ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முதலமைச்சர் கவனத்திற்கு எடுத்துச் சென்று வருங்காலத்தில் பரிசீலிக்கப்படும் என உணவு மற்றும் உணவுப் பொருட்கள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்தார்.
கோவை - இராமநாதபுரம் 80 அடி சாலைப் பகுதியில் உள்ள ரேஷன் கடையில் மாநில உணவு மற்றும் உணவுப் பொருட்கள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி இன்று நேரில் ஆய்வு செய்தார். ஆய்வின்போது அந்தப் பகுதியைச் சேர்ந்த முரளி என்பவர் அமைச்சர் சக்கரபாணியிடம் ரேஷன் கடையில் பழைய அரிசி போடுவதாகவும் அதை வாங்கினால்தான் புதிய அரிசி போடுவதாகவும் புகார் தெரிவித்தார். இதற்கு இனி இந்த கடையில் புதிய அரிசிதான் போடுவார்கள், பழைய அரிசி போட மாட்டார்கள் என அவருக்கு பதில் அளித்து அமைச்சர் சக்கரபாணி சாமாதானப்படுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சக்கரபாணி, “தமிழர் திருநாளாம் தை பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 2.19 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் உள்ள 19,000 குடும்பங்களுக்கும், ரூ.1000 ரொக்க பணம், பச்சரிசி, முழு கரும்பு உள்ளிட்டவை வழங்கப்படும் எனவும் இதனை முதலமைச்சர் நாளை மறுநாள் சென்னையில் தொடங்கி வைக்க உள்ளார் என்றும் தெரிவித்தார்.
கோவை மாவட்டத்தில் 11 லட்ச குடும்ப அட்டைதாரர்களுக்கு 1404 நியாய விலை கடைகளிலும் இவை வழங்கப்பட இருப்பதாகவும் தெரிவித்தார். பொங்கல் தொகுப்பு பொருட்கள் 100 சதவீதம் தயாராக உள்ளது. கரும்பு 90 சதவீதம் வந்துள்ளது என தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், “கலைஞர் கருணாநிதியின் ஆட்சி காலத்தில் புரதச் சத்துமிக்க உணவுப் பொருட்கள் வழங்க வேண்டும் என சிறப்பு பொது விநியோக திட்டம் தொடங்கப்பட்டு துவரம் பருப்பு, உளுந்தம் பருப்பு, மைதா உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகிறது. அதில் கடந்த ஆட்சியில் இரண்டு பொருட்களை நிறுத்தி விட்டார்கள். ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். தேங்காய் எண்ணெய் வழங்க வேண்டும் என கோவை மாவட்ட ஆட்சியரும் பரிந்துரை செய்துள்ளார். இதனை முதலமைச்சர் கவனத்திற்கு எடுத்துச் சென்று வருங்காலத்தில் பரிசீலிக்கப்படும்” என தெரிவித்தார்.
மேலும், “வயது முதிர்ந்தவர்கள், மாற்றுத்திறனாளிகள், கைரேகை வைத்து ரேசன் பொருட்கள் வாங்க முடியவில்லை. எனவே, கருவிழி பதிவு மூலம் பொருட்கள் வழங்கும் திட்டம் முன்னோட்டமாக சேப்பாக்கம், பெரம்பலூர் ஆகிய 2 இடங்களில் தொடங்கப்பட்டுள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் அதனை செயல்படுத்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. விரைவில் அதற்கான டெண்டர் விடப்பட்டு கைரேகை, கருவிழி மூலம் பொருட்கள் பெறுவது அனைத்து மாவட்டங்களிலும் செயல்படுத்தப்படும்” என தெரிவித்தார்.
இதனையடுத்து கோவை தனியார் கல்லூரியில் நடைபெற்ற சிறுதானிய கண்காட்சியில் பங்கேற்று பின்னர், மாநாட்டில் பேசிய அமைச்சர் சக்கரபாணி, வரும் ஆண்டுகளில் நியாயவிலை கடைகளில் அரிசியை படிப்படியாக குறைத்து சிறுதானியங்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். முதற்கட்டமாக இந்த ஆண்டு முதல் தர்மபுரியிலும் நீலகிரியிலும் அரிசிக்கு பதிலாக 2 கிலோ ராகி வழங்க முடிவெடுத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Minister, Ration Shop, Tamilnadu