எம். ஆர். விஜயபாஸ்கர் வீட்டில் நடத்திய ரெய்டில் எதுவும் கைப்பற்றவில்லை என தகவல்

விஜயபாஸ்கர் வீட்டு ரெய்டு

சென்னையில் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் நடத்தப்பட்ட சோதனை முடிவுவந்தது.

  • Share this:
அ.தி.மு.கவில் 2016-2021 ஆம் ஆண்டு காலக்கட்டத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தவர்  எம்.ஆர்.விஜயபாஸ்கர்.  அந்த சமயத்தில் செங்கல்பட்டு முதல் திருச்சி வரை தேசிய நெடுஞ்சாலைகளில் அதிவேகமாக செல்லும் வாகனங்களின் எண்களை கண்காணிக்கவும், வேகக் கட்டுப்பாட்டுக் கருவிகள் ஒளிப்பட்டைகள், பேருந்து உதிரி பாகங்கள் உள்ளிட்டவை பொருத்துவதற்காக 2019ஆம் ஆண்டு டெண்டர் விடப்பட்டபோது 10 முறை அந்த டெண்டரை தள்ளிவைத்து 23 கோடி ரூபாய் மதிப்புள்ள டெண்டரை 900 கோடி ரூபாய்க்கு உயர்த்தியதாக எம்.ஆர் விஜயபாஸ்கர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

மேலும் ஊழல் செய்த பணத்தில் தனது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் பெயரில் கரூர் மற்றும் கரூரைச் சுற்றியுள்ள பகுதிகளில் சாயப்பட்டறைகள், பேருந்து உதிரிபாகம் செய்யும் நிறுவனங்கள் மற்றும் நிலங்கள் வாங்கியிருப்பதாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு அடுக்கடுக்கான புகார்கள் குவிந்தன.

இதனையடுத்து கரூர் லஞ்ச ஒழிப்புதுறைக்கு வந்த புகாரின் அடிப்படையில் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது கடந்த மாதம் சொத்துகுவிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் இன்று காலை முதலே முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீடு, அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.

முன்னாள் அமைச்சருக்கு சொந்தமாக உள்ள வீடு மற்றும் அலுவலகங்களில் இன்று காலை 6 மணி முதல் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தினர். குறிப்பாக கரூர் மாவட்டத்தில் உள்ள விஜயபாஸ்கர் மற்றும் அவரது உறவினர்களுக்குச் சொந்தமான 20 இடங்களிலும், சென்னை ஆர்.ஏ.புரத்தில் உள்ள அவரது வீடு என மொத்தம் 21 இடங்களில் 21 டி.எஸ்.பிக்கள் தலைமையில் 50க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.

சென்னையில் லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி.ராமச்சந்திரன் தலைமையிலான லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அவரது வீட்டில் காலை முதல் சோதனை நடத்தி வந்தனர். சென்னையில் உள்ள அவரது வீட்டில் காலை 6 மணிக்கு ஆரம்பித்த இந்த சோதனையானது மதியம் 3 மணியளவில் முடிவுக்கு வந்தது. சோதனையின் முடிவில் சென்னையில் உள்ள விஜயபாஸ்கர் வீட்டில் இருந்து எந்த பொருளும், ஆவணங்களும் கைப்பற்றபடவில்லை என லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தெரிவித்து சென்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சென்னையில் எம்.ஆர் விஜயபாஸ்கர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்திய தகவல் தெரிந்தவுடன் அதிமுக தொண்டர்கள் மற்றும் எம் ஆர் விஜயபாஸ்கரின் ஆதரவாளர்கள் வீட்டின் முன் குவிந்தனர். பின் சோதனை முடிந்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சென்றவுடன் அவர்களும் கலைந்து சென்றனர்.
Published by:Karthick S
First published: