HOME»NEWS»TAMIL-NADU»rahul gandhi will campaign in tamil nadu skd tami

திறந்தவெளி வாகனத்தில் ராகுல் காந்தி பிரச்சாரம் செய்ய திட்டம்: தேர்தல் களத்துக்கு தயாராகும் காங்கிரஸ்

காங்கிரஸ் போட்டியிடும் அத்தனை தொகுதிகளிலும் இம்முறை கட்டாயம் வெற்றி பெற வேண்டும் என மாவட்ட தலைவர்களுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி அறிவுறுத்தி உள்ளார்.

திறந்தவெளி வாகனத்தில் ராகுல் காந்தி பிரச்சாரம் செய்ய திட்டம்: தேர்தல் களத்துக்கு தயாராகும் காங்கிரஸ்
ராகுல் காந்தி
  • Share this:

தமிழகத்தில் வரும் சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள தமிழ்நாடு காங்கிரஸ் தயராகி வருகிறது. இந்நிலையில் இன்று காலை சென்னை காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி தலைமையில் மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சென்னை மாவட்ட தலைவர்கள் சிவ ராஜசேகரன், திரவியம், ரஞ்சன்குமார் உள்ளிட்ட 72 மாவட்ட தலைவர்கள் பங்கேற்றனர். சமீபத்தில் தமிழக காங்கிரஸ் கமிட்டியில் புதிதாக நியமிக்கப்பட்ட மாவட்ட தலைவர்கள், நிர்வாகிகளும் கூட்டத்தில் பங்கேற்றனர். இதில் மாவட்ட அளவில் காங்கிரஸ் தேர்தலை சந்திக்கும் வியூகம் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட தலைவர்களுக்கு கே.எஸ்.அழகிரி  வழங்கிய முக்கிய அறிவுறுத்தல்:

காங்கிரஸ் கட்சி பலத்திற்கு ஏற்ப தொகுதிகள் பெறப்படும். இப்பணிகளை கட்சி தேசிய தலைமை பார்த்துக்கொள்ளும்.  யாருக்கு வாய்ப்பு கொடுத்தாலும், மற்றவர்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். சிறப்பாக பணியாற்றுபவர்களுக்கு கட்டாயம் வாய்ப்பு வழங்கப்படும்.



புதியதாக நியமிக்கப்பட்ட நிர்வாகிகள், மாவட்ட தலைவர்களும் மாவட்டத்தில் உள்ள அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும். வாய்ப்பு வழங்கப்படவில்லை என உட்கட்சி மோதல், வேறுபாடு இருக்கக்கூடாது.

வெற்றி வாய்ப்பு உள்ள தொகுதிகளில் தீவிரமாக பணிகளை மேற்கொள்ள வேண்டும். போட்டியிடும் அத்தனை தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சி இம்முறை கட்டாயம் வெற்றி பெற வேண்டும். அதற்கு ஏற்ப கட்சியினர் தீவிரமாக உழைக்க வேண்டும்.

கூட்டணி கட்சியினர் போட்டியிடும் தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சியினர் முழுமையாக பணிகளில் ஈடுபட வேண்டும். 234 தொகுதிகளும் காங்கிரஸ் கட்சி போட்டியிடுவதாக நினைத்து உழைக்க வேண்டும்.

பூத் கமிட்டி பணிகளுக்கு அதிக முக்கியத்துவம் தர வேண்டும். வேகமாக பணிகளை முடித்து, பூத் கமிட்டி அளவில் காங்கிரஸ் பலமாக இருக்க வேண்டும்.

இதனைத் தொடர்ந்து மாலை 5 மணிக்கு தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தலைமையில் தேர்தல் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடந்தது. இதில் ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

இக்கூட்டத்தில், சட்டசபை தேர்தலை எதிர்கொள்வது குறித்தும், ராகுல் காந்தியின் தமிழக தேர்தல் சுற்றுப்பயணத்தை சிறப்பாக நடத்துவது குறித்தும்  ஆலோசிக்கப்பட்டது.

தமிழகத்தில் 5 மண்டலங்களாக பிரிந்து, ஒவ்வொரு மண்டலத்திலும் மூன்று மாவட்டங்களில் ராகுல் காந்தி பிரச்சாரம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பொங்கல் பண்டிக்கைக்கு பின், இம்மாத இறுதியில் தமிழகம் வரும் ராகுல், திறந்தவெளி வாகனத்தில் பயணித்து பிரச்சாரம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாகவும்  கூறப்படுகிறது.

முன்னதாக கூட்டத்திற்கு வருகை புரிந்த காங்கிரஸ் மேலிடப்பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ், மாநில தலைவர் கே.எஸ்.அழகிரிக்கு தொண்டர்கள் மேளதாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளித்தனர்.

தொடர்ந்து நாளை காலை மாநில காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் மாநில செயற்குழு உறுப்பினர்கள், மாநில நிர்வாகிகள் கூட்டம் நடக்கிறது. இதில் நிர்வாகிகள் தேர்தலில் எவ்வாறு பணி புரிய வேண்டும் என்பது குறித்து கருத்துக்கள் அறியப்பட்டு, ஆலோசனை வழங்கப்படுகிறது.

மாலையில் மூத்த நிர்வாகி பீட்டர் அல்போன்ஸ் தலைமையில் தமிழ் நாடு காங்கிரஸ் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு கூட்டம் நடக்கிறது. இதில் தேர்தல் அறிக்கை தயாரிப்பு பணிகள் குறித்து ஆலோசிக்கப்படுகிறது.



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Karthick S
First published: