளர் தனது செல்போனை பறித்ததாகவும், தாக்கியதாகவும் சிட்லப்பாக்கம் காவல் நிலையத்தில் சிவக்குமார் புகார் அளித்தார். ஆனால், காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என்று சொல்லப்படுகிறது.

    ஆனால், சில மணி நேரங்களுக்குப் பிறகு பாலசந்தர் மற்றும் குமாரை சிட்லப்பாக்கம் ஆய்வாளர் கிருஷ்ணன் அழைத்துச் சென்று  விசாரணைக்குப் பின் கைது செய்துள்ளார். அரசு அதிகாரியை பணி செய்யவிடாமல் தடுத்தது, கூட்டுச்சதி உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் கைதான இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும், சுனில் என்பவர் வெளிநாட்டில் உள்ள நிலையில், அவரை போலீசார் குற்றவாளியாக வழக்கில் சேர்த்துள்ளனர். இதனிடையே, இந்த கைது சம்பவத்தை பலரும் கண்டித்துள்ளனர்.

    இருவர் திடீரென கைதாக என்ன காரணம்? என சிட்லப்பாக்கம் காவல் ஆய்வாளர் கிருஷ்ணனிடம் கேட்டபோது, புகார் கொடுக்கப்பட்டதன்பேரில் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என விளக்கம் அளித்தார். சிவகுமார் கொடுத்த புகார் குறித்து விளக்கம் அளிக்க காவல் ஆய்வாளர் மறுத்துவிட்டார். மேலும் சிட்லப்பாக்கத்தில் நடந்து வரும் மழைநீர்வடிகால் பணி தொடர்பாக விளக்கம் அளித்துள்ள அறப்போர் இயக்கம், 5 கோடி ரூபாய் திட்ட மதிப்பீடு பணி ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்துள்ளதாக தெரிவித்துள்ளது.

    இந்த குற்றச்சாட்டு குறித்து சிட்லப்பாக்கம் உதவி பொறியாளர் வெங்கடேசனிடம் விளக்கம் கேட்டதற்கு, ’மணல் தடுப்பைக் கட்டும் பணிக்காக ஆணை பெறப்பட்டு பணிகள் நடந்து வந்தது உண்மை. ஆனால், கான்கிரீட் தடுப்பு கட்டும் பணிகளுக்குக்கான பணி ஆணை திங்கள் அன்று தான் வழங்கப்பட்டுள்ளது. இதில் எந்த முறைகேடும் நடக்கவில்லை’ எனத் தெரிவித்துள்ளார்.

    Also see...

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vaijayanthi S
    First published: