நியூஸ் 18 செய்தி எதிரொலியாக ஆரணி அருகே இரட்டிப்பு தொகை பணம் தருவதாக கூறிய ஆரூத்ரா கோல்டு நிறுவனத்தில் பொருளாதார குற்றபிரிவு போலீசார் தொடர்ந்து சுமார் 11 மணி நேரம் நடத்திய சோதனைக்கு பிறகு, ஆரூத்ரா கோல்டு கம்பெனிக்கு சீல் வைத்து நடவடிக்கை மேற்கொண்டனர்.
ஆருத்ரா கோல்டு நிறுவனத்திற்கு தமிழ்நாடு முழுவதும் 20-க்கும் மேற்பட்ட கிளைகள் உள்ளன. இதில், ஒரு லட்சம் முதலீட்டிற்கு 25 ஆயிரம் ரூபாய் வட்டி வழங்கப்படும் என்று சென்னையில் விளம்பரம் வெளியிடப்பட்டது. இதனை நம்பி பலரும் முதலீடு செய்தனர். இதன் மூலம் மோசடி நடைபெற்றதாகக் கூறி, சென்னை அமைந்தக்கரையில் உள்ள ஆருத்ரா கோல்டு நிறுவனத்தில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் நேற்று திடீரென சோதனையில் ஈடுபட்டனர். இதே போன்று வில்லிவாக்கம், ஆவடியில் உள்ள கிளைகள் மற்றும் நிறுவன இயக்குநர்களில் ஒருவரான ராஜசேகர் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே சேவூர் கிராமத்தில் உள்ள தனியார் லாட்ஜ் வளாகத்தில் புதியதாக ஆரூத்ரா கோல்டு கம்பெனி கடந்த 6ஆம் தேதி எந்த ஒரு விளம்பரமும் இன்றி திறக்கபட்டன. மேலும் இந்த ஆரூத்ரா கோல்டு நிறுவனம் ரூ.1,00,000 டெபாசிட் செய்தால் மாதம் ரூ.36,000 வட்டியாகவும் தொடர்ந்து 10 மாதம் வழங்கபடுவதாகவும் அதனையடுத்து டெபாசிட் செய்த பணத்தை கொண்ட ஆவணம் புதுப்பித்து தரப்படும் என்று கவர்ச்சிகரமான திட்டமாக பொதுமக்களுக்கு ஆரூத்ரா நிறுவனம் அறிவித்தது.
சென்னை அமைந்தகரையை தலையிடமாக கொண்டு விளங்கும் ஆரூத்ரா கோல்டு கம்பெனி வில்லிவாக்கம், அண்ணாநகர், ஆவடி ராணிப்பேட்டை, வேலூர், செய்யார், பெருங்களத்தூர், திருச்சி, மதுரை மற்றும் திருநெல்வேலி உள்ளிட்ட சுமார் 20 இடங்களில் கிளைகள் உள்ளன.
இந்நிலையில், கடந்த 12ஆம் தேதி நியூஸ் 18 இது குறித்து செய்தி வெளியிட்டிருந்தது. இதன் எதிரொலியாக தமிழகம் முழுவதும் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து சோதனை நடத்தினர். இந்நிலையில் நேற்று சேவூர் கிராமத்தில் உள்ள ஆரூத்ரா கோல்டு கம்பெனியில் ராணிப்பேட்டை மாவட்ட பொருளாதார குற்றபிரிவு டி.எஸ்.பி பழனி தலைமையில் 6 பேர் கொண்ட குழுவினர் சுமார் 11 மணி நேரத்திற்கும் மேலாக ஆய்வு நடத்தி சீல் வைத்தனர்.
மேலும் இதே போன்று திருவண்ணாமலை மாவட்டம் செய்யார் ஆதிகேசவ பெருமாள் கோவில் தெருவில் இயங்கி வந்த அந்த நிறுவனத்தை பூட்டி நோட்டீஸ் ஒட்டப்பட்டது. இதே போன்று திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த விளங்காடு கிராமத்தில் ஆருத்ரா நிறுவனத்தின் உரிமையாளர் ராஜசேகர் அவர்களது உறவினர் மணிகண்டன் வீட்டில் 25,000 ரொக்கப்பணம் மற்றும் 312 கிராம் தங்க நகை 650 கிராம் வெள்ளி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
பின்னர், பொருளாதார குற்ற பிரிவு டி.எஸ்.பி. பழனி செய்தியாளர்களிடம் பேசுகையில், ஆரூத்ரா கோல்டு நிறுவனம் ஆரணி கிளை தொடங்கி 18நாட்களில் 107 வாடிக்கையாளர்கள் சுமார் 1கோடியே 10லட்சம் ரூபாய் முதலீடாக செலுத்தி உள்ளனர். போதிய ஆவணங்கள் ஆரூத்ரா கோல்டு நிறுவனத்தில் ஏதும் இல்லை ஆகையால் பொதுமக்கள் கவர்ச்சிகரமான திட்டத்தில் பணம் செலுத்தி பொதுமக்கள் ஏமாற வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார்.
இது குறித்து 6 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து சம்மந்தபட்டவர்களை விரைவில் கைது செய்யபடும் என்றும் பணம் கட்டி ஏமாந்த வாடிக்கையாளர்கள் சென்னை பொருளாதார குற்றபிரிவு அலுவலகத்தில் புகார் அளிக்கலாம் என்று பொருளாதார குற்றபிரிவு டி.எஸ்.பி பழனி தெரிவித்தார்.
Must Read : சாப்பிடும் போது தொண்டையில் சிக்கிய உணவு.. காவலரின் உயிரைக் காப்பாற்றிய எஸ்.ஐ
இதேபோன்று, ராணிப்பேட்டை மாவட்டம் நவல்பூரில் உள்ள ஆருத்ரா கோல்டு நிறுவனத்தில் வணிக குற்றப்பிரிவு போலீசார் திடீர் ஆய்வு மேற்கொண்டு, பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்களை கைப்பற்றினர். மேலும், நிர்வாகத்தினர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் உள்ள நிறுவனத்தில், 10 மணி நேரத்துக்கு மேல் சோதனை மேற்கொண்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் லேப்டாப், பிரிண்டர்கள் மற்றும் முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர்.
செய்தியாளர் - ம.மோகன்ராஜ், ஆரணி. இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.