ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

கரூரில் தமிழுக்கு பதிலாக சம்ஸ்கிருத எழுத்து - தமிழ் ஆர்வலர்கள் எதிர்ப்பால் பின்வாங்கிய ரயில்வே நிர்வாகம்

கரூரில் தமிழுக்கு பதிலாக சம்ஸ்கிருத எழுத்து - தமிழ் ஆர்வலர்கள் எதிர்ப்பால் பின்வாங்கிய ரயில்வே நிர்வாகம்

மகாதானபுரம் ரயில்வே நிலையம்

மகாதானபுரம் ரயில்வே நிலையம்

கரூர் மாவட்டத்திலுள்ள மகாதானபுர ரயில் நிலையத்தில் தமிழ் எழுத்துக்கு பதிலாக சம்ஸ்கிருத எழுத்து பயன்படுத்தப்பட்டதால் தமிழ் ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

மத்தியில் பா.ஜ.க தலைமையிலான அரசு பொறுப்பேற்றதிலிருந்து தொடர்ச்சியாக இந்தி திணிப்பை மேற்கொள்வதாக குற்றச்சாட்டுகள் எழுந்துவருகின்றன. தமிழகத்திலும் இதற்கு தொடர் எதிர்ப்புகள் கிளம்பிவருகின்றன. 2019-ம் ஆண்டு இந்தி நிவாஸ் தினத்தை முன்னிட்டு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ட்விட் ஒன்றை பதிவிட்டார். அந்த ட்வீட்டில், ‘இந்தியா வெவ்வேறு மொழிகளைக் கொண்ட நாடு. ஒவ்வொரு மொழிக்கும் தனிப்பட்ட முக்கியத்துவம் உள்ளது. ஆனால், நமது நாடு முழுவதற்கும் ஒரே மொழி இருப்பதும் அவசியமாகும். அதுவே உலகளவில் இந்தியாவின் அடையாளமாக இருக்கும். இன்று ஒரு மொழியால் நாட்டை ஒற்றுமையாக்க முடியும் என்றால், அது அதிகம் பேசப்படும் இந்தி மொழியால்தான் முடியும். இன்று இந்தி தினத்தை முன்னிட்டு நாட்டின் அனைத்துக் குடிமக்களிடமும் நான் ஒன்று கேட்டுக்கொள்கிறேன். நாம் நமது தாய்மொழியின் பயன்பாட்டை அதிகரிக்க வேண்டும்.

மேலும், இந்தியையும் பயன்படுத்த வேண்டும். மகாத்மா காந்தி, சர்தார் படேல் ஆகியோரின் ஒரு நாடு, ஒரு மொழி கனவை நனவாக்குவோம். அதற்கான உங்கள் பங்களிப்பையும் இந்த இந்தி நாளில் செய்யுங்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார். அவருடைய ட்விட்டர் பதிவுக்கு நாடு முழுவதிலிலுமிருந்து கடும் கண்டனங்கள் எழுந்தன. தமிழகத்தில் தி.மு.க சார்பில் போராட்டம் அறிவிக்கப்பட்டது. பின்னர், இந்த விவகாரம் தொடர்பாக தமிழக ஆளுநர் பன்வாரி லால் புரோஹித் மு.க.ஸ்டாலின் சந்தித்து விளக்கமளித்தார்.

அதற்கு முன்னதாக, 201-ம் ஆண்டு ஜூன் மாதம், ‘தமிழகத்தில் ரயில்வேயில் பணிபுரியும் ஊழியர்கள் அலுவல் தொடர்பாக பேசும்போது தமிழில் பேசக் கூடாது. இந்தி அல்லது ஆங்கிலத்தில் மட்டுமே பேசவேண்டும் என்று தெற்கு ரயில்வே உத்தரவு பிறப்பித்தது. அந்த உத்தரவுக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு வந்தநிலையில் அந்த உத்தரவை ரயில்வே திரும்பப் பெற்றது. மேலும், மத்திய அரசு சார்பில் தமிழகத்துக்கு அனுப்பப்படும் கடிதங்களில் வெறும் இந்தி மொழியில் மட்டுமே இருக்கின்றன. அதற்கும் தொடர்ச்சியான எதிர்ப்புகள் எழுந்துவருகின்றன. மதுரை மாவட்ட கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி எழுப்பிய கேள்விகளுக்கு இந்தியில் மட்டும் பதிலளிக்கப்பட்டதால் அவர் கடும் எதிர்ப்பை பதிவு செய்தார்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் அம்மா உயிரிழந்ததற்கு, அமித்ஷா அனுப்பிய இரங்கல் கடிதம் முழுவதும் இந்தியில் மட்டுமே இருந்தது கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. அதேபோல, கடந்த ஆண்டு சென்னை விமான நிலையத்திலிருந்து கனிமொழி வெளியே வரும் பணியிலிருந்து துணை ராணுவப்படை வீரர், ‘இந்தி தெரியவில்லை. நீங்கள் இந்தியரா’ என்று கேள்வி எழுப்பினார். இந்த விவகாரமும் தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதுபோன்ற தொடர்ச்சியான நிகழ்வுகளின் காரணமாக, ‘இந்தி தெரியாது போடா’ என்ற டீசர்ட்டை தமிழ் திரைப் பிரபலங்கள் அணிந்து போராட்டத்தை முன்னெடுத்தனர்.

இந்தநிலையில், கரூர் மாவட்டம் குளித்தலை அருகே மகாதானபுரம் ரயில் நிலையத்தின் பெயரிலுள்ள க என்ற தமிழ் எழுத்திற்கு பதிலாக சமஸ்கிருத எழுத்தானா ஹ என்ற எழுத்து இடம் பெற்றிருந்தது. நீண்ட காலமாக மகாதானபுரம் என்றிருந்த ரயில் நிலையத்தின் பெயர் பலகை மஹாதானபுரம் என்று மாற்றியது பொதுமக்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. பொதுமக்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்களின் எதிப்பை அடுத்து பெயர் பலகையில் எழுத்து மாற்றபட்டுள்ளது. மத்திய அரசு மறைமுகமாக சமஸ்கிருத மொழியினை தமிழகத்தில் திணிக்கிறதா என தமிழ் ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

Published by:Karthick S
First published:

Tags: Hindi, Karur, Railway